Sunday, October 11, 2015

ஒளவையாரின் அறிவியல் பார்வை !






ஒளவை - தனித்தன்மை படைத்தத் தண்டமிழ்க் கவிதாயினி. அவருடைய சொற்கள் எளிமையானவை; ஆனால், வலிமையானவை. இயல்பான எளிய நடையில் புதிய உவமைகளைக் கையாண்டு அரிய செய்திகளைக் கூறுவது ஒளவையின் சிறப்பு. அதுமட்டுமல்ல, தாவரவியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், உளவியல் ஆகிய துறைகளின் அறிவியல் செய்திகளைத் தம் பாடல்களில் பதிவு செய்துள்ளார்.

சொல்லாம லேபெரியர் சொல்லிச்செய் வார்சிறியர்
சொல்லியும் செய்யார் கயவரே! - நல்ல
குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில்
பலாமாவைப் பாதிரியைப் பார்!

இப்பாடலில், பெரியவர்கள் ஒரு நல்ல செயலைச் "செய்யப் போகிறேன்' என்று சொல்லிக் கொண்டிருக்காமல் செய்து காட்டுவார்கள். இவர்கள் பூக்காமல் காய்த்துக் கனி வழங்கும் பலா மரத்தைப் போன்றவர்களாம்.
சிறியவர்கள் "செய்யப் போகிறேன்' என்று கூறிக்கொண்டிருந்துவிட்டு பிறகு அதனைச் செய்து முடிப்பார்கள். இவர்கள் பூத்துக் குலுங்கி அதன் பிறகு காய்த்துக் கனியும் மாமரத்தைப் போன்றவர்களாம்.
கயவர்கள், ஒரு செயலைச் "செய்யப் போகிறேன்' என்று கூறிவிட்டு, அதனைச் செய்யாமல் விட்டுவிடுவார்கள். இவர்கள் பூ மட்டும் பூத்துவிட்டு பின்பு காய்க்காத பாதிரி மரத்தைப் போன்றவர்களாம்.
இவ்வாறு மூன்று வகையான மனிதர்களுக்கும் மூன்று வகையான மரங்களை உவமை காட்டியுள்ளார். பூக்கும் தாவரம், பூவாத் தாவரம், பூத்தும் காய்க்காதத் தாவரம் என வகைப்படுத்தியதோடு அவற்றை மனிதரின் செயல்களுக்கு உவமைப்படுத்தியுள்ளார். தாவரவியல் அறிந்தவர் மட்டுமே இவ்வாறு நுணுக்கமாக ஒப்பீடு செய்ய முடியும்.
"அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி
குறுகத் தரித்தக் குறள்' என்று கூறுமிடத்தில் அணுவைப் பற்றியும், அணுவைப் பிளப்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஒளவையின் இயற்பியல் அறிவையும் அறியமுடிகிறது.
"தண்ணீர் நில நலத்தால், தக்கோர் குணம் கொடையால்' என்ற பாடலில், நிலத்தின் தன்மைக்கேற்ப நீரின் சுவை வேறுபடும் என்னும் வேதியியல் கோட்பாட்டை அறியமுடிகிறது.

"வான் குருவியின் கூடு;
வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவருக்கும் செய்யரிதால்'

என்ற பாடலில் உயிரினங்களின் செயல்களைப் பாராட்டியுள்ளார். தூக்கணாங் குருவியின் கூடும், கரையான் எழுப்பும் புற்றும், தேனீயின் கூடும், சிலந்தியின் வலையும் மற்றவர்களால் செய்ய இயலாது என்று கூறுவதன் மூலம் விலங்கியல் கருத்துகளையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும்,

நாடா கொன்றோ! காடா கொன்றோ!
அவலா கொன்றோ! மிசையா கொன்றோ!
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!

என்ற பாடல் வாயிலாக ஒளவையின் உளவியலறிவு வெளிப்படுகிறது. நாடானால் என்ன? காடானால் என்ன? பள்ளமானால் என்ன? மேடானால் என்ன? எவ்விடத்தில் ஆண்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அங்குதான் நிலமும் நல்ல நிலமாகப் புகழடைகிறது என்கிறார். அதாவது, "நல்லோர் வாழுமூர் நல்லூர்' என்பது ஒளவையின் கருத்து.
தனிமனிதனின் உளவியலைப் பொருத்தே நிலவியல் அமைகிறது என்று ஒளவை கூறுவது சிறந்த உளவியல் கருத்தாகும். மேலும், இப்பாட்டில் நாடு என்று குறிப்பிடுவது மருத நிலம், காடு என்பது முல்லை நிலம், மேடு என்பது குறிஞ்சி நிலம், பள்ளம் என்பது நெய்தல் நிலம். ஆக, நால்வகை நிலங்களையும் குறிப்பிட்டுப் பாடியிருப்பது இப்பாட்டுக்கு மேலும் சுவை கூட்டுகிறது.
-கல்லைத் தமிழரசன்

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.