இந்தியாவில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வால்-மார்ட் நிறுவனம் பல கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுத்துள்ளது என்று அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான "தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு வால்-மார்ட் பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில், பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் சேர்ந்து சில்லறை விற்பனை நிலையங்களை தொடங்குவதற்கான முயற்சியில் வால்-மார்ட் நிறுவனம் கடந்த 2013ஆம் ஆண்டு ஈடுபட்டது. பிறகு, அந்தத் திட்டத்தை கைவிட்டு தனியாக விற்பனை நிலையங்களைத் தொடங்குவதென வால்-மார்ட் முடிவு செய்தது.
இந்நிலையில், மெக்சிகோ நாட்டில் இருக்கும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான சில்லறை விற்பனை நிலையங்களில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழந்தது. அந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க அரசு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின்போது, இந்தியாவில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வால்-மார்ட் நிறுவனம் பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க அரசின் விசாரணை அறிக்கையை மேற்கோள்காட்டி, தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்தியாவில் வால்-மார்ட் நிறுவனம் லஞ்சம் கொடுத்திருப்பது வெளிக்கொணரப்பட்டுள்ளது. அதாவது, சுங்கத்துறை மூலமாக தனது பொருள்களைக் கொண்டு செல்வதற்கு, கீழ்நிலை அதிகாரிகளுக்கு சிறு சிறு தொகைகளாக ஆயிரக்கணக்கில் வால்-மார்ட் லஞ்சமாக கொடுத்துள்ளது.
இவ்வாறு கொடுக்கப்பட்ட தொகைகளில், அதிகளவு 200 அமெரிக்க டாலருக்கும் (சுமார் ரூ.12,000) குறைவான தொகைகளை பலமுறை அளித்துள்ளது. சில இடங்களில், 5 டாலருக்கும் (ரூ.320) குறைவாகவும் கொடுத்துள்ளது. இந்தத் தொகைகள் அனைத்தையும் மொத்தமாக சேர்த்தால், பல மில்லியன் டாலர்களை (பல கோடி ரூபாய்) தாண்டுகிறது.
வால்-மார்ட் நிறுவனம் லஞ்சம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டாலும், அந்நிறுவனத்துக்கு அபராதம் விதிக்க சாத்தியமில்லை. ஏனெனில், லஞ்சம் கொடுத்ததன் மூலம் ஆதாயம் அடைந்தால் மட்டுமே அபராதம் விதிப்பதற்கு அமெரிக்காவின் வெளிநாட்டு ஊழல் நடவடிக்கைகள் சட்டம் வகை செய்கிறது. அதுபோல, இந்தியாவில் லஞ்ச நடவடிக்கைகளால் வால்-மார்ட் ஆதாயம் அடையவில்லை என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள வால்-மார்ட் நிறுவனத்தின் தலைமையகத்தின் கருத்தை அறிவதற்காக அந்நிறுவனத்தை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டனர். ஆனால், அந்நிறுவனத்திடம் இருந்து எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.
நன்றி :-தினமணி
0 comments:
Post a Comment
Kindly post a comment.