Sunday, October 11, 2015

கதவை அடைத்த தொலைக்காட்சிகள் , ஜன்னலையாவது திறந்து வைக்குமா?


ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகிய முன்னணிக் கதாநாயகர்கள் நடிக்கும் படங்கள் பேச்சுவார்த்தையில் இருக்கும்போதே அவற்றின் தொலைக் காட்சி உரிமைக்காக எனக்கு, உனக்கு என இன்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டிபோடவே செய்கின்றன. ஆனால், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், ஆர்யா, ஜெயம் ரவி போன்று வியாபார ரீதியாக அடுத்த நிலையில் இருக்கும் நடிகர்களின் படங்களைக்கூட இயக்குநர்கள் யார் என்று பார்த்துத்தான் தொலைக்காட்சிகள் வாங்க விரும்புகின்றன.

திணறும் சிறு படங்கள்

ஒரு படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கும்முன்பு தொலைக்காட்சி நிறுவனங்கள் டி.ஆர்.பி. என்ற கணக்கைத்தான் முதலில் பார்க்கின்றன. டி.ஆர்.பி.யை எகிற வைக்க எந்தப் படத்தை வாங்கலாம் என்பதில்தான் தற்போது ஒரு படத்தின் தொலைக் காட்சி உரிமை விற்குமா விற்காதா என்ற சூட்சுமம் அடங்கியிருக்கிறது. சிறு முதலீட்டுப் படங்களை எந்த ஒரு தொலைக்காட்சியும் வாங்குவதற்கு முன் வருவதே இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியான படங்களில், கிட்டத்தட்ட 200 படங்களின் தொலைக்காட்சி உரிமையை வாங்க ஆளில்லை. சிறு முதலீட்டு படங்களைப் பொறுத்தவரை, படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றால்தான் தொலைக்காட்சி உரிமையால் வருமானம் இருக்கிறது என்ற நம்பிக்கை வரும் என்கிறார்கள்.
]
பறிபோன இடம்

ஏன் இந்தத் தலைகீழான நிலை? சில முன்னணித் தொலைக்காட்சி நிறுவனங்களைப் பொறுத்தவரை, சிறு முதலீட்டுப் படங்களுக்குப் பதிலாக மெகா தொடர்கள் மூலமாகவே நல்ல டி.ஆர்.பி. கிடைக்கிறது. இதனால், இந்தத் தொலைக்காட்சிகள் மெகா தொடர்களுக்கு முன்பைவிட அதிக முக்கியத்துவமும் இடமும் தர ஆரம்பித்துவிட்டன. இதற்குச் சமீபத்திய உதாரணம், சன் டி.வி.யில் சனிக்கிழமைகளில் மாலைநேர பிரைம் டைம் ஸ்லாட்களில் ஒளிபரப்பப்பட்டுவந்த திரைப்படங்களுக்கான இடம் தற்போது தொடர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தி மொழி மெகா தொடர்கள் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இங்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

தேவைக்கு மீறிய உற்பத்தி

ஒவ்வோர் ஆண்டும் பெரிய மற்றும் நடுத்தர அளவில் ஆதிக்கம் செலுத்தும் தொலைக்காட்சிகள் எத்தனை படங்களை வாங்கப் போகிறோம் என்று முடிவு செய்து பட்ஜெட்போட்டுத் தொகையை ஒதுக்குவார்கள். ஒரு பெரிய தொலைக்காட்சி 100 கோடி ரூபாயை ஒதுக்குகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்தப் பணம் பெரிய நடிகர்களின் படங்களை வாங்குவதற்கே சரியாக இருக்கிறது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு விஜய், அஜித் படங்கள் எல்லாம் 4 அல்லது 5 கோடி ரூபாயைத் தொலைக்காட்சி உரிமையாகப் பெற்றன. தற்போதைய விஜய், அஜித் படங்களின் தொலைக்காட்சி உரிமை சுமார் 20 கோடி ரூபாய்க்கும் அதிகம். சமீபத்தில் வெளியான ரஜினி படமான ‘லிங்கா’வின் தொலைக்காட்சி உரிமத்தின் தொகைதான் மிகவும் அதிகம் என்கிறார்கள். இது சுமார் 33 கோடிக்குப் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு பெரிய படங்களை வாங்குவதிலேயே 100 கோடியையும் காலி செய்தால், சிறு முதலீட்டுப் படங்கள், இரண்டாம் நிலைக் கதாநாயகர்களின் படங்களை வாங்குவதற்குப் பணம் எங்கிருந்து வரும்?
தொலைக்காட்சி நிறுவனங்களின் டி.ஆர்.பி.யை ஏற்றுவதற்குப் பெரிய நாயகர்கள் நடித்த 15 படங்கள் ஓராண்டுக்குப் போதுமானது. ஒரு பெரிய படத்தை வாங்கிவிட்டால் பண்டிகை நாட்களில் ஒளிபரப்புகிறார்கள். பிறகு அதே படங்களை ஞாயிற்றுக் கிழமைகளில் மீண்டும் ஒளிபரப்பிக்கொள்வார்கள்.

படங்களின் எண்ணிக்கை தேவைக்கு அதிகமாக இருப்பது படங்கள் விலை போகாததற்கு முக்கியமான காரணம். ஒரு ஆண்டுக்குக் குறைந்தது 200 என்ற அளவில் உற்பத்தி செய்யப்படும் திரைப்படங்கள் திரையரங்குகளின் தேவையை மீறி மிதமிஞ்சிக் கிடக்கின்றன. தொலைக்காட்சிகளுக்கோ ஓராண்டுக்குத் தேவைப்படும் படங்களின் எண்ணிக்கை 15-ஐத் தாண்டியதில்லை. தொலைக்காட்சி உரிமை மூலம் கிடைக்கும் வருமானம் வீழ்ந்துவிட்டதற்கு இது முக்கியக் காரணம் என்கிறார்கள்.

மாறி வரும் ரசனை

பெரும்பாலும் இரவு நேரங்களில் மெகா தொடர்களிலேயே மக்கள் தங்களது பொழுதைக் கழிக்க நினைக்கிறார்கள். குடும்பத்துடன் மெகா தொடர்களைப் பார்ப்பதும் அதை விவாதிப்பதும் என்று தொடர்களின் மீதான ஈடுபாடு அதிகரித்துவருகிறது என்கின்றன டி.ஆர்.பி.யை மதிப்பிட்டுத் தரும் தனியார் நிறுவன வட்டாரங்கள். அதிகமான எண்ணிக்கையில் படங்கள் வெளியாவதால், “நான் உன் படத்தைப் பார்க்க வருகிறேன். என்னை ஈர்க்க உன் படத்தில் என்ன இருக்கிறது?” என்பதுதான் தற்போதைய சினிமா பார்வை யாளர்களின் கேள்வியாக இருக்கிறது. பல படங்கள் இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறிவிடுகின்றன. இதனால் திரையரங்கு சென்று படம் பார்ப்பது வீண் என்ற மனநிலை உருவாகிவருகிறது. இந்த மனநிலை தரமாகவும் சுவையாகவும் இருக்கும் பல சிறு முதலீட்டுப் படங்களையும் பாதித்துவிடுகிறது. திரையரங்குக்கு வருவதற்கே உற்சாகம் குன்றிய சூழலில் இந்தப் படங்கள் அடிவாங்குகின்றன. திரையரங்கு வழியே ரசிகர்களைக் கவர முடியாத சூழ்நிலை உருவாகிவிட்டது.

கிடுக்கிப்பிடி

திரையரங்கு வழியே கவனம் பெறாத தரமான சிறு படங்களைத் தொலைக்காட்சி கள் உதாசீனப்படுத்துவதன் பின்னணியில் ரசிகர்களின் இந்தப் புறக்கணிப்புக்கும் முக்கியப் பங்கிருப்பதை மறுக்க முடியாது. திரையரங்குக்குச் செல்லும் ஆர்வம் குறைந்துவரும் நிலையில் தொலைக்காட்சிகளும் புறக்கணித்தால் சிறு முதலீட்டுப் படங்களால் என்ன செய்ய முடியும்? தொலைக்காட்சிகள் இவற்றை புறக்கணிக்காமல் இருக்கத் தயாரிப்பாளர் சங்கம் அதிரடியான ஒரு கிடுக்கிப்பிடியை போட்டிருக்கிறது. 16 சிறுமுதலீட்டுப் படங்களின் பட்டியலைத் தயாரித்து அவற்றிலிருந்து பத்து படங்களை கட்டாயமாக வாங்க வேண்டும் என்று தனியார் தொலைக்காட்சிகளுக்கு நிர்பந்தம் கொடுத்திருக்கிறது. சினிமாவையும் சினிமா நட்சத்திரங்களையும் நம்பியே தங்களது பெரும்பாலான நிகழ்ச்சிகளை வடிவமைத்துக் கொண்டு பார்வையாளர்களைக் கவரும் தொலைக்காட்சிகள், தயாரிப்பாளர் சங்கத்தின் இந்தக் கோரிக்கையை நிராகரிக்க முடியாது என்று திரையுலகம் நம்புகிறது. சிறு படங்களுக்கு கதவை அடைத்த தொலைக்காட்சிகள் ஜன்னலையாவது திறந்து வைக்குமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.