Wednesday, April 8, 2015

காட்சிப் பொருளாகும் "நம்ம டாய்லெட்'


"நம்ம டாய்லெட்' திட்டத்தின் கீழ் அம்பத்தூர் பகுதிக்காக வாங்கப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆன கழிப்பறைகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் காட்சிப் பொருளாகவே இருந்து வருகிறது. இதனால் அரசுப் பணம் வீணாகி வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு முதல் நம்ம டாய்லெட் (நவீனக் கழிப்பறை) திட்டத்தின் மூலம் சென்னை முழுவதும் பிளாஸ்டிக்கால் ஆன நவீனக் கழிப்பறைகளை நிறுவி வருகிறது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அம்பத்தூர் மண்டலத்துக்கு மட்டும் சுமார் 80-க்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிப்பறைகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாங்கப்பட்டன.
இதனை நிறுவுவதற்காக வார்டு அலுவலகம், பூங்கா, குப்பை சேகரிக்கும் இடம் என பல்வேறு இடங்களில் இறக்கி வைக்கப்பட்டன.
இந்த நவீனக் கழிப்பறைகளை பொருத்துவதற்கு இடங்களும் தேர்வு செய்யப்பட்டன. ஆனால், 6 மாதங்களாகியும் இதுவரை உரிய இடங்களில் கழிப்பறைகள் பொருத்தப்படவில்லை.
இறக்கி வைத்த இடங்களிலேயே காட்சிப் பொருளாக இவை தேய்ந்து வருகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் ஒருவர் கூறுகையில், நவீனக் கழிப்பறைகள் நிறுவுவதற்கான பணி விரைவில் தொடங்கும் என்றார்.
தற்போது கோடைக்காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைப்பதால் மாலை நேரங்களில் அம்பத்தூரில் உள்ள பூங்காக்களுக்கு பொதுமக்களின் வருகை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பூங்காவில் பயனின்றி வைக்கப்பட்டுள்ள இந்த நவீனக் கழிப்பறைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
பல லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட இந்த நவீனக் கழிப்பறைகள் வெறும் காட்சிப் பொருளாகவே மக்கிப் போகாமல் உரிய இடங்களில் பொருத்தி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.
நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.