Wednesday, October 28, 2015

சபஸ்டியன் சிரில் கான்ஸ்டன் அந்தோணி பிள்ளை,



சபஸ்டியன் சிரில் கான்ஸ்டன் அந்தோணி பிள்ளை, 27.4.1914-இல் இலங்கையில் பிறந்தார். இங்கிலாந்திலுள்ள "கிங்ஸ்' கல்லூரியில் பட்டம் பெற்றதும், "சோஷலிஸ்ட் லீக்கி'ல் இணைந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர். இவரது நடவடிக்கைகளை கண்காணித்த அரசு, "கைது செய்ய முற்பட்டபோது, மீனவராக மாறு வேடத்தில், இரவில் படகில், சென்னை வந்தார்.

"சென்னைத் தொழிலாளர் சங்க'த்தைத் தோற்றுவித்த முன்னோடிகளில் மூத்தவரான திரு.வி.க. ஆலோசனையால் தொழிற்சங்க இயக்கத்தில் தன்னலமற்று செயல்பட்டதன் வாயிலாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1942, ஆகஸ்ட், "வெள்ளையனே வெளியேறு' பேரியக்கத்தில் கைது செய்யப்பட்டு, 1946-இல் விடுவிக்கப்பட்டார். பி. அண்ட் சி. ஆலைத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை "பேச்சுவார்த்தைகள்' மூலம் நிர்வாகத்தினருடன் விவாதித்து, பலன் ஏதும் பெறாததால், தொழிலாளர்களின் விருப்பத்தை ஏற்று, காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கி, கைது செய்யப்பட்டார்.

பின்னர், ராஜமகேந்திர சிறையில் இருந்து 15.8.1947-இல் விடுதலையாகி இலங்கைக்குத் திருப்பி அனுப்ப பிறப்பித்த அரசின் ஆணையை, நீதிமன்றத்தில் வாதாடி ரத்து செய்யும் தீர்ப்பை, இந்தியா சுதந்திரம் பெற்ற பின் பெற்ற முதல் தொழில் சங்கத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றவர் பிள்ளை.

1948-இல் சென்னை மாநகராட்சிக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடிசைகளில் வசிப்போர் நலன் காக்க, ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளும், நகராட்சி கல்விக் கூடங்களும் திறக்க வழிவகுத்தார்.

1952 முதல் தேர்தலில் பெரம்பூர் தொகுதியிலிருந்து சென்னை மாகாணப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழிலாளர்களுக்கு "ஊக்கத் தொகை' வழங்கவும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப 100 சதவீதம் ஈட்டுப்படி பெறவும், இவற்றின் மூலம் உற்பத்தி உயர்ந்து,  முதலாளிகள் லாபம் ஈட்டவும், ஆலைகள் எவ்வித இடையூறின்றி செயல்படவும் வழிவகுத்தார்.

இந்தியாவில், அதிகமாக ஊதியமும், சலுகைகளும் பெறுவோர் சென்னை மாகாண ஆலை தொழிலாளர்களே என்பதை நிலைநாட்டியவர் பிள்ளை.

1957-இல் வட சென்னையிலிருந்து மக்கள் மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னையை "ஏ' பிரிவு அந்தஸ்து பெறச் செய்தார். இதனால் மாநில, மத்திய அரசு ஊழியர்களின் நகர, வீட்டு வாடகை உயர்வு ஈட்டுப்படிகள் கணிசமாக உயர்ந்தன. 

பல தொழிலாளர் நலச் சட்டங்கள் நிறைவேறவும், சிறப்பாக "முக்கூட்டு முறை'யின் மூலம் முதலாளி-தொழிலாளி உயர்வு பெறவும், கோரிக்கைகளைப் பேசி முடிவு எடுக்கவும், தோல்வியுற்றால், நடுவர் தீர்ப்பை நாடவும், சட்டம் இயற்ற வாதாடியவர், வலியுறுத்தியவர் பிள்ளை.

அதேநேரத்தில் முதலாளிகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் பாதுகாத்தவர். ஆலை தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையுடன் நிறைந்த வசதிகளுடன் கூடிய குடியிருப்பும், கூட்டுறவுச் சங்கங்கள் அமைத்து, தொழிலாளர் பிரதிநிதிகளே இயக்குநர்களாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி அளித்து "நம் அறிவும், கைகளுமே, நமக்கு உதவி' என்ற கருத்தை அவர்கள் மனதில் பதியும்படி செய்தவர்.

இவரது தளரா உழைப்பு, இவரை சென்னை, மதுரை, கோவை பெருநகரங்களில் இயங்கும் பல தொழில் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கச் செய்தது, இவருக்கு பக்கபலமாக இருந்து, செயல்பட்டவர், பெரியவர் எஸ். பக்கிரிசாமி பிள்ளை.

அனைத்துத் தொழிற்சங்கத் தலைவர்களுடனும் தோழமை பூண்டவர். ஆனால் நெறிமுறைகளை மீறினால், கண்டித்து, துண்டித்துக் கொள்ளவும் தயங்கமாட்டார். சான்றாக, 23.7.1984 ஆலை தொழிலாளர்கள் மூடப்பட்ட தொழிற்சாலையை திறக்கக் கோரி, பட்டாளம் மணிக் கூண்டிலிருந்து, தமிழக அரசு செயலகத்திற்கு பிள்ளை தலைமையில் பேரணி நடத்தினர்.

போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறின்றி, ஒரே பாதையில், கட்டுப்பாட்டுடன் வந்தனர். மற்ற சங்கங்களும், இதே கோரிக்கைக்காக, தீவுத்திடலுக்கு அருகிலுள்ள மன்றோ சிலையிலிருந்து புறப்பட்டு, அண்ணா சாலையிலுள்ள அறிஞர் அண்ணா சிலை அருகே சங்கமமாயினர்.

அப்போது சிலர் வன்முறைகளில் இறங்கி, பேருந்து, சிற்றுந்துகளின் மீது கற்களை எறிந்து, போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்து, குழப்பத்தை விளைவித்தனர். பேரணிக்கு முன் சென்ற பிள்ளை, விரைந்து வந்து தன் தலைமையிலான சங்கத் தொழிலாளர்களுடன் ஊர்வலத்தைத் தொடர்ந்தார்.

தொழிலாளர் அமைச்சர் எஸ். இராகவானந்தத்திடம், "மனுவை' அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். முதல்வர் எம்.ஜி.ஆர். ஆலை நிர்வாகத்தினருடன் பேசி, நிபந்தனையோடு ஆலையைத் திறக்கச் செய்தார். தக்க சமயத்தில் பிள்ளை தலையிட்டதினால், தடியடி, கண்ணீர்ப்புகை, தவிர்க்கப்பட்டது.

1948 டிசம்பரில், கொல்கத்தாவில், இந்தியத் தொழில்சங்கத் தந்தை என்.எம். ஜோஷியால், அரசியல் கட்சிகளின் ஆதிக்கமின்றி, சுதந்திரமாக செயலாற்ற, "இந்து மஸ்தூர் சபா' என்ற அமைப்பை ஆரம்பித்தார். 1957-இல் அதன் தேசியத் தலைவராக பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துறைமுகத் தொழிலாளர் சம்மேளனத்திற்கு, சென்னைத் தலைவராக இருந்த பிள்ளை, நிர்வாகத்தின் அறக்கட்டளைக்கு 1952-இல் உறுப்பினராக நியமிக்கப்பட்டு, இறுதி வரை இருந்தார்.

தனது காலத்திலேயே, தேசிய, மாநில கட்சிகள் தங்களுக்கென்று சங்கங்கள் அமைத்து தொழிலாளர்களைப் பிரித்து தொழிற்சங்க இயக்கத்தை பிளவுபடுத்தியதால், தொழிற்சாலைகள் தொடர்ந்து மூடப்படும் நிலை உருவாகி, தொழிலாளர்கள் வீதிக்கு விரட்டப்படுவதைக் கண்டு கலங்கினார். ஏதும் செய்ய முடியாது முதுமைக்கு ஆட்பட்டு விட்டோமே என்ற ஆதங்கத்தில் ஏங்கினார்.

வாழ்வு வரம்புக்கு உள்பட்டது. 16.8.2000 அன்று அந்தோணி பிள்ளை அமரத்துவம் அடைந்தார்.

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.