Monday, October 12, 2015

பழங்கால சமணக் கோயில்கள் மற்றும் கல்வெட்டுகள் குறித்த ஒளிப்பதிவு ஆவணம்


தமிழகத்திலுள்ள பழங்கால சமண கோயில்கள் மற்றும் கல்வெட்டுகள் குறித்த ஒளிப்பதிவு ஆவணத்தை, புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ளது.
புதுச்சேரியில் இயங்கி வரும் பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் பல்வேறு மொழி, வரலாற்றுக் கோயில்கள், ஓலைச்சுவடி குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தும் விதமாக, புதுச்சேரி அன்றும்-இன்றும், பைரவர், தஞ்சை தாராசுரம் கோயில் தொடர்பான ஆய்வுகள் இடம்பெற்ற ஒளிப்பதிவு ஆவணத்தை குறுந்தகடு (சி.டி.) வடிவில் தயாரித்துள்ளது.
தற்போது இந்நிறுவனம் சமணாóகளின் கோயில்கள் மற்றும் குகைக் கோயில்கள், கல்படுக்கைகள் பற்றி முழு ஆய்வை கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொண்டு, அவற்றை ஒளிப்பதிவு ஆவணமாக தயாரித்துள்ளது.
இதுகுறித்து பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் முருகேசன் கூறியது: இந்த ஒளிப்பதிவு ஆவணத்தில், தமிழ் நாட்டிலுள்ள சமணம் சார்ந்த 459 இடங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் 120 சமணக் கோயில்கள், குகைக் கோயில்கள், 500 கல்வெட்டுகள், சமணர்கள் படுத்திருந்த கற்படுக்கைகள், சமணர்களின் 13 வகை பண்டிகைகள், 7,873 அபூர்வப் படங்கள் இடம்பெற்றுள்ளன.
புகைப்படங்களில் சமணக் கோயில், குகைக் கோயில், பாழடைந்த கோயில்கள் இடம் பெற்றுள்ளன. சமணர்களின் தலங்கள் தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை வேலூர், நாமக்கல், கரூர், மதுரை, புதுகை, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகளவில் உள்ளன.
வட தமிழகத்தில் கோயில்களும், தென் தமிழகத்தில் குகைகளும் அதிகம் உள்ளன. சமண கோயில்கள் பல மறைந்து விட்டன. மலைகளில் இருந்த தலங்கள், பாறைகள் உடைத்து அகற்றப்பட்டதால் காணாமல் போய் விட்டன.
சமணக் கோயில்கள் தொடர்பான ஒளிப்பதிவு ஆவண தயாரிப்புக்கு புதுச்சேரியைச் சேர்ந்த உக்காமிசந்த் ஜெயின், அகில இந்திய திகம்பரர் ஜெயின் கூட்டமைப்பைச் சேர்ந்தோர் நிதி உதவி தந்தனர்.
அத்துடன் பிரான்ஸிலுள்ள ஆர்கஸ் அமைப்பு, புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் ஆகிய அனைவரும் இணைந்து ரூ. 90 லட்சம் நிதி அளித்தனர். அதன் அடிப்படையில் இப்பணிகளை பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் செய்து தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. விரைவில் குறுந்தகடு வெளியாகும் என்றார் முருகேசன்.
நன்றி :-தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.