Wednesday, April 8, 2015

உலக சுகாதார நாள் சிந்தனைகள்... - டாக்டர் எல்.பி. தங்கவேலு

உலக சுகாதார நிறுவனத்தால் ஏப்ரல் 7-ஆம் தேதி உலக சுகாதார தினமாக 1948-இல் அறிவிக்கப்பட்டு 1950 முதல் ஒவ்வோர் ஆண்டும் சுகாதாரத்துக்கு சவாலாக விளங்குகிற ஏதாவது ஒரு நோய் அல்லது பிரச்னையை மையக் கருத்தாக கொண்டு உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1995-ஆம் ஆண்டு போலியோ ஒழிப்பை மையக் கருத்தாக அறிவித்ததன் மூலம் இன்றைக்குப் பல நாடுகள் போலியோ என்ற கொடிய நோயின் பாதிப்பிலிருந்து தப்பித்து இருக்கின்றன. பல்வேறு நோய்களைப் பற்றிய விவரங்கள், நோயற்ற வாழ்க்கைக்கு வழிவகைகள், அவற்றைத் தடுக்கும் முறைகள் போன்ற விழிப்புணர்வை உலக சுகாதார தினம் ஏற்படுத்தி இருக்கிறது.
அரசு சார்ந்த, அரசு சாராத, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இந்த நாளில் பங்கெடுத்து கல்வி நிலையங்கள், பொது இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி நோய்கள், தடுப்பு முறைகள், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
உலக சுகாதார நிறுவனத்தின் இந்த முயற்சியால் சின்னம்மை, போலியோ, பெரியம்மை, காச நோய், தொழுநோய் ஆகியன கணிசமாகக் குறைந்திருக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் எடுத்த நடவடிக்கைகளால் இருதய நோய், நுரையீரல் நோய்கள், புற்றுநோய், மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவை குறித்து  பெருமளவு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.
நமது நாடு பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடு மட்டுமல்ல, மக்கள் தொகையிலும் சீனாவை வெகு விரைவில் முந்தக்கூடிய நிலையில் உள்ளது. ஆகவே மக்களின் உடல் நலத்தில் அரசின் கவனமும் அதற்காக செலவிடப்படும் நிதியும் போதுமானதாக இருக்க வேண்டும். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்காகப் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை.
இது கடந்த கால அரசுகளுக்கும் பொருந்தும். இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.33,150 கோடி. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1.2 சதவீத அளவே ஆகும். இந்த நிதியும் நீண்ட கால நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கோ அல்லது தரம்வாய்ந்த மருத்துவ உள்கட்டமைப்புகளுக்கோ செலவிடப்படுவதில்லை. மாறாக பெரும்பாலான நிதி, நோயை குணப்படுத்துதல் சேவைக்கே செலவிடப்படுகிறது.
இந்தியாவில் சுகாதாரத்துக்காக பொதுவாகச் செலவிடப்படும் தொகை மொத்த நிதி ஒதுக்கீட்டில் 6 சதவீதம் மட்டுமே ஆகும். இதில் அரசின் பங்களிப்பு வெறும் ஒரு சதவீதம் ஆகும். உலகமயமாக்கல் கொள்கையை இந்தியா பின்பற்றத் தொடங்கிய பிறகு சுகாதாரத்துக்கு அரசு ஒதுக்கிடும் நிதி 1.3 என்ற விகிதத்திலிருந்து குறையத் தொடங்கிவிட்டது. மாநில அரசுகள் ஒதுக்கும் நிதி 7 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதமாக குறைந்துவிட்டது.
இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் மருத்துவத்துக்காக செலவாகிறது எனக் கணக்கிடப்படுகிறது. இதில் ஒரு சதவீதம் அளவு நிதியைத்தான் மத்திய, மாநில அரசுகள் செலவு செய்கின்றன. மீதமுள்ள 5 சதவீதத்தை மக்கள் தங்கள் சொந்த வருமானத்திலிருந்து செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
தனியார் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் சுமார் 70 முதல் 80 சதவீத மக்களின் மருத்துவத் தேவைகளை கவனிக்கிறார்கள்.
நகர்ப்புற மக்கள் ஆரம்ப சிகிச்சையையும் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட உயர் சிகிச்சைகளையும் எளிதில் பெற அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பெருமளவு இருக்கின்றன. ஆனால் கிராமப்புற ஏழை மக்கள், உயர் சிகிச்சைகளுக்காக சில நூறு கிலோ மீட்டர் தொலைவுக்குச் செல்ல வேண்டிய பரிதாபகரமான நிலையே நீடிக்கிறது.
ஏழைகளுக்கு இந்த மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்காததோடு மிகப் பெரிய பொருளாதார சுமையையும் ஏற்படுத்துகிறது.
கிராமப்புறங்களில் மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை பெரிய அளவில் காணப்படுகிறது. பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இருந்தால் மருந்து இருக்காது. மருந்து இருந்தால் மருத்துவர்கள் இல்லை என்கிற நிலைமைதான் காணப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் இந்தியா முழுவதும் முறையாகவும், குறைபாடுகள் இல்லாமலும் செயல்பட்டாலே போதும், மருத்துவப் பிரச்னைகள் கணிசமாகக் குறைந்துவிடும்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்து ஆரம்ப மருத்துவ சேவைகளும் அளிக்கும் வகையில் அமைந்து இருந்தால் வட்டார மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் இன்று காணப்படும் அளவுக்கு அதிகக் கூட்டம் இருக்காது. அதிகக் கூட்டத்தால் பெரிய சிகிச்சை அளிக்க வேண்டிய இந்த மருத்துவமனைகளின் நேரமும் வீணாகிறது. அதன் சேவைத் தரமும் குறைகிறது.
பெரும்பாலான ஏழைகள் மருத்துவ வசதிக்காக அரசு மருத்துவமனைகளையே நம்பியிருக்கிறார்கள். பல அரசு மருத்துவமனைகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், மருத்துவ வசதிகள் தேவையான அளவு இருப்பதில்லை என்பது கசப்பான உண்மையே.
சுதந்திரம் பெற்ற பிறகு, தாய் - பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் படிப்படியாக பெருமளவு குறைந்தபோதிலும் இன்றைக்கும் உலகிலேயே தாய் - பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
நோயைக் கண்டறிய அதிநவீன, விலை உயர்ந்த மருத்துவப் பரிசோதனைகள் மிகவும் அவசியம். இந்த மருத்துவச் சோதனைகளுக்கு பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்தே மருத்துவக் கருவிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தக் கருவிகளுக்கு விதிக்கப்படும் சுங்க வரி உள்ளிட்ட வரிகளால் மருத்துவக் கருவிகளின் விலை அதிகமாக இருக்கிறது. உள்நாட்டிலேயே இந்த மருத்துவக் கருவிகளை உற்பத்தி செய்ய அரசு முனைப்புடன் செயல்பட்டால் மட்டுமே இவற்றின் விலை கணிசமாகக் குறையும். அப்போதுதான் மருத்துவப் பரிசோதனைக் கட்டணமும் கணிசமாகக் குறையும்
இன்னும் 5 ஆண்டுகளில், படுக்கை வசதியுடன் கூடிய சுமார் 6 லட்சம் முதல் 7 லட்சம் மருத்துவமனைகள் நமது நாட்டுக்குத் தேவையாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
தற்போது இந்தியாவில் பதிவு செய்திருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கையும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமானதாக இல்லை.
1,000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 2,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதமே நமது நாட்டில் இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் வளர்ந்து வரும் நாடுகளில் நாம் 67-வது இடத்தில் இருக்கிறோம் என்பதுதான் கசப்பான உண்மை.
பெரும்பாலான மருத்துவர்கள் நகர்ப்புறங்களில் பணிபுரிவதையே விரும்புகிறார்கள். கிராமப்புற மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் முன்னுரிமை, ஊதியத்தில் உயர்வு போன்ற சலுகைகளைக் கொடுத்து கிராமப்புறங்களில் பணியாற்ற அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.
இன்னும் 10 ஆண்டுகளில் கூடுதலாக சுமார் 6 லட்சம் மருத்துவர்கள் தேவைப்படுவார்கள். அதற்கு புதிதாக 200 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கியாக வேண்டும்.
செவிலியர்களும் பல வெளிநாடுகளுக்குச் சென்று விடுவதால், செவிலியர்கள் பற்றாக்குறையும் காணப்படுகிறது.
2,980 மக்களுக்கு ஒரு செவிலியர் என்ற விகிதத்திலேயே இருக்கிறார்கள். செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய செவிலியர் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும். அவர்கள் இங்கேயே தங்கிப் பணிபுரியும் வகையில் அவர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். 
இந்தியாவின் சுகாதார நிலைமை இப்படி இருந்தபோதிலும் மருத்துவச் சுற்றுலா என்றழைக்கப்படுகிற வெளிநாட்டு நோயாளிகள் சிகிச்சைக்காக நமது நாட்டுக்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்குக் காரணம் நமது மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களுமே. இந்தியாவில் மருத்துவ அறுவைச் சிகிச்சைக்கு ஆகும் செலவு மேற்கத்திய நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பத்தில் ஒரு பங்குதான்.
மருத்துவச் சுற்றுலா மூலமாக இந்த ஆண்டு 100 கோடி அமெரிக்க டாலர் வருமானமாக கிடைத்துள்ளது. இது 2015-ஆம் ஆண்டின் முடிவில் 200 கோடி அமெரிக்க டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்த தனியார் மருத்துவமனைகளையும், அரசு மருத்துவமனைகளையும் அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.
வசதி படைத்தவர்களுக்கும், வெளிநாட்டு நோயாளிகளுக்கும் சிகிச்சை தரத் தனியார் மருத்துவமனைகளையும், சாமானிய ஏழை மக்களுக்கு அதே தரத்திலான மருத்துவ சிகிச்சை கிடைக்க அரசு மருத்துவமனைகளையும் ஊக்குவிக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு.
தொழில் வளத்தைப் பெருக்குவதிலும், பொருளாதார வளர்ச்சி அடைவதிலும் காட்டும் அதே முனைப்பை மத்திய, மாநில அரசுகள் மருத்துவ வசதியைப் பெருக்குவதிலும், அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதிப்படுத்துவதிலும் காட்டாமல் போனால், அந்த வளர்ச்சிக்கே பொருளில்லாமல் போய்விடும்.
சுகாதாரத்துக்காக அரசு நிதி ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தப்பட்டு சமுதாயத்தின் அடிமட்டத்திலே வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் ஏழைக் குடிமகன் உள்பட அனைத்து மக்களுக்கும் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதிப்படுத்துவது அரசின் கடமை.
கட்டுரையாளர், இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினர்.
நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.