Saturday, October 24, 2015

இலங்கை போர்க்குற்ற விசாரணை: ஐ.நா. தீர்மானத்தை நிராகரிக்க முடியாது - சிறிசேனா உறுதி


இலங்கை போர்க்குற்ற விசாரணை: ஐ.நா. தீர்மானத்தை நிராகரிக்க முடியாது - சிறிசேனா உறுதி



கொழும்பு, அக்.24-

போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. தீர்மானம் குறித்து அனைத்துக்கட்சிகளின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்காக இலங்கை அதிபர் சிறிசேனா தலைமையில் நேற்று கொழும்பில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் அதிபர் சிறிசேனா பேசியதாவது:-

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மூலமாக இலங்கை விஷயத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தற்போது உள்ள நிலையில் நாட்டில் தனிப்பட்ட கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. நாங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம். ஐ.நா. தீர்மானம் தொடர்பில் அரசு என்ற ரீதியிலும், இலங்கையின் பிரதான கட்சி என்ற ரீதியிலும் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் எங்களால் முடிந்த அளவுக்கு செய்ய வேண்டும் என எண்ணுகிறேன்.

அவற்றை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பது தொடர்பாக அனைத்துக்கட்சிகளின் ஆலோசனைகளையும் ஏற்று செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். சில அரசியல்வாதிகள் நாங்கள் ஐ.நா. தீர்மானத்தை முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அத்துடன் சிலஊடகங்களும் இந்த கருத்தை முன்வைக்கின்றன.

எனினும் ஐ.நா. தீர்மானத்தை நாம் புறக்கணிப்பதால் மட்டும் இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுவிடமுடியாது. எனவே எமது அரசியலமைப்புக்கு எற்ப இந்த விஷயம் தொடர்பில் நாம் ஆராயவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விஷயத்தில் ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி, 2013-ம் ஆண்டு மார்ச் 21-ந் தேதி, 2014-ம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி ஆகிய காலக்கட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எனினும் இவற்றுக்கு தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன. அதனை நாங்கள் கருத்தில் கொண்டு ஐ.நா. அறிக்கையில் மிகப்பிரதானமாக குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

ஐ.நா. பரிந்துரைகளில் பிரதானமாக இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாத்தல், நல்லாட்சிக்கான கட்டமைப்புக்களை வலுப்படுத்துதல், ஊழல் மோசடி தொடர்பில் விழிப்புணர்வு, வடக்கு மற்றும் கிழக்கில் சிவில் பாதுகாப்பையும், வளர்ச்சிப்பணிகளையும் மேம்படுத்துதல், கண்ணி வெடிகளை அகற்றுதல், மறுகுடியேற்றம், சிவில் அமைப்புகள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் மதிப்பளித்தல், பலவந்த ஆள் கடத்தல்களை நிறுத்துதல் ஆகியவற்றுடன், இலங்கை அரசினால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் குறிப்பிட்ட விஷயங்களான உண்மையை கண்டறிதல் மற்றும் காணாமல்போனவர்களை தேடுதல் தொடர்பில் செயலகம் நிறுவுதல், இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாத்தல் அடங்கிய சர்வதேச சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட யோசனைகளை அமல்படுத்த வேண்டும்.

ஆகவே ஐ.நா. தீர்மானத்தை நிராகரிக்காது அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றி நாம் கலந்தாலோசிப்போம்.

அனைத்துக்கட்சிகளின் ஆலோசனைக்கு ஏற்ப எவ்வாறு இதனை முன்னெடுப்பது என்பது தொடர்பில் இறுதி முடிவை எடுப்போம். இது எமது முதல் சந்திப்பு தான். இன்னும் பல சந்திப்புகளை நாங்கள் ஏற்பாடு செய்வோம். கட்சிகளின் ஆலோசனை அமைய வேண்டுமானால் துணைக்குழுக்களை அமைத்து ஆராயவும் முடியும். இது என்னுடைய யோசனையாகும்.

கட்சிகளின் தனிப்பட்ட கருத்துக்களை 2 வாரத்துக்குள் எழுத்து மூலம் எனக்கு அனுப்பி வைக்கலாம்.

நாம் எதனை முன்னெடுத்தாலும் அது நமது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாரே முன்னெடுப்போம், அரசியல் அமைப்புக்கு ஏற்ப முன்னெடுக்க முடியுமானவற்றை நாங்கள் முன்னெடுப்போம்.

இவ்வாறு அதிபர் சிறிசேனா கூறினார்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற 20 கட்சிகள் கலந்து கொண்டன. திஸ்ஸ விதாரணவின் இடதுசாரி கட்சி மற்றும் சரத்பொன்சேகாவின் ஜனநாயக கட்சி ஆகியவை கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி :- மாலைமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.