Tuesday, October 6, 2015

இந்தியாவின் கள்ள மவுனம் -பழ. நெடுமாறன்

 


இன அழிப்புக் குறித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சாசனத்தில் இலங்கை கையெழுத்திட வேண்டும்.

 போர்க் குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம், இன அழிப்பு மற்றும் கடத்திச் சென்று காணாமல் போதல் ஆகியவை கடுமையான குற்றங்கள் ஆகும் என இலங்கை அரசு சட்டமியற்ற வேண்டும்
.
 விடுதலைப் புலிகளிடம் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் இலங்கை இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் தற்போது எங்குள்ளார்கள்? அவர்களின் நிலை என்ன? என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். 

 பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக இலங்கை அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

 இராணுவம் ஆக்கிரமித்துள்ள தனியார்களின் நிலங்கள் உரியவர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும். 

 இலங்கையில் மனித உரிமை நிலவரங்களை கண்காணிப்பதற்காக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கிளை ஒன்றை நிரந்தரமாக நிறுவுமாறு இலங்கை அரசு அழைக்க வேண்டும். 

 புலனாய்வு பிரிவுகள் உள்பட இலங்கை ஆயுதப்படைகளின் கட்டளைச் சங்கிலியில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் யார் என்பது பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.

 -ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அமைத்த விசாரணைக் குழு அளித்தப் பரிந்துரைகளில் முக்கியமானவை மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மேலும் உணவு, மருந்து ஆகியவற்றையும் ஆயுதமாக இலங்கை அரசு பயன்படுத்தியது, மருத்துவமனைகள் குறிவைத்துத் தாக்கப்பட்டன, சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 ஆனாலும், அமெரிக்கா, பிரிட்டன், சீனா, இரஷ்யா போன்ற நாடுகள் மேற்கண்ட கொடுங் குற்றங்களைப் புரிந்தவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகளாக நிறுத்தி விசாரித்து உரிய தண்டனைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்துவதற்குப் பதில் இலங்கை அரசே இதுகுறித்து விசாரிக்கலாம் எனக் கூறியதை மற்ற நாடுகளின் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டு ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. 

 கடந்த காலத்தில் 1963-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை 18 விசாரணைக் கமிசன்களை இலங்கை அரசு அமைத்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்தே ஆகும். 

 கடைசியாக நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிசன் காணாமல் போனவர்களைப் பற்றியதே ஆகும். ஆனால், போர்க் குற்றங்கள் குறித்தும் இந்தக் கமிசன் விசாரிக்கலாம் என இலங்கை அரசு கூறியது.

 ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் ஜெயிட் அளித்த விசாரணை அறிக்கையில் காணாமல் போனவர்கள் குறித்து இலங்கை அரசு அமைத்த விசாரணைக் கமிசனின் மீது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நம்பிக்கையில்லை. எனவே, இதன் அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

 இலங்கை அரசு அமைத்த விசாரணைக் கமிசன் மீது நம்பிக்கை இன்மையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரே தெரிவித்த பிறகும், போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையை இலங்கை அரசிடமே ஒப்படைப்பது என அமெரிக்காவும் பிற நாடுகளும் முடிவு செய்திருப்பது நகைப்பிற்கிடமாகும்.

 இலங்கை குடியரசுத் தலைவராக சிறீசேனா பதவியேற்றப் பிறகு நிலைமை மாறியிருப்பதாகவும் திருந்திவருவதாகவும், அமெரிக்கா வாதாடுகிறது. ஆனால் உண்மை என்ன?

 ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கையில் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட முக்கியமானவர்களின் பட்டியல் இடம்பெற்றிருந்தது. மேலும், இலங்கைக்கு எதிராக பல கடுமையானக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. 

 ஆனால், தன்னுடைய அரசு இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தியது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால் இவற்றை தடுத்திருக்க முடியாது என்று இலங்கை அதிபர் சிறீசேனா கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதியன்று நடைபெற்ற இலங்கை பத்திரிகையாசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் கூட்டத்தில் கூறினார்.

 இலங்கையின் பிரதமரான இரணில் விக்கிரம சிங்கா சர்வதேச விசாரணையை அனுமதிப்பது என்பது இலங்கையின் நீதித் துறையை அவமதிப்பதாக அமையும். எனவே, ஒருபோதும் சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் பதவியை ஏற்றவுடனே அறிவித்திருந்தார். 

 2009-ஆம் ஆண்டு போர் உச்சக்கட்டமாக நடைபெற்றக் காலத்தில் நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த இராசபக்சே அப்பதவியின் அடிப்படையில் முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் திகழ்ந்தார். தற்போதைய குடியரசுத் தலைவரான சிறீசேனா போரின் இறுதிக் கட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
 இராணுவத்தின் தலைமைத் தளபதியாகத் திகழ்ந்த பொன்சேகா, முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களைக் கொடூரமான முறையில் கொலை செய்த 57-ஆவது படைப்பிரிவிற்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மற்றும் பல்வேறு படைப்பிரிவுகளின் தளபதிகளும் அந்தப் போரில் நிகழ்த்தப்பெற்ற இனப்படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றிற்கு இவர்களும் பொறுப்பேற்க வேண்டியவர்களே.

 ஆனால், தண்டிக்கப்படவேண்டிய சிறீசேனா குடியரசுத் தலைவராகிவிட்டார். தலைமைத் தளபதி பொன்சேகாவிற்கு பீல்டு மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டு அவர் பெருமைப்படுத்தப்பட்டுள்ளார். ஜெகத் டயஸ் இராணுவத்தின் தலைமைத் தளபதியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். மற்றத் தளபதிகளும் அவ்வாறே பதவி உயர்வுகளும் விருதுகளும் பெற்றுள்ளனர். 

 கொடிய குற்றங்களைப் புரிந்தவர்கள் இப்போது மிக உயர்ந்த பதவிகளில் வீற்றிருக்கிறார்கள். இவர்களை உள்நாட்டு விசாரணைக்கு உட்படுத்தினால் என்ன நடக்கும்? எதுவும் நடக்காது. அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு தண்டனை பெறவேண்டியவர்கள் தப்பித்துவிடுவார்கள். 

 அமெரிக்காவின் போக்கில் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? 

 கடந்த காலத்தில் 2012, 2013, 2014-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டங்களில் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அமெரிக்கா, அதற்காக விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என வற்புறுத்தி, அத்தகைய ஆணையத்தை அமைத்து, அந்த ஆணையமும் இலங்கை அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தும் அறிக்கையை அளித்தப் பிறகு, சர்வதேச நீதி விசாரணை மன்றம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்த வேண்டிய அமெரிக்கா, தனது போக்கை தலைகீழாக மாற்றிக்கொண்டு இலங்கை அரசே விசாரணை நடத்தினால் போதும் எனக் கூறுவதற்குப் பின்னணி என்ன?

 இந்துமாக் கடலில் முக்கிய இடத்தில் இலங்கை அமைந்திருக்கிறது. இலங்கையை எந்த நாடு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறதோ அந்த நாடு இந்தியாவையும் கட்டுப்படுத்த முடியும். தென்னாசிய நாடுகளையும் கட்டுக்குள் கொண்டுவர முடியும். 

 எல்லாவற்றிற்கும் மேலாக இந்துமாக்கடல் அதனுடைய கண்காணிப்பு வளையத்திற்குள் வந்து சேரும். இந்த நோக்கத்துடன் அமெரிக்கா இலங்கையில் சீன ஆதிக்கத்தை கொண்டுவந்த இராசபக்சேயை அகற்றிவிட்டு சிறீசேனாவை கொண்டுவருவதற்கு மறைமுகமான உதவிகள் அத்தனையும் செய்தது. அது விரும்பியபடியே ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டப் பிறகு, அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுவிட்டது.

 ஆதிபத்திய நாடான அமெரிக்கா தனது நோக்கத்தை மாற்றிக்கொண்டதில் வியப்பில்லை. ஆனால், காந்தியடிகளை தேசத் தந்தையாகக் கொண்ட இந்தியாவின் பிரதிநிதி தனது மிக அண்மையில் உள்ள ஒரு நாட்டில் நடைபெற்ற இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் ஆகியவை குறித்துப் பேசாமல் 13-ஆவது சட்டத் திருத்தத்தை வலியுறுத்திப் பேசியது, இப்பிரச்னையிலிருந்து நழுவிச் செல்லும் முயற்சியே ஆகும். 

 பேச வேண்டிய நேரத்தில் பேசவேண்டியதை பேசாமல் பிரச்னைக்கு சம்பந்தம் இல்லாமல் பேசுவதும் ஊமை போல வாய்மூடி கிடப்பதும் ஒன்றுதான்.

 உலகில் எந்தவொரு நாட்டிலும் எந்த இன மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக சுதந்திர இந்தியா குரல் கொடுத்தது. அதற்குக் காரணம், முதலாவது பிரதமர் நேரு ஆவார். 
 எடுத்துக்காட்டாக, தென்னாப்பிரிக்காவில் கருப்பர்களுக்கு எதிரான நிறவெறிக் கொள்கையை வெள்ளை அரசு கடைப்பிடித்தபோது அந்த அரசை காமன்வெல்த் அமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என ஓங்கி ஒலித்து வெளியேற்றியப் பெருமை நேருவையே சாரும்.
 அதைப்போல, அவரது மகள் பிரதமர் இந்திரா காந்தி வங்கதேச மக்கள் பாகிஸ்தான் இராணுவத்தின் இனப்படுகொலைகளுக்கு ஆளானபோது, இந்திய இராணுவத்தை அனுப்பி வங்கதேசம் விடுதலைப் பெற உதவினார்.

 வியட்நாம், பாலஸ்தீனம், சூயஸ் கால்வாய் பிரச்னை, கொரியப் பிரச்னை போன்ற உலகப் பிரச்னைகளில் ஆதிக்க நாடுகளுக்கு எதிராக அஞ்சாமல் குரல் கொடுத்த இந்தியாவின் குரல் இப்போது அடங்கிப்போனது ஏன்? 

 ஈழத் தமிழரின் கதறலும் அவர்களுடன் தொப்புள் கொடி உறவு பூண்ட தமிழக மக்களின் ஓலக் குரலும் செவிப் பறைகளைக் கிழித்தபோதிலும் எதுவும் நடவாதது போல இந்தியா கள்ள மவுனம் சாதிப்பது ஏன்? ஏன்?

 வியட்நாம், பாலஸ்தீனம், சூயஸ் கால்வாய் பிரச்னை, கொரியப் பிரச்னை போன்ற உலகப் பிரச்னைகளில் ஆதிக்க நாடுகளுக்கு எதிராக அஞ்சாமல் குரல் கொடுத்த இந்தியாவின் குரல் இப்போது அடங்கிப்போனது ஏன்? ஈழத் தமிழரின் கதறலும், தமிழக மக்களின் ஓலக் குரலும் செவிப் பறைகளைக் கிழித்தபோதிலும் இந்தியா கள்ள மவுனம் சாதிப்பது ஏன்?
நன்றி ; தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.