Tuesday, October 13, 2015

ரூ.6,100 கோடி கருப்புப் பண விவகாரம்: 50 இடங்களில் சிபிஐ சோதனை

பேங்க் ஆஃப் பரோடா அதிகாரிகள் உதவியுடன் அந்த வங்கியின் மூலம் ஹாங்காங்கிற்கு ரூ.6,100 கோடி கருப்புப் பணம் அனுப்பி வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள விவகாரத்தில், சிபிஐ அதிகாரிகள் 50 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினர்.
 கருப்புப் பணத்தை ஹாங்காங்குக்கு அனுப்பி வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் சிலரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

 இதுகுறித்து சிபிஐ வட்டாரத் தகவல்கள் கூறியதாவது:

 பேங்க் ஆஃப் பரோடா வங்கி அதிகாரிகள் சிலரின் துணையுடன் ஹாங்காங்கில் உள்ள சில நிறுவனங்களுக்கு ரூ.6,100 கோடி கருப்புப் பணத்தை சிலர் அனுப்பி வைத்துள்ளனர். 

 இதுதொடர்பாக 50 இடங்களில் சிபிஐ ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தியது. சந்தேகிக்கப்படும் நபர்கள் சிலரிடமும் சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளது.

 முன்னதாக, ரூ.6,100 கோடி கருப்புப் பணத்தை ஹாங்காங்கிற்கு நூதனமான முறையில் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதை சிபிஐ விசாரணையில் கண்டுபிடித்துள்ளது. 

 அதாவது, பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், கருப்புப் பணத்தை அனுப்புவதற்காக நிறுவனங்களின் பெயரில், போலியான முகவரிகளை அளித்து 59 கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். பின்னர், குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த கணக்குகளில் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

 அப்போது, ஹாங்காங்கில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி, முந்திரி போன்றவற்றுக்கு முன்தொகையாக (அட்வான்ஸ்) அப்பணத்தை அனுப்பி வைக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். 

 அதையடுத்து, இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுக்கு வங்கிகளில் இருந்த பணத்தை கொடுக்கும்படி பேங்க் ஆஃப் பரோடா வங்கியிடமும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால்

 பொதுவாக இவ்வாறு அதிக அளவுக்கு பணம் அனுப்பி வைக்கப்படுவதை வங்கிகள் சில நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கண்டுபிடித்துவிடும். 

 அத்துடன், மிகப்பெரிய அளவில் பணம் அனுப்பப்படுவதை வங்கிகள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் அனுமதிக்காது. 

 ஆதலால், இதைத் தவிர்க்கும் வகையில் 1 லட்சம் அமெரிக்க டாலருக்கும் குறைவான தொகை பல்வேறு கணக்குகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 கருப்புப் பணம் அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ சிலரிடம் விசாரணை நடத்தி வருகிறது. அந்த விசாரணை முடிவடைந்த பிறகே, முக்கிய குற்றவாளிகள் குறித்த தகவல் தெரிய வரும்.

 இந்த விவகாரத்தில், பேங்க் ஆஃப் பரோடா வங்கி அளித்த புகாரின் அடிப்படையில், வங்கிகளில் கணக்கு வைத்திருந்த 59 நிறுவனதாரர்கள், பெயர் குறிப்பிடப்படாத வங்கி அதிகாரிகள், தனி நபர்கள் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் 120 பி (குற்றச்சதி), 420 (மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13(1)(டி) பிரிவின் கீழும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

 தில்லி அசோக் விஹாரில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளையில் இருந்து 8,000 பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பது அந்த வங்கி நடத்திய தணிக்கையில் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, பேங்க் ஆஃப் பரோடா வங்கி நிர்வாகமும் விசாரணை நடத்தி வருகிறது.
 
 மத்திய அமலாக்க இயக்ககம் வழக்குப்பதிவு: இதனிடையே, ஹாங்காங்கிற்கு கருப்புப் பணம் அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அமலாக்க இயக்ககமும் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இதேபோல், மத்திய அமலாக்க இயக்ககமும் சோதனை நடத்தியது என்று சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

நன்றி :- தினமணி
 

0 comments:

Post a Comment

Kindly post a comment.