Flash news:

  • உலகம்
  • தமிழகச்செய்திகள்
  • கட்டுரைகள்
  • சிறப்பு செய்திகள்
  • அனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.

Tuesday, October 13, 2015

சூரிய ஒளி மின்சாரம் - இருளில் ஒரு நம்பிக்கை கீற்று! - வ. ரங்காசாரி

இந்தியாவில் விவசாயம், தொழில்துறை, சேவைத்துறை என்று எதுவுமே முழு வளர்ச்சி பெறாமல் முடங்கிக் கிடப்பதற்கு எது காரணம்? வேறொன்றுமில்லை இம்மூன்று துறைகளுக்கும் இன்றியமையாத தேவையான மின்சாரம் போதிய அளவில் கிடைக்காததுதான். இத்துறையில் தன்னிறைவை எட்டாத வரையில் வளர்ச்சி சாத்தியமில்லை. இதை உணர்ந்தே மின்னுற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதில் நம்பிக்கைக் கீற்றாக உருவெடுத்துள்ளதுதான் மரபு சாரா மின்னுற்பத்தி.

சூரிய ஒளியிலிருந்தும் காற்றா லைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் இப்போது வேகம் பிடிக்கத் தொடங்கியுள்ளன. இப்போது வீட்டுக் கூரைகளில் மின்னுற்பத்திக்கான தகடுகளும் சாதனங்களும் வரத் தொடங்கிவிட்டன.

750 கிகா வாட்

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கச் சாதகமான 2 பெரிய அம்சங்கள் இந்தியாவில் இருக்கின்றன. முதலாவது, பெரும் நிலப்பரப்பு. இரண்டாவது, வெப்ப மண்டல நாடாக இருப்பதால் ஆண்டின் பெரும்பகுதி இங்கு வெயில் அடிக்கிறது. எனவே ஆண்டுக்கு சுமார் 750 கிகா வாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க முடியும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 1 கிகா வாட் என்பது 1,000 மெகா வாட்டுகள். அதன் மூலம் சுமார் 7 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் அளிக்க முடியும்.
இந்தியாவில் இன்னமும் 30 கோடிப் பேர் மின்சார வசதி பெறாமல் இருக்கின்றனர். இவர்கள் பரம ஏழைகளாக இருப்பதும், காடுகளிலும் மலைகளிலும் போக்குவரத்து வசதியற்ற தொலைவுப் பகுதிகளிலும் வசிப்பதுமே இதற்குக் காரணமாகும். ஏழைகளுக்கு மின்சாரம் வழங்க தனி திட்டம் தீட்டப்படுகிறது.

ஆண்டுக்கு 250% வளர்ச்சி

சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பில் இப்போதும் எல்லா மாநிலங்களும் ஆர்வம் காட்டிவிடவில்லை, மத்திய அரசும் திட்டவட்டமான செயல் திட்டத்தை வகுக்கவில்லை. அப்படி யிருந்தும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தொழிலகங்கள், வணிக வளாகங்கள், பெரிய மருத்துவ மனைகள், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், தனியார் கல்வி நிறுவனங்களில் சூரிய ஒளி மின்னுற்பத்தி சாதனங்களைப் பொருத்தத் தொடங்கிவிட்டனர். சூரிய ஒளி மின்னுற்பத்தி இப்போது ஆண்டுக்கு 250% அளவில் அதிகரித்து வருகிறது.

உலகின் முதல் விமான நிலையம்

உலகிலேயே முழுக்க முழுக்க சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தும் விமான நிலையமாகியிருக்கிறது கேரளத்தில் உள்ள கொச்சி. இங்கு 46,000 சோலார் பேனல்கள் பொருத் தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் 12 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. வாரத்துக்கு 1,000 விமானங்கள் இங்கு வந்து செல்கின்றன. இவ் விமான நிலையம் பயன்படுத்தும் 48,000 யூனிட் மின்சாரத்துக்கு ரூ.3,36,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

95 லட்சம் டாலர் செலவிட்டு 6 மாதங்களில் இந் நிலையத்தின் முழுத் தேவைக்கு சூரிய ஒளி மின்னுற்பத்தி பேனல்கள் பொருத்தப்பட்டுவிட்டன. இப்போது 180 லட்சம் யூனிட்டுகள் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதை அப்படியே வீடுகளுக்குத் தருவதென்றால் 10,000 வீடுகளுக்குத் தர முடியும். உலகின் பல்வேறு நாடுகளும் இந்தியாவின் இதர விமான நிலையங்களும் கொச்சியைத் தொடர்பு கொண்டு சூரிய ஒளி மின்திட்ட விவரங்களைக் கேட்கின்றன. ஆப்பிரிக்காவின் லைபீரியா ஒரு நிபுணர் குழுவையே நேரில் பார்த்துவர அனுப்பிவிட்டது.

இரட்டிப்பாகும் சூரிய மின்னுற்பத்தி

மத்திய அரசின் புதிய, புதுப் பிக்கத்தக்க எரிசக்தி துறை நடப்பு நிதியாண்டில் மட்டும் 518 மெகா வாட் மின்னுற்பத்தித் திறனை நிறுவி யுள்ளது. இதையும் சேர்த்து மொத்தம் 4,262 மெகா வாட் திறன் நிறுவப் பட்டிருக்கிறது. இத்துடன் 4,345 மெகாவாட் சேர்க்கப்படுகிறது. 2016-17-ல் மட்டும் கூடுதலாக 10,859 மெகா வாட் திறன் சேர்க்கப்படுகிறது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தயாரிப்பை அதிகரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்திருக்கிறது. 2022-ல் 175 கிகா வாட் மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க இயற்கை ஆற்றல்களிலிருந்து தயாரிக்கவிருக்கிறது. இதில் சூரிய ஒளி மின்சார இலக்கு 20,000 மெகாவாட்டிலிருந்து 100 கிகா வாட்டுகளாக உயர்த்தப்பட்டிருக்கிறது. காற்றாலைகள் மூலம் 60 கிகா வாட்டும், எண்ணெய் எரிவாயு போன்றவற்றின் மூலம் 10 கிகா வாட்டும் புனல் (நீர்) மின் நிலையங்கள் மூலம் 5 கிகா வாட்டும் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

2010-ல் ஜவஹர்லால் நேரு தேசிய சூரிய ஒளி மின்னுற்பத்தி திட்டம் 2 மெகா வாட் என்ற அளவில் தொடங்கப்பட்டது. இப்போது 4,200 மெகா வாட்டாக உயர்ந்திருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையமும் இந்தியாவில்தான் அமைக் கப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் 750 மெகா வாட் திறனுள்ள சூரிய ஒளி மின்திட்டம் நிறுவப்பட்டு வருகிறது.

சூரிய ஒளி திட்டங்களின் மூலம் ஆண்டுக்கு 15,000 மெகா வாட் மின்சாரத் தயாரிப்பை அதிகப்படுத்த ‘புதிய, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை’ விரும்புகிறது. மின்சார தயாரிப்பு மட்டுமல்லாமல் கொண்டு செல்லல், விநியோகம் ஆகியவற்றிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து கருவிகளை இறக்குமதி செய்தும், ஏற்றுமதி-இறக்குமதி வங்கி மூலம் கடன் பெற்றும் தொழில் செய்கிறவர்களுக்கு லாபம் கிடைக்கிறது. உள்நாட்டில் தயாராகும் சாதனங்களைப் பயன்படுத்துவதாலும், 13% வட்டியில் 10 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தும் வகையில் கடன் வாங்குவதாலும் உள்நாட்டுத் தயாரிப்பாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதைப் போன்ற குறைகள் சரி செய்யப்பட்டால் அரசின் இலக்கை எட்டுவது சாத்தியம் என்று தனியார் மின்னுற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் சூரிய ஒளி மின்னுற்பத்தி திட்ட வளர்ச்சியைப் பாராட்டும் விதமாக 225 கோடி டாலர்களை உதவித் தொகையாகத் தருவதாக சமீபத்தில் டெல்லி வந்த ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்செலா மெர்கெல் வாக்களித்திருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.

காற்றாலை சாதனை

காற்றாலை மூலம் கிடைக்கும் மின்னுற்பத்தி 24,000 மெகாவாட். உலகில் 5-வது இடத்தில் இருக்கிறது இந்தியா. காற்றாலை மூலமான மின்சார உற்பத்திக்கு அளித்துவந்த தேய்வுக் கழிமான வரிச் சலுகை திட்டத்தை அரசு திரும்பப் பெற்றதால் கடந்த 3 ஆண்டுகளாக இதில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் மின்சாரக் கொள்முதல் விலையும் ஊக்குவிப்பாக இல்லை. இதன் உற்பத்திக் கருவிகள் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும், முதலீட்டு ஊக்குவிப்பு வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டால் இது மேலும் உயரும்.

அத்துடன் கடற்கரைக்கு அருகில் கடலிலேயே காற்று அதிகம் இருக்கும் பகுதிகளில் அதிக உயரத்தில் காற்றா லைகளை அமைக்கும் (Off Shore Wind Mill Projects) பெருந்திட்டம் தொடங்கவிருக்கிறது. அது முழுச் செயல்பாட்டுக்கு வந்தால் காற்றாலை மூலமான மின்சார உற்பத்தி மேலும் பலமடங்கு அதிகரித்துவிடும்.

தமிழகம் முன்னணி

சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பில் தமிழகம் 2015-17-ல் முதலிடம் வகிக்கப் போகிறது. இப்போதிருக்கும் திறனுடன் 1,214 மெகா வாட் சேர்க்கப்படப் போகிறது. தெலங்கானா 1,166 மெகா வாட், மத்தியப் பிரதேசம் 432 மெகா வாட், ஆந்திரம் 350 மெகா வாட், ராஜஸ்தான் 50 மெகா வாட் என்று அடுத்த இடங்களில் உள்ளன.

தமிழகத்தில் சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பு அலகை வீடுகளில் பொருத்த அங்கீகாரம் பெற்ற முகமைகள் பற்றிய தகவல்களை, மின்சார வாரியத்தின் எல்லா அலுவலகங்களிலும் மக்கள் அறியும் வகையில் தெரியப்படுத்தினால் அரசின் மானியத்தைப் பெற்று சூரிய ஒளி மின்னுற்பத்தியில் மக்கள் ஈடுபடுவது அதிகரிக்கும். அரசும் அதிகாரிகளும் இதைப் பெரும் இயக்கமாக நடத்தினால் தமிழகம் இதிலும் இந்தியாவுக்கு வழிகாட்ட முடியும்.

- வ. ரங்காசாரி 
rangachari.v@thehindutamil.co.in


நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.