Tuesday, October 13, 2015

பாறைமேல் கட்டப்பட்ட வீடு!


ஒரு கட்டடம் நிலையாக நிற்பதற்கு அது கட்டப்படும் நிலத்தின் தன்மையை கண்டறிவது அவசியமாகிறது. அதுபோன்றே நம் வாழ்வு நிலைத்து நிற்பதற்கு இறை வார்த்தையே அடிப்படையாகும். அது உயிர் பெறுவது நமது செயல்களால் மட்டுமே. பைபிளில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

"என் வார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன். அவர் ஆழமாகத் தோண்டி, பாறையின் மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார்.

வெள்ளம் ஆறாய்ப் பெருக்கெடுத்து அந்த வீட்டின் மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை. ஏனென்றால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது. நான் சொன்னதைக் கேட்டும் அதன்படி செயல்படாதவரோ அடித்தளம் இல்லாமல், மண் மீது வீடு கட்டியவருக்கு ஒப்பாவார். ஆறு பெருக்கெடுத்து அதன்மேல் மோதிய உடனே அது விழுந்தது. அவ்வீட்டுக்கு பேரழிவு ஏற்பட்டது.

நாம் இவ்வுலகில் வாழ்வது ஒருமுறைதான். இவ்வாழ்வில், யாருக்காவது எந்த நன்மையாவது செய்ய முடிந்தால், அதைத் தள்ளிப் போடவோ, ஒதுக்கவோ கூடாது. ஒருவேளை அந்த சந்தர்ப்பம் மீண்டும் வராமலே போய்விடலாம். இறை வார்த்தையை தினமும் வாசிப்பவர்களாகவும் கேட்பவர்களாகவும் மட்டும் இராமல் செயலில் காட்டுபவர்களாக இருந்தால் மட்டுமே ஒரு நல்ல உறுதியான, நேர்மையான சமூக அமைப்பை நாம் உருவாக்க இயலும்.

உன்னைப் போல் பிறரையும் நேசி, உன் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுக்காமல் அயலார் கண்ணில் இருக்கும் தூசியை நீக்க விரும்புவது ஏன்? உலகமெல்லாம் ஆதாயம் ஆக்கிக் கொண்டாலும் உன் ஆத்துமத்தை இழக்க நேரிடும் செயல்களில் ஈடுபடுவோருக்கு மீட்பு இல்லை. இவை போன்று பைபிளில் காணப்படும் இறை விழுமியங்களை நாம் செயலில் காட்டும் மக்களாகத் திகழ வேண்டும்!''

தாம் போதிப்பதையே பிறருக்குச் செய்து காட்டும் எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்ந்து மறைந்த காந்தியடிகள், அன்னை தெரசா போன்றவர்களை நம் வாழ்வின் எடுத்துக்காட்டுகளாகக் கொண்டு வாழ முயற்சி செய்வோம். அப்போதுதான் நம்வாழ்வும் பாறைமேல் கட்டப்பட்ட வீட்டைப்போல் அசைவுறாது பிறருக்கு நேரிய வழி காட்டும் ஒளிவிளக்காகத் திகழும் என்பதில் சந்தேகமேயில்லை.

- பிலோமினா சந்தியநாதன்.

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.