Wednesday, April 8, 2015

அரசு சலுகைகளை அனுபவிக்கும் பிரிவினைவாதத் தலைவர்கள் ! -யதீஷ் யாதவ் & ஃபயஸ் வானி, புது தில்லி/ஸ்ரீநகர்

    மீர்வாய்ஸ் ஒமர் பாரூக் - அப்துல் கனி பட் - பிலால் அகமது லோனே
""எனக்கு முன்பாக இந்தியா, பாகிஸ்தான் சார்பில் 2 பெட்டிகள் வைக்கப்பட்டால், பாகிஸ்தானுக்கே நான் வாக்களிப்பேன்'' என்று ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாதத் தலைவரான பேராசிரியர் அப்துல் கனி பட் 2008ஆம் ஆண்டு செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். மேலும், தன்னை பாகிஸ்தானின் தீவிர ஆதரவாளர் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதுபோல, அப்துல் கனி பட் மட்டும் தெரிவிக்கவில்லை. ஹாசிம் குரேஷி போன்ற பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதத் தலைவர்களும் இந்த சித்தாந்தத்தை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர். ஆனால், இந்திய அரசின் உத்தரவுகளுக்கு எதிராகவும், நாட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும் பாகிஸ்தான் தூதர்களுடன் விருந்து சாப்பிடும் அப்துல் கனி பட், குரேஷி போன்றோர், நாட்டு மக்களின் வரிப் பணத்தில் அரச போகம் அனுபவிக்க மட்டும் வெட்கப்படவில்லை.
இந்த அரசியல் ஆர்வலர்கள், மாநில அரசிடம் இருந்து பல்வேறு சலுகைகளைப் பெறுகின்றனர். மாநில அரசிடம் இருந்து பாதுகாப்பு, தங்களது வீடுகளுக்கு பாதுகாவல், வாகனங்கள், எரிபொருள், பாதுகாப்புமிக்க விடுதி வசதி ஆகியவற்றை இலவசமாக இவர்கள் அனுபவித்து வருகின்றனர்.
இந்தியாவுக்கு எதிராக அரசியல் செய்யும் இவர்களுக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு ரூ. 69 கோடியும், பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு ரூ. 40 கோடியும் ஊதியமாக கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு செலவிட்டுள்ளது. விடுதியில் அவர்கள் தங்குவதற்காக ரூ.3.6 கோடியும், அவர்களின் பயணத்துக்கான எரிபொருளுக்கு ரூ. 5.18 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. இதுபோன்று மேலும் பல "அங்கீகரிக்கப்படாத அரசியல் ஆர்வலர்களுக்கு' அரசால் பெரும்தொகை செலவிடப்பட்டுள்ளது.
2013-14ஆம் ஆண்டில், பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகளுக்காக ஜம்மு-காஷ்மீர் அரசு, ரூ.107 கோடி செலவிட்டுள்ளது. இதில், காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பிரிவினைவாதிகளுக்கு விடுதிக் கட்டணமாக செலவிடப்பட்ட ரூ.4 கோடி, பெட்ரோல்-டீசலுக்காக செலவிடப்பட்ட ரூ.5 கோடியும் அடங்கும்.
ஜம்மு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியைச் சேர்ந்த ராஜேஷ் குப்தா என்பவர், அந்த மாநிலத்தில் இருக்கும் அரசியல் ஆர்வலர்கள் குறித்தும், அவர்களுக்கு முந்தைய ஒமர் அப்துல்லா தலைமையிலான மாநில அரசு, 5 ஆண்டுகள் செலவு செய்த தொகை குறித்த விவரங்களையும் கேட்டிருந்தார். இதுகுறித்து அவர் எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் கூறுகையில், பிரிவினைவாதிகளுக்கு செலவிடப்பட்ட பெரும் தொகை அடங்கிய பட்டியலைக் கண்டதும் தாம் பெரிதும் ஆச்சர்யமடைந்ததாக குறிப்பிட்டார்.
ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் மீர்வாய்ஸ் ஒமர் பாரூக் தலைமையில், 7 பேர் கொண்ட குழுவினர், தில்லியில் உள்ள இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை கடந்த மாதம் 22ஆம் தேதி சந்தித்துப் பேசினர். அப்போது பாகிஸ்தான் தூதருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ரகசியமாக ஆலோசனையும் நடத்தினர். ஆனால், பாகிஸ்தான் தூதரகத்தைவிட்டு வெளியேறிய அவர்கள், பாதுகாப்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில அரசால் வழங்கப்பட்ட வாகனங்களில் சென்றனர்.
ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் தேர்தல்களைப் புறக்கணிக்கும்படி பொதுமக்களுக்கு பல்வேறு முறை வெளிப்படையாக அழைப்பு விடுத்த மீர்வாய்ஸ் உள்ளிட்ட 1,472 அரசியல் ஆர்வலர்களுக்கு மாநில அரசு சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. 2014-15ஆம் ஆண்டில் மட்டும், இந்த அரசியல் ஆர்வலர்களின் பாதுகாப்புக்காகவும், வாகன வசதி, விடுதிக் கட்டணம் உள்ளிட்டவற்றுக்காகவும் மொத்தம் ரூ.120 கோடி செலவிடப்பட்டுள்ளது. மாநில அரசின் பட்ஜெட்டில், நலத் திட்டத்தின் கீழ் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை காட்டிலும், இது ரூ.100 கோடி அதிகமாகும். குழந்தைகள் நலத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.40 கோடியுடன் ஒப்பிடுகையில், இது 3 மடங்கு அதிகமாகும்.
மீர்வாய்ஸ் ஒமர் பாரூக் தவிர, பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள் பலர், மாநில அரசின் பாதுகாப்பு, மருத்துவ வசதிகளைப் பெறுகின்றனர். ஹுரியத் மாநாட்டு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான பட், மௌலவி அப்பாஸ் அன்சாரி, ஹுரியத் முன்னாள் தலைவர் அகா சயீது ஹாசன் மௌசவி, பிலால் அகமது லோனே ஆகியோர் அரசின் சலுகைகளைப் பெறுபவர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.

சலுகைகள் விவரம்
உணவுக் கட்டணம் -  மொத்தம் ரூ.20.84 கோடி
2010-11 ரூ. 4.45 கோடி
2011-12 ரூ. 4.08 கோடி
2012-13 ரூ. 4.80 கோடி
2013-14 ரூ. 3.89 கோடி
2014-15 ரூ.3.60 கோடி

எரிபொருள் செலவு - மொத்தம் ரூ.26.43 கோடி
2010-11  ரூ. 4.76 கோடி
2011-12  ரூ. 6.15 கோடி
2012-13  ரூ. 5.52 கோடி
2013-14  ரூ. 4.80 கோடி
2014-15 ரூ. 5.18 கோடி
நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.