Sunday, October 4, 2015

வாழும்போதே வரலாறானவர் - த. ஸ்டாலின் குணசேகரன்

Image result for gandhi

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்களால் இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பட்டியலிட்டு அவற்றை முறையாக பிரிட்டிஷ் ஆட்சியாளரிடம் முறையிடுவதற்காக தென் ஆப்பிரிக்காவின் தலைநகரான ஜோகனஸ்பர்க்கிலிருந்து லண்டன் மாநகரம் சென்றிருந்தார் காந்தியடிகள். அங்கு அவருக்கு முறையிடுவதற்குக்கூட முறையான வாய்ப்பளிக்கப்படவில்லை. அந்தக் காலகட்டத்தில் ரஷிய எழுத்தாளரும் உலகப் புகழ்பெற்ற மனிதநேயச் சிந்தனையாளருமான லியோ டால்ஸ்டாயிடம் இந்தியர்களுக்கு ஏற்பட்ட அவமானங்களைப் பற்றிக் கடிதம் மூலம் எடுத்துச் சொல்லி, அவர் மூலம் உலகத்தின் கவனத்திற்கு தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் நிலையைக் கொண்டுவர நினைத்தார் காந்தியடிகள்.
 தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் படும்பாடு குறித்து டால்ஸ்டாய்க்கு ஒரு நீண்ட கடிதம் எழுதிய காந்தியடிகள் அக்கடிதத்துடன் பிரிட்டிஷ் பாதிரியார் ஜோசப் ஐ டவுன் எழுதிய "எம்.கே.காந்தி... தென்னாப்பிரிக்காவில் ஓர் இந்திய தேசபக்தர்' என்ற நூலையும் இணைத்து அனுப்பிவைத்திருந்தார். அக்கடிதத்திற்கு பதில் எழுதிய லியோ டால்ஸ்டாய் உங்கள் வரலாறு பற்றிய நூலினைப் படித்தேன். அது என்னை மிகவும் கவர்ந்ததோடு உங்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளவும், உணர்ந்துகொள்ளவும் உதவியது. உங்களுடைய செயல்பாடுகளையும் உங்களையும் பெரிதும் மதிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இக்கடிதப் பரிமாற்றம் 1909-1910 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது.

 காந்தியடிகள் அந்தந்தக் காலக்கட்டங்களிலேயே மக்களால் துல்லியமாக இனங் காணப்பட்டுள்ளார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. 1915-ல் தனது 21 ஆண்டுகால தென் ஆப்பிரிக்க வாழ்க்கையை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய காந்தியடிகள், அங்கு அவர் சோதித்து வெற்றிகண்ட சில போராட்ட வழிமுறைகளை இந்தியாவின் தன்மைக்கும் நிலைமைக்கும் ஏற்பப் பயன்படுத்தி இங்குள்ள மக்களை ஆங்கிலேயர் ஆட்சிக் கெதிராகக் கிளர்ந்து எழச் செய்தார்.

 தென் ஆப்பிரிக்காவில் தமிழர்கள் காந்தியடிகளின் பேராட்டங்களுக்கு மிகுந்த ஒத்துழைப்புக் கொடுத்ததோடு பலர் உயிர்த் தியாகமும் செய்திருந்ததால் தமிழ்நாட்டில் காந்தியடிகள் அப்போதே ஒரு பொறுப்புமிக்க தலைவராக அங்கீகரிக்கப்பட்டிருந்தார்.

 1915-ல் காந்தியடிகள் தமிழகம் வந்த போது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மிகுந்த பரவசமூட்டுவதாகவும் வித்தியாசமானதாகவும் இருந்தது. சென்னை நகரின் முக்கியப் பிரமுகர்கள், அரசுப் பொறுப்புகளிலும் உயர் நிலையிலும் இருப்பவர்கள் என்று பலர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கே வருகை தந்து, தனது மனைவி கஸ்தூரிபாவுடன் ரயிலில் வந்திறங்கிய காந்தியடிகளை எழுச்சியுடன் வரவேற்றனர். வரவேற்பின் போது முண்டியடித்துக்கொண்டு அப்போதைய முறையில் முதல் வகுப்புப் பெட்டிகளிலும் பின்னர் இரண்டாம் வகுப்புப் பெட்டிகளிலும் காந்தியடிகளைத் தேடிய பெரிய மனிதர்களுக்கு, அவர் தனது மனைவியோடு மூன்றாம் வகுப்புப் பெட்டியில் வந்து எளிமையாக இறங்கிய காட்சி ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியளித்தது.

 கல்லூரி மாணவர்கள் பலர் காந்தியடிகளை வரவேற்பதற்காக ரயில் நிலையம் வந்து காத்துக் கிடந்தனர். பெரிய மனிதர்கள் கூட்டமாகச் சென்று மாலை அணிவித்து காந்தியடிகளை ரயில் நிலைய முகப்பில் மிகுந்த சிரமத்திற்கிடையில் அழைத்து வந்து நிறுத்தினர். காந்தியடிகள் ஏறிச் செல்வதற்காக குதிரைகள் பூட்டப்பட்ட "சேரட்' வண்டி ஒன்றைக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தனர். அங்கு காந்தியடிகளைக் காண்பதற்காக ஆர்வமுடன் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் சிலர் "சேரட்' வண்டியிலிருந்த குதிரைகளை அவிழ்த்து விட்டுவிட்டு காந்தியடிகளை வண்டியின் மீது ஏறச் சொல்லி அவர்களை வழிநெடுக இழுத்துச் சென்றனர். சென்னை சுங்குராம செட்டி தெருவில் உள்ள நடேசன் அண்டு கம்பெனி வரை மாணவர்களே மிகுந்த எழுச்சியுடனும் எச்சரிக்கையுடனும் வண்டியை இழுத்துச் சென்றனர்.

 காந்தியடிகளும், கஸ்தூரிபாவும் வண்டியில் உட்காராமல் நின்றவாறே வழிநெடுக இரண்டு பக்கங்களிலும் நின்று கொண்டிருந்த மக்களுக்கு கரம்கூப்பி வணக்கம் செலுத்திக்கொண்டே வந்துள்ளனர். காந்தியடிகளின் வருகையை முன்னிட்டு கணேஷ் அண்டு கோ நிறுவனத்தார் காந்தியடிகளின் வரலாற்றைப் புத்தகமாக்கி, அதனை பத்தாயிரம் பிரதிகள் அச்சடித்து, பொது மக்களுக்கு இலவசமாக 
 வழங்கினர்.

 1918-இல் சென்னையைச் சேர்ந்த கணேஷ் அண்டு கோ என்ற அதே புத்தக வெளியீட்டு நிறுவனம் HEROS OF THE HOUR என்ற ஆங்கில நூலை வெளியிட்டுள்ளனர். மிக முக்கியமான மூன்று பிரமுகர்களைப் பற்றிய மூன்று சிறப்புமிக்க கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இதில் முதல் கட்டுரையின் தலைப்பு மகாத்மா காந்தி (MAHATMAGANDHI) என்பதாகும். இந்நூல் சென்னை கேம்ப்ரிட்ஜ் பிரஸ்ஸில் அச்சிடப்பட்டது. அன்னிபெசண்ட் அம்மையார் இந்நூலுக்கான முன்னுரை எழுதியுள்ளார்.

 1927-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான்காம் தேதி ஈரோடு சீனிவாசா பூங்காவில் காந்தியடிகளின் மார்பளவுச் சிலை திறந்து வைக்கப்பட்டது. அந்தப் பூங்கா உருவாகக் காரணமாக இருந்த அன்றைய ஈரோடு நகர்மன்றத் தலைவர் டி.சீனிவாச முதலியாரின் பெயராலேயே அப்பூங்கா விளங்கியது. அப்பூங்கா பின்னர் பெயர் மாற்றம் பெற்று தற்போது வ.உ.சி. பூங்காவாக உள்ளது. 

 மிகப்பெரும் பூங்காவான இதனைத் திறந்துவைக்க வருகைபுரிந்த அன்றைய சென்னை மாகாண ஆளுநர் விஸ்கவுண்ட் கோஷென் அப்பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் சிலையைத் திறந்து வைத்துள்ளார். இச்சிலைத் திறப்புவிழா நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர்   டி. சீனிவாச முதலியார் தலைமையேற்றார். அந்தச் சிலை இன்றளவும் அப்பூங்காவில் உள்ளது. அச்சிலையை வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறு பீடத்தில் இடம்பெற்றுள்ள கல்வெட்டிலேயே சிலைத் திறப்பு நிகழ்ச்சி தொடர்பான செய்திகள் பொறிக்கப்பட்டுள்ளன. 

 மகாத்மா காந்தி மரணமடைவதற்கு 21 ஆண்டுகளுக்கு முன்பே, அதுவும் அவரின் 58-ஆவது வயதிலேயே அவருக்கு நேரடித் தொடர்போ அமைப்பு ரீதியான நெருக்கமான உறவோ இல்லாத ஒரு பகுதியில் இப்பகுதி மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் விதத்தில் ஒரு சிலை நிறுவப்பட்டது அதிசயம்தான். அரசுப்பூங்காவில்.. அதுவும் அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியின் மிக உயர் பொறுப்பில் இருந்த ஆங்கிலேய ஆளுநரே நகர்மன்றத் தலைவரின் தலைமையில் காந்தியடிகளின் சிலையைத் திறந்துவைத்தது அதைவிட அதிசயம்தான்.

 இவ்வாறு ஒரு சிலை இருந்தும் இதே பூங்காவில் இச்சிலையிலிருந்து சுமார் 200 அடி தொலைவில் காந்தியடிகளின் இன்னொரு சிலை 01.10.1939-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இது காந்தியடிகளின் முழு உருவச் சிலையாகும். அன்றைய சென்னை மாகாணக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்ட மேலவை உறுப்பினருமான ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் இச்சிலையைத் திறந்து வைத்துள்ளார். ஈரோடு நகர்மன்றத் தலைவராக அப்போது விளங்கிய ஆர்.கே. வெங்கடசுவாமி இச்சிலைத் திறப்பு நிகழ்வுக்குத் தலைமையேற்றுள்ளார். இச்சிலை காந்தியடிகள் மரணமடைவதற்கு சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே நிறுவப்பட்டுள்ளது. காந்தியடிகளின் சிலை ஈரோடு நகரத்தில் வேறு பல இடங்களில் பிற்காலத்தில் ஒன்றன்பின் ஒன்றாக தன்னெழுச்சியோடு மக்களால் வைக்கப்பட்டிருப்பினும் வ.உ.சி.பூங்காவிலுள்ள இந்த இரண்டு சிலைகளும் காலத்தால் மிகவும் முற்பட்டவை என்பதோடு அக்காலத்திலேயே ஆங்கிலேய ஆளுநர், காங்கிரஸ் கட்சியின் மாகாணத் தலைவர் போன்ற மிக முக்கியப் பிரமுகர்களால் அதிகாரப்பூர்வமான நகர்மன்றத் தலைவர்களின் தலைமையில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் முறையாகத் திறந்து வைக்கப்பட்டிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

 இதே 1939ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தியடிகளுக்கு 70ஆவது பிறந்த நாள். அன்று ஒரு வித்தியாசமான பிறந்த நாள் பரிசு கொடுக்க எண்ணினார் அன்றைய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத் தத்துவப் பேராசிரியராகவும் விடுதலைக்குப் பின்னர் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராகவும் விளங்கிய சர்வபள்ளி எஸ். இராதாகிருஷ்ணன்.

 காந்தியடிகளைப் பற்றி உலகப் புகழ்மிக்க அறிஞர்கள் பலரிடம் கட்டுரைகளைப் பெற்று அவற்றை அரிதின் முயன்று தொகுத்து ஒரு நூலாக்கி அதற்கு Mahatma Gandhi Essays and Reflections of His life and work என்று தலைப்பிட்டு அந்நூலினை காந்தியடிகளின் பிறந்த நாள் பரிசாக காந்தியடிகளிடமே நேராக அளித்தார் டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன். அந்நூலில் 63 புகழ்மிக்க பல்வேறு துறைகள் சார்ந்த உலகப் பிரமுகர்கள் காந்தியடிகளைப் பற்றி அவரவர் கோணத்தில் எழுதிய ஆழமான கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன.

 இந்த ஆங்கில நூலை அக்காலகட்டத்தில் ரங்கூனில் வாழ்ந்த தமிழர்கள் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டுவர எண்ணி, அதற்கென புதுமலர்ச்சி நூற்பதிப்புக் கழகம் என்ற ஒரு வெளியீட்டகத்தையே உருவாக்கி, அதன் முதல் வெளியீடாக மகாத்மா காந்தி என்ற தலைப்பில் இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்து 1941-இல் வெளியிட்டனர். அப்போது ரங்கூனில் ஜோதி எனும் தமிழிதழின் ஆசிரியராக விளங்கிய அறிஞர் வெ.சாமிநாதசர்மா இந்நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

 1941}இல் அவ்வாறான ஓர் அற்புதமான நூல் வெளிவந்த சுவடே தெரியாதிருந்த நிலையில், இப்போது அன்னம் பதிப்பகத்தார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபதிப்புச் செய்து சமீபத்தில் ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெளியிட்டனர்.

 இந்நூலின் மொழி பெயர்ப்பாளர் வெ.சாமிநாத சர்மா தனது முன்னுரையில், "இவரைக் கடவுளாக நாம் வழிபடுகிறோம். ஆனால், மனிதராக இவரை நாம் பின்பற்ற வேண்டுமென உலக அறிஞர்கள் இந்த நூல் மூலம் நமக்கு வலியுறுத்துகின்றனர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

 வாழும் காலத்திலேயே வரலாறாக வாழ்ந்தவர் காந்தியடிகள் என்பதற்கு இவை போன்றே இன்னும் ஏராளமான நிகழ்ச்சிகள் ஆதாரங்களாக வழிநெடுக வரலாற்றில் பதிந்து கிடக்கின்றன.

Image result for stalin gunasekaran
நன்றி :- தினமணி
 

0 comments:

Post a Comment

Kindly post a comment.