Tuesday, October 13, 2015

முனைவர் ந.இரவீந்திரன் நேர்காணல் சந்திப்பு : மு.முருகேசன்

ந.இரவீந்திரன், மார்க்சியச் சிந்தனையாளர் எழுத்தாளர்




இலங்கையின் வடபுலத்திலுள்ள யாழ்ப்பாணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள காலையடி எனும் கிராமத்தில் பிறந்தவர் முனைவர் ந.இரவீந்திரன் (60). பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப் பட்டதாரியாக இருந்து, பின்னர் முதுகலைப் பட்டமும் பெற்றார். சென்னை பல்கலைக் கழகத்தில் ‘திருக்குறளில் கல்விச் சிந்தனைகள்’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். சமூக பண்பாட்டு அமைப்புகளில் செயல்பாட்டாளராய் இருந்தவர். புத்தக வாசிப்பு மற்றும் தேடலின் மூலமாக மார்க்சியத்தைத் தனது தத்துவத் தளமாக்கிக் கொண்டவர். நவீனத்துவமும் அழகியலும், சாதியமும் சமூக மாற்றமும், மதமும் மார்க்சியமும், சாதி-தேசம்-பண்பாடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தனது நூல்களின் அறிமுக விழாவில் பங்கேற்க சென்னை வந்திருந்த ந.இரவீந்திரனுடன், உரையாடியதிலிருந்து:

உங்கள் இளமைப் பருவம் பற்றிச் சொல்லுங்கள்…

என்னோட இளம்பிராயம் முழுக்க கிராமச் சூழலைப் பின்னணியாகக் கொண்டது. 1950-களின் பிற்பகுதியில் கிராமங்களுக்குக் கிடைத்த பேருந்து வசதி, கல்வி பெறும் வசதி ஆகிய சமூக மாற்றங்கள் கிராமங்களுக்குள்ளும் ஒரு எழுச்சியை உண்டுபண்ணின. எங்கள் கிராமத்தில் முதல் தலைமுறையாகச் சிலர் சேர்ந்து உருவாக்கிய ‘சனசமூக நிலைய வாசக சாலை’ எனது புத்தக வாசிப்புக்கும் இலக்கிய ஆர்வத்துக்கும் தளமமைத்துக் கொடுத்தன. வாசக சாலையில் அவ்வப்போது நடைபெறும் பண்பாட்டு நிகழ்வுகள், பேச்சுப் போட்டிகள் ஆகியன எனக்குள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தின. அப்பா என்னை ஒரு ஜனநாயகவாதியாக வளர்த்தார் என்றால், என் அம்மாவோ எங்கள் வீட்டையே ஒரு மைதானமாக்கி என்னை விளையாட அனுமதித்தார்.

உங்களுடைய முதல் இலக்கிய முயற்சிகள் என்ன?

16 வயதிலேயே நான் கதைகளும் கவிதைகளும் எழுத ஆரம்பித்துவிட்டேன். எங்கள் ஊரில் தீபாவளியின்போது மிக அதிகமாக மது குடிப்பார்கள். அதற்கு எதிராக மது ஒழிப்பை வலியுறுத்தி, நண்பர்கள் நாங்கள் ஊர்வலம் போனோம். நாடகம் நடத்தினோம். 1972-ல் ‘காலையடி மறுமலர்ச்சி மன்றம்’ எனும் அமைப்பை நண்பர்கள் சிலர் இணைந்து தொடங்கினோம். இந்த மன்றத்தில் நாடகம் போடுதல், விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் எனப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இவை என் இலக்கிய தாகத்திற்கு நல்ல வாய்ப்பாக அமைந்தன.

மார்க்சியத்துடனான அறிமுகம் எப்படி ஏற்பட்டது?

சமூகச் சீர்த்திருத்தம் என்பதைக் கடந்து, சமூக மாற்றம் தேவை என்பதை உணரத் தொடங்கினேன். புதிய ஜனநாயகக் கட்சி செயலாளர் கே.ஏ. சுப்பிரமணியம் எனக்கு வழிகாட்டியாக இருந்தார். மாவோவின் சிந்தனைகளும் சீன சார்பு கருத்துகளும் எனக்குப் புதிய சிந்தனையைத் தூண்டுவதாய் அமைந்தன. சோவியத் படைப்புகளை வாசிக்கத் தொடங்கினேன். சண்முகதாசன் பொதுச் செயலாளராக இருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் என்னை இணைத்துக்கொண்டேன். ‘தமிழ் தேசிய இனம் அல்ல. பிரிவினை கூடாது’ என்று சண்முகதாசன் சொன்னார். கட்சி இரண்டாகப் பிரிந்தது.

உங்கள் இலக்கியச் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க நிகழ்வு எது?

பாரதியாரை நான் எதிர்கொண்ட விதத்தைச் சொல்லலாம். 1982-ல் பேராசிரியர் கைலாசபதியின் வழிகாட்டுதலில் பாரதியாரின் நூற்றாண்டு விழா நடந்தது. அப்போதுதான் பாரதியாரின் முழுமையான ஆளுமையை அறிந்துகொண்டேன். பாரதி சமூக சீர்திருத்தக் கருத்தில் முற்போக்குவாதி, ஆன்மிகத்தில் பிற்போக்குவாதி என்பார்கள். பாரதியின் ஆன்மிகப் பார்வையிலும் புரட்சிக் கருத்துகள் இருப்பதையும், மக்கள் எழுச்சியின் அவதாரம்தான் கடவுள் என்று பாரதி கொண்டாடுவதையும் சுட்டிக்காட்டி,‘அரசியலும் இலக்கியமும் பாரதி’ என்றொரு கட்டுரையை வாசித்தேன். அந்தக் கட்டுரை பாரதி குறித்த விவாதத்தைத் தூண்டியது. பிறகு, அது ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’ எனும் நூலாக 1986-ல் வெளியானது.

ஈழப் பிரச்சினையின் இன்றைய நிலை என்ன?

புலம்பெயர்ந்து வெளியே வாழும் ஈழத் தமிழர்கள் தனி ஈழம் வேண்டுமென்று விரும்புகிறார்கள். ஆனால், இலங்கையின் யதார்த்தம் அதுவல்ல. இலங்கையில் பிரிவினை சாத்தியமில்லை. இப்போது இருப்பது போலவே இலங்கை இருப்பதுதான் இந்தியாவுக்கும் பாதுகாப்பானது. பிளவு ஏற்பட்டால் இந்தியாவுக்கு ஆபத்தாக அமையும். அதனால் இந்தியாவும் இந்நிலை தொடரவே விரும்புகிறது.

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.