Wednesday, April 8, 2015

நீர் வளத்தை மேம்படுத்த...தி. நந்தகுமார்

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதாக கர்நாடக அரசு அறிவித்தவுடன், தமிழகத்தில் போராட்டங்கள் தொடங்கிவிட்டன. இருப்பினும், இதையெல்லாம் கண்டு கர்நாடக அரசு அசரவில்லை. எதிரெதிர் துருவங்களாக உள்ள காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் ஒருமித்து குரல் எழுப்புகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் இணைந்து (அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் ஒருசேர!) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது வியப்பிலும் வியப்பு.
கடந்த சில நூற்றாண்டுகளாகவே தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே நதிநீர்ப் பிரச்னை இருந்துவருகிறது.
சுதந்திரம் அடைந்த பின்னர் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நிலையில், தங்களது மாநில மக்களுக்காகவே என்ற சுயநலப் போக்கோடு கர்நாடக, கேரள, ஆந்திர
மாநில அரசுகள் கருதத் தொடங்கியதால்தான் தமிழகத்தில் நதிநீர்ப் பிரச்னைகள் அதிக அளவில் எழத் தொடங்கின.
"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்.. ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிமாநிலத்தில்..' என்று கூறினாலும், குடிநீருக்காக பிற மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய கட்டாயத்தில்தான் தமிழகம் உள்ளது.
இருப்பினும், அடுத்த சில ஆண்டுகளுக்காக குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலான நடவடிக்கையை மேற்கொண்டால் குடிநீர்ப் பிரச்னையை ஓரளவுக்கு சமாளிக்கலாம்.
உபரி நீர் வீணாகி கடலில் கலக்காத வண்ணம், தடுப்பணைகள் கட்டுவது அவசியம். கர்நாடகத்தில் நதிநீர் சேமிப்பு, அணைகள் கட்டுதல், ஏரிகள், குளங்கள் பராமரித்தல் என குறுகிய காலத்தில் வளப்படுத்தி விட்டனர். பெங்களூரு மாநகரின் மையப் பகுதியில் உள்ள ஏரிகள், குளங்களில் எப்போதும் நீர் நிரம்பியிருக்கும்.
தமிழகத்திலோ சாமானிய மனிதன் முதல் ஆட்சியாளர்கள் வரை தண்ணீர் சேமிப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையிலேயே நடந்து கொள்கின்றனர். இதனால்தான் தமிழகத்தில் தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குக்கிராமங்களில் இருந்து மாநகரங்கள் வரை உள்ள ஏரிகள், குளங்கள், கிணறுகள், ஆறுகள், கண்மாய்கள் என நீர்வரத்துப் பகுதிகள், கால்வாய்கள் போன்றவை எல்லாம் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருக்கின்றன.
இதனால்தானே மழைக் காலங்களில் சேமிப்புப் பகுதிக்குள் தண்ணீர் செல்ல முடியாமல், கடலிலும், கால்வாய்களிலும் கலந்து வீணாகிறது.
ஏரிகளில் மண் குவாரிகளுக்கும், ஆறுகளில் மணல் குவாரிகளுக்கும் தாராளமாக அரசு அனுமதிக்கிறது. இதுமட்டுமன்றி, உள்ளூரில் மணல் திருடர்கள் தங்களது பங்குக்கு அனுமதியின்றி மணல் திருட்டுகளில் ஈடுபட்டும் வருகின்றனர். இதற்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவும் உள்ளது.
நீர் ஆதாரங்களைப் பாழ்படுத்தும் வகையிலான  தோல், ரசாயனம், சாயம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்குத் தாராளமாக அனுமதி அளிக்கப்படுகிறது.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களும் பெயரளவிலேயே இயங்குகின்றன. அசம்பாவிதம் நடக்கும்போது விழித்துக்கொள்ளும் அரசுத் துறையினர், அடுத்த சில நாள்களில் வழக்கம்போல மௌனம் சாதிக்கத் தொடங்கிவிடுகின்றனர்.
வனப் பகுதிகள், மலைகள் உள்ளிட்டவற்றில் உள்ள மரங்களைப் பாதுகாக்க வேண்டும். கூடுதலாக மரக் கன்றுகளை நட்டு, பராமரிக்க வேண்டும். வீடுகள், வீதிகள்தோறும் மரக் கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்.
தமிழகத்தில் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில்தான் குடிநீர் வடிகால் வாரியம், அணைகள் பராமரிப்பு, நீர்ப் பாசனம் என குடிநீர் தொடர்பான துறைகள் உள்ளன.
ஒப்பந்தங்கள் வழங்குதல், அதிகாரிகளின் பணியிட விவகாரங்கள், குவாரிகளை அனுமதித்தல் என பொதுப் பணித் துறை அமைச்சருக்கு பணிச்சுமை இருக்கும்.
மத்திய அரசிலும், கர்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நீர்ப்பாசனத் துறை தனியே இயங்குகிறது. இதற்கு ஓர் அமைச்சர் உண்டு. அவரது பணியே மாநிலத்தில் உள்ள நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதுதான். ஆனால், தமிழகத்தில் நீர்ப் பாசனத்துக்குத் தனி அமைச்சர் கிடையாது.
நதி நீருக்காக பற்பல ஆண்டுகளாக அண்டை மாநிலங்களோடு போராடி வரும் நிலையிலும், வட மாவட்டங்களில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு இருக்கும்போதும் கூட நீர்வளத்தை மேம்படுத்துவதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. இந்த நிலை தொடரக் கூடாது.
2002-இல் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை தமிழகத்தில் தொடங்கியவர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. இதனால், நீர் ஆதாரங்கள் வலுவடைந்து அடுத்த சில ஆண்டுகள் குடிநீர்ப் பிரச்னை அதிக அளவில் எழாமல் இருந்தது. அந்தத் திட்டத்தை அடுத்துவந்த தி.மு.க. அரசு தொடராமல் இருந்துவிட்டது.
அணைகள் பராமரிப்பு, மழை நீர் சேகரிப்பு, நீர்வள  மேம்பாடு என குடிநீர் சம்பந்தமான வாரியங்களையும், துறைகளையும் இணைந்து நீர்ப் பாசனத் துறைக்கு தனியே அமைச்சரை நியமித்து, நிர்வாகப் பணிகளை முடுக்கிவிட வேண்டும்.
நீர்வரத்துப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கடலில் வீணாகக் கலக்கும் மழை நீரை சேமிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும்.
மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, ஊராட்சி அளவில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் கொண்ட குழுக்களை அமைத்து நீர்வளத்தை மேம்படுத்த வேண்டும்.
அரசு இனியும் தாமதித்தால் ஒரு லிட்டர் நீரின் விலையும், பெட்ரோலின் விலையும் ஒரே அளவில் இருக்கக் கூடிய காலம் விரைவில் வந்துவிடும்!
நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.