Monday, October 12, 2015

பாரம்பரிய மருத்துவத்தின் வெற்றி -அருளினியன்


சீனாவைச் சேர்ந்த இயற்கை மருத்துவரான யூயூ தூவுக்கு இந்த ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெறும் முதல் சீனர் என்ற பெருமையைப் பெறுகிறார் இவர். 
 மலேரியாவைக் குணப்படுத்தும் சீனப் பாரம்பரியத்தில் அமைந்த, இயற்கை முறை மருந்தான ARTEMISININ-ஐ கண்டுபிடித்தவராவார். நோபல் பரிசு அறிவிப்பைத் தொடர்ந்து, ஆசியாவின் பாரம்பரிய மருத்துவ முறையின் மீது, மேற்கத்திய ஊடகங்களின் பார்வை திரும்பியுள்ளது. 

 இன்றுவரைக்கும், தமிழ்நாட்டில் உயிர்க் கொல்லி நோய்களில் ஒன்றாகவே மலேரியா திகழ்கிறது. கொசுவால் பரப்பப்படுகின்ற மலேரியா, மனிதனின் சிவப்பு ரத்த அணுக்களைக் கைப்பற்றி அவற்றை அழிக்கும் ஆற்றல் வாய்ந்தது. காய்ச்சலில் ஆரம்பிக்கும் மலேரியா, மூளையைப் பாதிப்பதுடன், மரணத்தையும் ஏற்படுத்தும். 

 இன்றும் உலகம் முழுவதும் ஆண்டொன்றுக்கு சுமார் 4 லட்சத்து 50,000 பேர் மலேரியாவால் உயிரிழக்கிறார்கள். 

 இதைவிட, உலக மக்கள்தொகையில் சுமார் 340 கோடி மக்கள், அதாவது உலக மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள், எந்த நேரத்திலும் மலேரியாத் தொற்றுக்குள்ளாகக் கூடிய அபாயத்தில் உள்ளதாக சொல்கிறது உலக சுகாதார அமைப்பு. 

 1960-களில் கிழக்கு சீனாவில் மிகப் பெரிய ஆள்கொல்லி நோயாக மலேரியா உருமாறியிருந்தது. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் மலேரியாவின் தாக்கத்தால் இறந்து போனார்கள். சீனப் புரட்சியின் விளைவாக மேற்கத்திய மருத்துவம் படித்தவர்கள் எல்லாம் சீனாவை விட்டு வெளியேறியதால் போதுமான மருத்துவ வசதிகளும் கிடைக்கவில்லை. 
 இந்தக் காலக்கட்டத்தில்தான் ஹோசிமின் தலைமையிலான வடக்கு வியத்நாம் போராளிகளும் அமெரிக்காவுக்கு எதிராகப் போர் புரிந்து வந்தனர். மாவோ தலைமையிலான சீனாவும், ஹோசிமினின் வடக்கு வியத்நாமும் கம்யூனிச நாடுகள் என்ற அடிப்படையில் நட்புறவுடன் இருந்து வந்தன. 
 அமெரிக்கப் படையணியின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாவதைவிட அதிகளவு வியத்நாம் போராளிகள் மலேரியாவுக்குப் பலியானார்கள். மலேரியாவுக்கு மருந்தாக அந்தக் காலத்தில் உபயோகிக்கப்பட்ட CHLOROQUINE என்ற ரசாயனத்திற்கு எதிராக மலேரியாக் கிருமிகள் தம்மை தகவமைத்துக் கொண்டன. சீனாவுக்கும், அதன் நட்பு நாடாகிய வடக்கு வியத்நாமுக்கும் ஒரே நேரத்தில் பெரிய தலைவலியாக மலேரியாவின் தாக்கம் உருவாகியது. 

 இந்நிலையில்தான், மாவோ சேதுங், ஒரு ரகசியமான விஞ்ஞானப் புரட்சிக்கான முதல் வித்தை 1967-ஆம் ஆண்டு மே மாதம் 23-ஆம் தேதி ஊன்றினார். ஐந்தாம் மாதம் 23-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டதால் இது "புராஜெக்ட் 523' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இதை வரலாற்றாசிரியர்கள் "ராணுவ விஞ்ஞானப் புரட்சி' என்கிறார்கள்.

 மாவோவின் கட்டளைக்கிணங்க, ஆள்கொல்லி நோயான மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடிக்க, சீன மருத்துவவியலாளர்கள், விஞ்ஞானிகள் கொண்ட பல நூறு ஆளுமைகள் ஒரே நேரத்தில் களத்தில் இறங்கினார்கள். 

 இந்த ஆராய்ச்சியில் "சீனாவின் பாரம்பரிய மருத்துவக் கழகம்' சார்பாகக் கலந்து கொண்டவர்தான் யூயூ தூ. சீனாவின் பாரம்பரிய மருத்துவத்தையும், மேற்கத்திய மருத்துவத்தையும் முறைப்படிக் கற்றவர் என்பது இவருக்குப் பலம் சேர்ப்பதாக அமைந்தது. ஆய்வுக் காலத்தில் சீனாவின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்து, சீன மக்கள் நோய்களை எதிர்க்க பயன்படுத்தும் சுமார் 2000 பாரம்பரிய நோய் எதிர்ப்பு முறைகளைப் பட்டியலிட்டார் யூயூ தூ. 

 சீனாவின் ஒரு பிராந்திய மக்கள் காய்ச்சல் வரும்போதெல்லாம் ARTEMISIA ANNUA என்ற தாவரத்தின் மரப்பட்டைகளைக் காய்ச்சி மருந்தாக உள்கொண்டு வந்தனர். காய்ச்சலும் சில மணி நேரங்களில் குணமடைந்து வந்தது. 
 மலேரியாவின் ஆரம்ப அறிகுறிகூட இப்படியான காய்ச்சலாகவே இருக்கும். இதைப் புரிந்து கொண்ட யூயூ தூ, அந்தத் தாவரத்தின் பட்டைகளை ஈதர் என்ற ரசாயனத்துடன் கலந்து கொதிக்க வைத்த போது சீனாவே தேடிக் கொண்டிருந்த மலேரியாவிற்கான மருந்து தயாரானது
 1600 ஆண்டுகளுக்கு முன்பாகவே சீன இலக்கியங்களில் இது சம்பந்தமான குறிப்புகள் உள்ளனவாம். மலேரியாவிற்கெதிராகக் கண்டுபிடிக்கப்பட்ட மேற்கத்திய மருந்துகளுக்கெதிராக மலேரியக் கிருமிகள் தம்மை தகவமைத்துக் கொண்டன. ஆனால், ARTEMISININ  மருந்துக்கெதிராக, மலேரியாக் கிருமிகளால் தம்மைத் தகவமைத்துக்கொள்ள முடியவில்லை. இன்றுவரை உலகெங்கும் வெற்றிகரமான மருந்தாக அது திகழ்கிறது. 

 "புராஜெக்ட் 523' ஆரம்பிக்கப்பட்டு சரியாக பத்து வருடங்களுக்குப் பின் இவருடைய கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், யூயூ தூவின் பெயர் வெளியிடப்படவில்லை. 

 சில வருடங்கள் முன்பு வரை ARTEMISININ மருந்தைக் கண்டு பிடித்தவர்கள் யார் என்பது மர்மமாகவே இருந்து வந்தது. "தனி நபர்களைவிட தேசமே பிரதானம்' என்ற சீனாவின் கொள்கையால் இதுவரை முறையான அங்கீகாரம் பெறாமல் இருந்தவர் இந்த நோபல் பரிசு மூலமாக, தனது 84-வது வயதில், சர்வதேசத்தின் கவனத்தைப் பெறுகிறார்.

 "சீனாவின் பாரம்பரிய மருத்துவம் உலகத்திற்கு கொடுத்த கொடை இது' என உலக நாடுகள் பாராட்டுகின்றன. இந்த நோபல் பரிசை, சீன மருத்துவ முறைக்குக் கிடைத்த அங்கீகாரம் என சீனப் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். 
 "சீனப் பாரம்பரிய மருத்துவத்தின் பெருமையை உலகெங்கும் உணர ஆரம்பித்துள்ளனர். அதன் ஓர் அடையாளமே இந்த நோபல் பரிசு' என்கிறார் சீனப் பிரதமர் லீ கெகியாங். 

 எவ்வளவுதான் மேற்கத்திய விஞ்ஞானங்கள் வளர்ச்சி அடைந்தாலும். பாரம்பரிய மருத்துவம்தான் முடிவான வெற்றியாளர் என்பதை இந்த நோபல் பரிசு வெளிப்படுத்துகிறது என்றால் அது   மிகையல்ல.

0 comments:

Post a Comment

Kindly post a comment.