Tuesday, October 13, 2015

சாகித்ய அகாதெமி விருதைத் திருப்பித் தர மேலும் 10 எழுத்தாளர்கள் முடிவு !


பிரபல காஷ்மீர் எழுத்தாளர் குலாம் நபி கயால், கன்னட எழுத்தாளர் ஸ்ரீநாத் உள்பட மேலும் 10 எழுத்தாளர்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருதுகளைத் திருப்பித் தர முடிவு செய்துள்ளனர்.

 உத்தரப் பிரதேசத்தில் மாட்டிறைச்சியை சாப்பிட்டதாக முதியவர் அடித்துக் கொல்லப்பட்டது, கன்னட எழுத்தாளர்   எம்.எம்.கலபுர்கி, சமூக ஆர்வலர்கள் கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கார் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டது ஆகியவற்றைக் கண்டித்து, தொடர்ந்து சில எழுத்தாளர்கள் சாகித்ய அகாதெமி விருதுகளைத் திருப்பித் தருவதாக அறிவித்துள்ளனர்.

 அந்தப் பட்டியலில் குலாம் நபி கயால், ஸ்ரீநாத், மங்களேஷ் தப்ரல், ராஜேஷ் ஜோஷி, வரியம் சாந்து, ரங்கநாத ராவ் ஆகியோர் இணைந்துள்ளனர்.

 இதுகுறித்து ஸ்ரீநாத், மங்களேஷ் தப்ரல், ராஜேஷ் ஜோஷி ஆகியோர் கூட்டாக திங்கள்கிழமை அறிக்கை வெளியிட்டனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

 எழுத்தாளரின் சட்டையில் பேனா இருக்க வேண்டிய இடத்தில், துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கின்றன; இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடராமல் இருப்பதற்கு கலபுர்கி போன்றவர்களைக் கொலை செய்வதர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 கலபுர்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சாகித்ய அகாதெமி கண்டித்திருக்க வேண்டும். ஆனால், சாகித்ய அகாதெமி மெüனமாக இருக்கிறது. எனவே, எங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளையும், பரிசுத் தொகைகளை திருப்பித் தர முடிவு செய்துள்ளோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில், காஷ்மீர் எழுத்தாளர் கயால், திங்கள்கிழமை கூறியதாவது:
 மத்தியில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல், வகுப்புவாதப் பிரச்னைகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. நாட்டில் மத நல்லிணக்கம், மதச்சார்பற்ற தன்மை ஆகியவை இன்று அச்சுறுத்தலில் உள்ளன. இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. 

 இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எனக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருதைத் திருப்பித் தர முடிவு செய்துள்ளேன் என்று குலாம் நபி காயல் கூறினார்.

 இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுர்ஜித் பட்டார், பல்தேவ் சிங் சடக்நாமா, ஜஸ்விந்தர், தர்ஷண் பட்டர் ஆகிய நான்கு எழுத்தாளர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருதுகளை திருப்பித் தருவதாக திங்கள்கிழமை அறிவித்தனர்.

 இதனிடையே, தாத்ரி சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக, மும்பையில் உருது நாவலாசிரியர் ரஹ்மான் அப்பாஸ் தனக்கு வழங்கப்பட்ட மகாராஷ்டிர மாநில உருது சாகித்ய அகாதெமி விருதை திங்கள்கிழமை திருப்பி அளித்தார்.

விருதைத் திருப்பிக் கொடுத்த நாடகக் கலைஞர்: தாத்ரி சம்பவத்தைக் கண்டித்து, தில்லியைச் சேர்ந்த நாடகக் கலைஞர் மாயா கிருஷ்ணா ராவ், 2010-ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட "சங்கீத நாடக அகாதெமி' விருதை திங்கள்கிழமை திருப்பி அளித்தார். 

 "மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பாக அரசு பேசாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது' என்று அவர் கூறினார்.

 சல்மான் ருஷ்டி ஆதரவு: சாகித்ய அகாதெமி விருதுகளை எழுத்தாளர்கள் திருப்பித் தருவதற்கு சல்மான் ருஷ்டி ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரைப் பதிவில், "நயன்தாரா ஷகல் உள்பட பல எழுத்தாளர்கள், சாகித்ய அகாதெமிக்கு எதிராகக் குரல் கொடுப்பதை ஆதரிக்கிறேன். இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்துக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

நன்றி :- தினமணி



0 comments:

Post a Comment

Kindly post a comment.