Tuesday, October 13, 2015

தாய்மொழி வழிக் கல்விக்கு ஈடு இல்லை !

Dinamani

நாங்க பிழைக்கவே முடியாதா இங்கிலீஷ் தெரிஞ்சாதான் பிழைக்க முடியுமா என்ற அந்தக் கிராமத்து மாணவியின் கேள்வி என் மனசாட்சியை உலுக்கியது. தமிழ்வழி படித்து வந்த மாணவர்கள் இன்று ஆங்கில முலாம் பூசப்பட்ட சமூகத்தைப் பார்த்து மிரண்டு நிற்கும் நிலை.

அன்று வெள்ளைக்காரன் போட்டு விட்ட கோட்டு இன்றும் கழற்ற முடியாமல் காலனியத்தின் எச்சமாய் அப்படியே நிலைத்து பரவியும் விட்டது. தமிழரின் வேட்டியும், துண்டும் விடை பெறத் தொடங்கிவிட்டது.

சமீபத்தில் கல்லூரிகளில் அறக்கல்வி கற்பித்தல் குறித்த ஆய்வை மதுரையில் உள்ள கல்லூரிகளில் மேற்கொண்ட போது ஆங்கிலம் தென் தமிழக மாணவர்களை எந்த அளவுக்கு மிரட்டி வைத்துள்ளது என்பது தெரிந்தது. கலை - அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு சேர்பவர்களில் 80 சதவீதத்தினர் தமிழ் வழி பயின்றவர்களே. மேலும், இவர்கள் அனைவருமே பொருளாதர ரீதியாகப் பின்தங்கியவர்கள். ஆங்கில மொழித்திறன் இல்லாமையால் பல மாணவர்களின் கல்வி வளர்ச்சி மட்டுமல்ல, வேலைவாய்ப்புகளும் தடைபடுகின்றன என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிந்தது.

பரிசோதனை முயற்சியாக எங்கள் தத்துவத்துறையில் பாடங்களை தமிழ் வழியில் நடத்தி, தமிழில் தேர்வுகள் எழுதலாம் என்று விதிகளைத் தளர்த்தியபோது வெளிப்பட்ட மாணவர்களின் நுணுக்கமான புரிதல் சக்தியும், தொடர்பாற்றலும் அசர வைத்தது. என்னுடைய 35 ஆண்டு கால ஆசிரியர் பணியில் மிகத் தெளிவாகப் புரிந்த விஷயம் என்னவென்றால் தாய்மொழி வழிக் கல்விக்கு ஈடு இல்லை என்பதே. ஆனால், உண்மை நிலை மாறாக உள்ளது.

பலரும் நம்புகிறார்கள் ஆங்கில வழிக் கல்வியே வாழ்வை உயர்த்தும் என்று. பெற்றோரில் பெரும்பாலானோர் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் குழந்தைகளைப் படிக்க வைக்கக் கூட ஆங்கில மழலைப் பள்ளிகள் நூற்றுக்கணக்கில் தோன்றிவிட்டன. 

இப்படிப்பட்ட ஆங்கிலக் கல்வி வழியாக கடந்து வந்த மாணவர்கள் இன்று தமிழில் எதையும் இலகுவாகப் படிக்க இயலாத சோகம். உண்மையிலேயே தமிழ்நாடு ஆங்கில நாடாக மாறிவிட்டதா? ஆங்கில வழிக் கல்வி கற்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும், எழுதும் திறன் பெற்றுவிட்டார்களா என்று கேட்டால் இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும். இதற்குக் காரணம் பெரும்பாலான ஆங்கில வழிக் கல்விக் கூடங்கள், தனியார் நிறுவனங்களாகும். அவற்றிலும் பெரும்பாலானவை லாப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவை. இதில் நூற்றுக்கணக்கான கல்லூரிகளும் அடக்கம். பல கல்லூரிகளில் பெருவாரியான ஆசிரியர்களால் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதும், பிழையில்லாமல் எழுதுவதும் இயலாத நிலை. இதில் மாணவர்களால் மட்டும் எப்படி முடியும்? இந்நிலையில் தான் நாம் ஆங்கிலப் புலமை பெறுவதைப் பாராட்டி வருகிறோம்.

தமிழ் வழி கற்றல் என்பது அதிக அளவில் ஆதரவு பெறாமல் இருக்க முக்கியமான காரணம்: தமிழ் வழியில் படித்தால் நல்ல வேலை கிடைக்காது என்ற கருத்து பரவலாக இருப்பதே ஆகும். கல்வியானது ஆரோக்கியமான மனிதனை உருவாக்கும் என்பதை விட நல்ல சம்பளத்திற்கான வழி என்ற நம்பிக்கை பலப்படுத்தப்பட்டுவிட்டது இன்று. அதிலும் ஆங்கில வழிக் கல்வியே சிறந்த ஊதியத்தைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை. மேலும், தமிழ் வழியாக கல்வியின் பல்வேறு புலங்களை படிக்க இயலாது, அதற்கான சாத்தியப்பாடுகளும் இல்லை என்ற நிலையும் மற்றுமொரு காரணமாகும்.

55 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இஸ்ரேல், தங்கள் நாட்டு உயர் கல்வியை அவர்கள் தாய்மொழியில் மட்டும் வழங்குகிறது. அனைத்துப் புலங்களுக்கும் தேவையான நூல்களையும் அவர்கள் மொழிபெயர்த்துள்ளனர். இதன் பலனாக கடந்த 50 ஆண்டுகளில் அறிவியலில் மட்டும் அந்நாட்டைச் சேர்ந்த 10 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர். உலக நாடுகளிலெல்லாம் அந்தந்த நாடுகளின் தாய்மொழியில்தான் கல்வி அமைந்திருக்கிறது. ரஷியாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்றால், முதல் ஆறு மாதங்கள் ரஷிய மொழி பயின்றாக வேண்டும். உலகின் மக்கள் தொகையில் சுமார் எட்டு விழுக்காடுகள் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆங்கிலம் படித்தால் உலகமெங்கும் வேலைவாய்ப்பு என்பதும் உண்மையல்ல.

கர்நாடக மாநிலத்தில் 5-ஆம் வகுப்புவரை அவரவர் தாய்மொழியில் மட்டுமே கல்வி கற்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளதாம். ஆனால், தமிழ் நாட்டிலே தமிழக அரசு 2011 முதல் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலவழிக்கல்வியைத் தொடங்க முடிவு செய்தது. 2015-16}ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஆசிரியர் பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பில் ஆங்கிலவழிக் கல்வியைத் தொடங்க அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இங்கு உயர்நீதிமன்றத்தில் கூட தமிழில் வாதாடுவது அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலை இப்படியே நீடிக்கும் என்றால் ஐ.நா. சபை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருப்பது போல 2050-ஆம் ஆண்டில் உலகின் அழியக் கூடிய மொழிகளில் தமிழும் ஒன்றாக ஆகிவிடுமோ என்று மொழியியல் வல்லுநர்கள் ஐயுறுகின்றனர்.
 உண்மையில் பார்த்தால் ஆங்கிலமே தெரியாமல் அறிவியலும், கணிதமும், தத்துவமும், தாய்மொழியில் கற்று அந்தந்தத் துறைகளில் வெற்றி கண்டவர்கள் எராளம் பேர். ஆனால், தமிழ்நாட்டில் தாய்மொழியில் இவற்றைப் பயில்வது கேவலம் என்று பொதுபுத்தியில் வளர்க்கப்பட்டுள்ளது. தாய்மொழி வழிக்கற்றலின் மூலம்தான் புதிய கண்டுபிடிப்புகள் எளிதாக சாத்தியப்படும். புதிய கருவிகளை, இயந்திரங்களை உருவாக்கம் செய்து உலகோடு போட்டியிட இயலும். 

1948-லிருந்து தமிழக அரசு கல்லூரிக் கல்வியைத் தமிழில் வழங்க சில முயற்சிகளை எடுத்தது என்றாலும், இன்றுவரை அது முழுமையாகக் கைகூடவில்லை. பயிற்று மொழியை மாணவர்களின் விருப்பத்திற்கு அதாவது பெற்றோர்களின் விருப்பத்திற்கு விட்டு விட்டதால், தமிழ் ஒன்றே பயிற்று மொழி என்ற நிலை ஏற்படவில்லை. தமிழ் வழிக் கல்வி என்பதை கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படுத்தாமல், நடைமுறைக்கு ஏற்றது என்ற வகையில் அரசு செயல்படுத்தியதால் அது வெற்றி பெறவில்லை.

தமிழகத்தில் அறிவியல் தொழில் நுட்பக் கலைச் சொற்களை அறிந்து உருவாக்கப்பட்ட அகராதிகளும் போற்றப்படாமல் போயின. இதற்கு அவற்றின் தரம் குறைவாக இருப்பதே காரணம் என்று சொல்லப்பட்டது. 

2010-ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் சிவில், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகளை தமிழிலே அறிமுகப்படுத்தி இன்று சுமார் 1,380 இடங்கள் தமிழ்வழியில் பொறியியல் படிக்க வழி செய்துள்ளது. சிறந்த பாட அறிவைப் பெற்றும் இவ்வழி வந்த மாணவர்கள் வளாகத் தேர்வுகளில் அவ்வளவாக வெற்றி பெற இயலவில்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எந்தத் துறையின் ஆய்வேட்டையும் தமிழில் எழுதி சமர்ப்பிக்கலாம் என்ற விதி கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம். தமிழ்நாட்டில் எல்லா புலங்களுக்கான கல்வியும், அறிவும் தமிழ் மொழியிலேயே இருந்தன என்பதற்கான பல்வகைச் சான்றுகள் உள்ளன. உலகத்தினரே வியக்கும் தஞ்சை பெரிய கோயில், கல்லணை, பல கோயில் கோபுரங்கள், நகர அமைப்புகள், அரண்மனைகள் ஆகியவை தமிழ் வழி அறிவினால்தானே சாத்தியமாயிருக்கும். மேலும் பருவநிலை வானியல் அறிவு, கடல் நீரோட்ட அறிவு, கப்பல் கட்டுதல் நுட்பம், ஒற்றைக்கல் பெரும் சிற்பக்கலைகள் போன்ற பல்வகை தமிழ் அறிவாற்றலுக்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. தமிழ் மருத்துவத்தின் பழைமையும், அதன் சிறப்பும் நாம் அறிந்ததே. எனவே, இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிகேற்பவும், வணிகத்திற்கு ஏற்பவும் தமிழ் வழிக் கல்வி என்பது சாத்தியமாகாத ஒன்றல்ல. ஆங்கில வழிக் கற்றல்தான் தொழிலுக்குத் தேவையான அறிவையும், கெüரவத்தையும் கொடுக்கும் என்பது மாயைதான். இப்படி ஒரு மாயத்தோற்றம் உண்டானதற்கு முக்கியக் காரணம் நம் தமிழகத்தில் இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தை சிறப்பாக கற்றுக் கொடுக்காததும் ஆகும்.

இரண்டாம் மொழியாக பல நாடுகளில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப்படுவதற்கும், இங்கு கற்றுக் கொடுக்கப்படுவதற்கும் தரத்தில் வேறுபாடு உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. மேலை நாடுகளில் ஒருவர் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்றபின், ஆங்கிலத்தில் நூல் எழுதும் அளவிற்கு திறமை பெறுகிறார். ஆனால், இங்கு நிலைமை மோசம். இங்கும் அப்படி ஆங்கிலத்தைத் தரமாக இரண்டாம் மொழியாக கற்பித்தால் அது நல்ல தொடர்பு மொழியாக அமையும்.

இன்று தமிழ் வளர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை போதுமானதாக இல்லை. விக்கிபீடியாவில் ஆங்கிலத்தில் ஏராளமான தகவல்கள் தரமாகக் கொடுக்கப்படுகின்றன. தமிழ் விக்கிபீடியா நமக்கு அதற்கான இடத்தைக் கொடுத்தும், இன்னும் தரமான கட்டுரைகள் வரவில்லை.

இன்று தமிழ் வழிக் கல்வி என்பது அரசு பள்ளிகளில் மட்டும் காணப்படுகிறது. அங்கே பெரும்பாலும் ஏழை எளியோரே பயில்கின்றனர். அவர்களும் வேறு வழியில்லை என்பதற்காக தமிழில் பயிலும் நிலை. தமிழ் வழிக் கல்வி என்பது வெறும் மொழிப் பிரச்னை அல்ல. அது சமூக நீதி குறித்தப் பிரச்னை. அரசுப் பள்ளிகளின் அடிப்படை சமூக நீதியாகும். அதை மெதுவாக புறம்தள்ளும் வகையில் ஆங்கிலப் பள்ளிகள் (தரம்பற்றி கவலையில்லா) எண்ணிக்கையில் பெருகி வருகின்றன. அரசும் ஆங்கில வழி வகுப்புகளை நாளும் புதிது புதிதாகத் தொடங்கி வருகிறது.

தமிழ்மொழிக் கல்வியைத் தராமல் மறுத்தால் வருங்கால தலைமுறைகள் தமிழ் கற்க முடியாமல் திணறுவர். பண்பாட்டிலிருத்தும், தாய் மண்ணிலிருத்தும் அந்நியப்படுவர்.

கல்வியானது ஆரோக்கியமான மனிதனை உருவாக்கும் என்பதை விட நல்ல சம்பளத்திற்கான வழி என்ற நம்பிக்கை பலப்படுத்தப்பட்டுவிட்டது. அதிலும் ஆங்கில வழிக் கல்வியே சிறந்த ஊதியத்தை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை.

நன்றி :- பேராசிரியர்- இரா.முரளி


0 comments:

Post a Comment

Kindly post a comment.