Tuesday, October 6, 2015

முதல்... முதல்... செல்பி! -இரா.சுப்பிரமணியன்

First Published : 06 October 2015 12:00 AM IST
உலகின் முதல் செல்பி!
உலகின் முதல் செல்பி சுமார் 175 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிலடெல்பியா நகரைச் சேர்ந்த ராபர்ட் கர்னலியஸ் 1839-ஆம் ஆண்டு தனது தந்தையின் கடைக்குப் பின்புறம் கேமராவை வைத்துவிட்டு, பிரேமுக்குள் வந்துவிட்டார். "கிளிக்'கிற்காக சுமார் 5 நிமிடம் வரை பொறுமையாகக் காத்திருந்ததாக ராபர்ட் தெரிவித்தாராம். சுமார் இரண்டு வருட காலம் மட்டுமே புகைப்படக் கலைஞராக திகழ்ந்த ராபர்ட், தனக்கு இப்படியொரு பெருமை வந்துசேரும் என்று 175 ஆண்டுகளுக்கு முன்பு கனவிலும் நினைத்திருக்கமாட்டார். பெரும் செல்வந்தராக வாழ்ந்த ராபர்ட், 83-ஆவது வயதில் காலமானார்.
முதலில் "செல்பி'ன்னு சொன்னவர்!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாதன் ஹோப் என்பவர் கடந்த 2002-ஆம் ஆண்டு மதுபோதையில் சிறிய விபத்தில் சிக்கியதால் அவரது உதட்டில் பெரியதாகக் காயம் ஏற்பட்டது. காயமடைந்த உதட்டைப் படம்பிடித்ததோடு மட்டுமல்லாது ""ஃபோகஸ் சரியில்லைன்னா மன்னிச்சுக்கோங்க, ஏன்னா இது ஒரு செல்பி'' அப்படீன்னு ஒரு வரியையும் சேர்த்து இணையத்தில் பரப்பி அதை அப்படியே விட்டுவிட்டார். நாளொரு செல்லாக வளர்ந்த செல்லுலகமும், பொழுதொரு வேகமாக வளர்ந்த இணையமும் கைக்கோர்த்துக் கொண்டதில் "செல்பி' என்ற வார்த்தை பரபரவென உலகம் முழுவதும் பரவியது. 2012-ஆம் ஆண்டிற்கான பிரபலமான சொற்களுள் ஒன்றாக செல்பியை "டைம்ஸ்' நாளிதழ் தேர்ந்தெடுத்தது. ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி 2013-ஆம் ஆண்டிற்கான சொல்லாக செல்பியை (Selfie) யைத் தேர்ந்தெடுத்தது. விளையாட்டாக தான் பயன்படுத்திய ஒரு வார்த்தை இந்த அளவுக்கு உலகப் புகழ்பெற்ற வார்த்தையாக ஆகும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார் நாதன் ஹோப்.
உலகின் முதல் விண்வெளி செல்பி
அமெரிக்க விண்வெளி வீரரான புஷ் ஆல்டிரின் கடந்த 1966-ஆம் ஆண்டு ஜெமினி 12 விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்றார். விண்வெளியில் பயன்படுத்தப்படும் உயஅ ( extra-vehicular activity) கேமரா மூலம் செல்பி எடுத்துள்ளார். சுமார் 49 வருடங்களாகப் பாதுகாக்கப்பட்ட இந்த செல்பி சமீபத்தில் லண்டனில் ஏலத்துக்கு வந்துள்ளது. 10 மணி நேரம் நடைபெற்ற இந்த ஏலத்தில் அந்த செல்பி ரூ.6 லட்சத்துக்கு விலைபோனது. எதிர்பார்க்கப்பட்ட தொகையைவிட 10 மடங்கு அதிகமாக அந்த செல்பி ஏலத்தில் விலைபோனது.
உலகின் முதல் செல்பி ஸ்டிக்
இங்கிலாந்தைச் சேர்ந்த அர்னால்டு ஹெலன் ஹாக் தம்பதியினர் திருமணமான ஓர் ஆண்டு கழித்து 1926-ஆம் ஆண்டு செல்பி ஸ்டிக் மூலம் செல்பி எடுத்துள்ளனர். இத் தம்பதியினரின் பேரன் தனது குடும்பப் புகைப்படங்களின் தொகுப்பிலிருந்து சமீபத்தில் இந்த செல்பியைக் கண்டெடுத்துள்ளார். இந்த செல்பி ஸ்டிக்குக்கு தனது தாத்தா காப்புரிமை பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அர்னால்டு ஹெலன் ஹாக் தம்பதியினரின் பேரன் கவலைப்பட்டாராம்.

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.