Friday, April 10, 2015

சங்கரன்கோவில் ! 1000 ஆண்டுகள் பழமையான ஓர் மூதூரின் வரலாறு ! பகுதி -1

யூதர்களிடம் ஓர் வழக்கம் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஓர் கைத்தடி ( ஊன்றுகோல் போன்றதொரு கம்பு ) உண்டு. அதில் அந்தத் தலைமுறையினரது தலைவர் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.  அத்தடியானது அக்குடும்பத்தினரது பரம்பரைச் சொத்தாகத் திகழும். வாழையடி வாழையாகத் தொடரும் குடும்பத் தலைமுறையினரின் தலைவர் பெயர்கள் அத்தடியில் தொடர்ந்து பொறிக்கப்படும். பல தலைமுறையினரின் பெயர்களைத் தெரிந்து வைத்துள்ள ஒரே சமூகம் யூதர்கள் இனம்தான் என்பது ஆய்வறிஞர்களின் திடமான கருத்து. 

அத்தகையதோர் நடைமுறையினைப் பின்பற்றி, தனிப்பட்ட இனம் என்றில்லாது, ஓர் ஊரின் வரலாற்றைப் பதிவு செய்ய முற்பட்டதன் வெளிப்பாடே “சங்கரன்கோவில்” என்னும் இந்நூல். 

சங்கரன்கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளதோர் வட்டத்தின் ( Taluk H.Q. ) தலைநகரம். 1000 ஆண்டுகள் பழமையான மூதூர். “சங்கரன்கோவில்” என்னும் தலைப்பில் அவ்வூரைப்பற்றிய தகவல்களையெல்லாம் தொகுக்கும் களப்பணியின் முதல் தொகுப்பே இந்நூல்.

அப்பாவும் மகனும் சேர்ந்து எழுதிய  ஒரே நூல் -அதுவும் ஒரு ஊரைப்பற்றிய  நூல் -தமிழில் ஏன் ? உலகிலேயே  இது ஒன்றாகத்தான் இருக்கமுடியுமென்றே  ஐயமின்றிக் கூறலாம்.  ”அவையத்து முந்தியிருக்கச்” செய்த தந்தை:  “இவன் தந்தை எந்நோற்றான் கொல்” என்று உலகம் வியந்து பாராட்டும் மகன் என இருவருமே திருவள்ளுவரின் திருக்குறளுக்கு இலக்கணமாய்த் திகழ்கின்றனர்.

”ஆளுமைக்கு ஓர் அடையாளம் பி.காம்.பழநிசாமி” என்ற தலைப்பில் தி இந்து ஞாயிறு, மார்ச் 9, 2014 -இல்  தொகுத்தளித்துள்ள தகவல்கள் சங்கரன்கோவில் பெரியவர் பழநிசாமியின் தகைமையைப் பறைசாற்றும்.  தெருக்களில் ஜாதிப்பெயர்களை அகற்றிய அவரது செயல், பின்னாளில் எம்.ஜி.ஆர். மூலம் தமிழகத்திற்கே சட்டமாக்கப்பட்ட வரலாறு இவ்வூர் மக்கள் அனைவரும் நினைந்து நினைந்து பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டிய செயலாகும். 

கையில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் இருந்தும், அது தொழிலாளர்களுக்குச் சொந்தமான பணம் என்பதால் பஸ்ஸுக்கான கட்டணத்தைக்கூட எடுத்துக்கொள்ளாமல் திருவொற்றியூரிலிருந்து தியாகராய நகர்வரை நடந்தே சென்றவர், தோழர்.ப.ஜீவானந்தம். அதுபோன்று தேர்தல் செலவுக்குக் கிடைத்த 17,000/- ரூபாயில்,  12,000 செலவுபோக, மீதித் தொகையைத் தலைமையிடம் ஒப்படைத்த அ.பழநிசாமியின் நேர்மைத்திறத்தினை வியந்து பாராட்டத்தானே வேண்டும்?. 

இலண்டனில் பார்-அட்லா பட்டம் பெற்றவர் கே.டி.கே.தங்கமணி. தமிழகப் பொதுவுடைமைக் கட்சியின் மறக்க முடியாத தலைவர். கிடைத்ததைச் சாப்பிட்டு, கையில் உள்ள நாளிதழையே தரையில் விரித்துப் பரப்பி , அதன்மீது படுத்துறங்குமளவிற்கு எளிமையானவர். ஆனால் கோடீஸ்வரக் குடும்பத்தில் பிறந்தவர். ஆங்கிலம் தெரிந்த தொழிற்சங்கத் தலைவராக வலம் வந்தவர்.

 தான் உயிரோடு இருந்தவரை தமிழக அரசியலின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றியவர், தோழர்.எம்.கல்யாணசுந்தரம். இம்மூவரின் பண்புகளையும் அ.பழநிசாமியிடம் பார்க்க முடிகின்றது.

தோழர். எம்.கே. இறுதி நாட்களில் கூறியது. “கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்போரெல்லாம் கம்யூனிஸ்டுகள் அல்ல; கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லாதோரெல்லாம் கம்யூனிஸ்ட்  அல்ல” என்றும் கூற முடியாது.” எம்.கே. இறுதிநாட்களில் ஈ.வே.ரா.வின் நூல்களையே மறுவாசிப்புச் செய்துவந்தார் என்பதையும் தவலுக்காகக் குறிப்பிடுதல் அவசியமாகின்றது: மானுடத்தை மெய்யாக நேசித்துச் சமூக அக்கறையுடன் செயல்படுவோர் அனைவருமே கம்யூனிஸ்டுகள்தான் என்பதை எடுத்துரைக்கும் அவ்வரிகள் சுட்டும் உண்மையின் அடிப்படையில் அ.பழநிசாமியை ஓர்  மெய்யான கம்யூனிஸ்டாகவே கருதுதல் வேண்டும்.. 

தமிழ்நாட்டில் அ.பழநிசாமி போன்று கொள்கைப் பிடிப்புடன், அந்தரங்க சுத்தியோடு செயல்பட்ட / செயல்பட்டுக்கொண்டிருக்கும் அரசியல் பிரமுகர்கள்  அனைத்துக் கட்சிகளிலும் உள்ளனர். அத்தகையோர் சரித்திரத்தை எல்லாம் ஒருங்கு திரட்டி, மாணாக்கருக்குத் துணைப்பாட நூலாக்கிடுவதன்மூலமும் ஊழலற்ற வளமான வாழ்க்கையை அமைத்திட இயலும் என்பதும் மறுக்க இயலாத உண்மை. ஜீவா, கக்கன், காமராஜர் போன்றோர்  பாடத்திட்டங்களில் இடம்பெற்றுள்ளார்களா? 

சங்கரன்கோவிலா? சங்கரன்கோயிலா? சங்கரநயினார் கோவிலா? என்ற ஐயப்பாடெல்லாம் இந்நூலைப் படித்தவுடன் நீங்கிவிடும். கோவிலைக்கட்டிய உக்கிரபாண்டிய மன்னன், தலைமைச் சிற்பி உமாபதி சிவாச்சாரியார்,.சங்கரலிங்கப் பெருமான், ஆவுடையம்மாள் என்கிற கோமதி அம்மன் என திருக்கோயில் குறித்த சகல விபரங்களும் இந்நூலில் அருமையாகக் காணக்கிடக்கின்றன.

இவ்வூரின் மிகச்சிறப்பம்சம் என்னவென்றால், கோவில் அமையக் காரணமாக இருந்தவர் மணிகிரீவன் என்ற காவற்பறையன். அவரது உருவச்சிலை கம்பீரமாகக் ட்சியளிக்கிறது


;

கோவிலுக்குள் உள்ள நிர்வாக அலுவலகம் அருகில். வரலாறு தெரிந்த பக்தர்கள் இனவேற்றுமை பாராட்டாது அவரைத் தொட்டு வணங்கியபின்னரே சாமி சந்நிதிக்குச் செல்வர். பல்வேறு சமூகத்தினரும் ஆளுக்கொரு நாளாய்ப் பகிர்ந்து ஆடித்தவசுத் திருவிழாவைக் கொண்டாடி மகிழ்வது மற்றொரு சிறப்பு. வேற்றுமையில் ஒற்றுமைக்கு சங்கரன்கோவில் ஒரு நிகழ்காலச் சான்றாகத் திகழ்கின்றது.

திருக்கோவில் சந்நிதியில் உள்ள தெய்வத் திருஉருவங்களைக் கோவிலுக்கு வெளியே இருந்து நேரடியாகத் தரிசனம் செய்யும் முறையிலேயே எல்லாக் கோவில்களும் அமைக்கப்பட்டிருக்கும். இவ்வூர் சங்கரலிங்கப் பெருமான், கோமதி அம்மன் திருவுருவம் அமைந்துள்ள சந்நிதானங்களே அதற்கான சாட்சியங்களாகத் திகழ்கின்றன. ஆடித்தவசுத் தவசுத் திருவிழாவிற்கு அடிநாதமாக விளங்குபவர் சங்கரநாராயணர். கோவில் நடுவில் அமைக்கப்பட்ட சந்நிதி. அவரைக் கோவிலின் வெளிப்புறத்திலிருந்து நேரடியாக வணங்க இயலாது. ஏனெனில், அஃது இடையில் வலிந்து உருவாக்கப்பட்டது. எந்த ஆண்டு யாரால் சங்கரநாராயணர் சந்நிதி உருவாக்கப்பட்டது என்பதை மா.பட்டமுத்து எழுதிய கட்டுரையில் காணலாம்.  கோவிலில் விற்கப்படும் தமிழ்த் தலபுராணப் புத்தகத்திலேயே இவ்வுண்மை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.. அதற்கு ஆதாரமாக  1917 -ஆம் ஆண்டில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் பேட் துரை  எழுதிய கெஜட் நோட்டிபிகேஷன் பற்றிய தகவல்கள் மேற்படி நூலில் தமிழில் இடம்பெற்றுள்ளது. அதன் ஆங்கில வடிவம் “சங்கரன்கோவில்” நூலில் நூலாசிரியர்கள் இடம்பெறச் செய்துள்ளமை பெரிது,ம் பாராட்டத் தக்கது..

இ.மு.சு. என்கிற இ.மு.சுப்பிரமணியபிள்ளை என்கிற தமிழறிஞர் 30 ஆண்டுகளுக்குமேல் வாழ்ந்த பெருமையுடையது இவ்வூர். இவருக்கு வடமொழி பிடிக்காது. சைவத்திற்குத் தமிழும் வடமொழியும் வேண்டும் என்றும், தமிழ் மட்டுமே போதும் என்றும் வாதிடும் பழக்கம் இவ்வூரில் இன்றும் அனுதினமும் ஏதாவது ஓரிடத்தில் விவாதப்பொருளாகக் கொண்டிலங்கும், பெரியவர் இ.மு.சு. இராமாயணத்தைப் பார்த்த கோணமே வேறு. அந்த அணுகுமுறைதான் ஈ.வே.ரா.விற்கு கீமாயணச் சிந்தனைகளைத் தோற்றுவித்தது.  சந்திரசேகரப் பாவலர் என்ற புனைபெயரில் இவர் எழுதிய சமுதாய எழுச்சிக் கட்டுரைகள்  ஈ.வே.ராவின் குடியரசு 9 ஆண்டுகள் தொடர்ந்து இடம்பெற்றன. இ.மு.சு. என்ற மூன்றெழுத்துடன் சென்னைக் கோட்டைக்குச் சென்றால் எந்தக் காரியத்தையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பது அப்போதைய நடைமுறையாக விளங்கியது வரலாற்று உண்மை., கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களது பணிக்காலத்தை ஆண்டு முழுவதும் நீடிக்கச் செய்யும் அரசு ஆணைக்கு வழி வகுத்தவர் இ.மு.சு. நெல்லை மாவட்டத்தில் வரலாறு தெரிந்த மூத்த ஆசிரியர்கள் இன்றும் அந்த அரசாணையை “இ.மு.சு. G.O." என்றே குறிப்பிட்டுப் பேசுவது வழக்கம். தமிழ் ஆட்சிமொழியாக அனைத்துக் கட்சிகளையும் ஐக்கியப்படுத்தி மாநாடு நடத்திய பெருமைக்குரியவர் பெரியவர் இ.மு.சு.

நூலாசிரியர் ப,அருணகிரிக்கு ஓர் வேண்டுகோள். தமிழ் செம்மொழி ஆக்கப்படுவிட்டது என்றாலும் அரைகுறையாகவே உள்ளதென்பதே உண்மை.தமிழின் தொன்மைக்காலம் 1000 / 1500 என்று பேரம்பேசியே முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவறு. 5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் ஒரே மொழியாக இருந்த பெருமையுடையது தமிழ்மொழி. சமஸ்கிருத மொழியின் தாக்கத்தாலே தமிழ் மொழிக்கு ஏற்பட்ட இடையூறுகளாலேதான் தற்போது 24 தேசிய மொழிகளில் ஒன்றாகியுள்ளது. இச்சூழலில், அனைத்து தமிழார்வலர்களையும் ஐக்கியப்படுத்தி தமிழின் தொன்மைக்காலத்தை மாற்றியமைத்திட மாநாடொன்று நடத்தி நடுவண் அரசை வற்புறுத்திட வேண்டும்.  தலைவர் வைகோவின் துணையுடன் வெற்றியும் பெறவேண்டும். இப்போது செய்யாதுபோனால், நதிநீர்ப் பிரச்சினை போன்று தீராத தலைவலியே தொடரும். 

( தேசியக் கட்சிகள்கூட வோட்டு வேட்டைக்காக மாநிலத்திற்கு மாநிலம் ஒரு நிலை எடுப்பது சரிதானா? நதிகள் இணைப்பு என்பது இரண்டாவதாக இருக்கட்டும். நதிகள் தேசிய மயமாக்குதல் எப்போது நிகழும் ? )
   

இ.மு.சுவின் மகன் முத்துசாமி எழுதிய “திண்ணையிலே” என்ற நூலில் இ.மு.சு.வின் வரலாற்றினை முழுமையாகப் படிக்கலாம் என்று கூறுகின்றார், நடமாடும் சைவச் சுடரொளி மா.பட்டமுத்து.  63 -நாயன்மார்கள் மற்றும் சைவசித்தாந்தம் குறித்து மா.பட்டமுத்து ஆற்றியுள்ள  பக்திச் சொற்பொழிவுகள் அனைத்தும் அவர்தம் நண்பர் எஸ்.சுப்பிரமணியன் மூலமாக ”யூடியூப்” ( You Tube  mpattamuthu youtube என்று தட்டச்சு செய்தால் போதும்) வாயிலாக இணையத்தில் உலகை வலம் வந்துகொண்டிருக்கின்றன. 
சைவசித்தாந்தம் குறித்து ஐயப்பாடுகள் எழுமானால் அவரைத் தொடர்பு கொள்ளலாம். மா.பட்டமுத்து, சங்கரன்கோவில் ( அவசியம் என்று கருதினால், வடக்குரதவீதியையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ) என்ற முகவரிக்கு எழுதிப் பயன்பெறலாம்.  உழவாரப் பணிகளில் தன்னையும், தன்னைச் சார்ந்தோரையும் ஈடுபடச்செய்து சிவத் தொண்டால் பொழுதளக்கும் பெருமகன் அவர். 

 ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி இலக்கிய நிகழ்வுகள், பக்திச் சொற்பொழிவுகள் கோவில் வாசலின் முன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட பந்தலில் நிழ்த்தப் பெற்றது அந்தக்காலம். அதுபோன்றதொரு நிகழ்வில் கிருப்பானந்தவாரியார் திருக்கரங்களால், சிறுத்தொண்ட நாயனார் குறித்துப் பேசியமைக்காக இரண்டாம் பரிசு வாங்கியது பசுமையாக நினைவில் உள்ளது. தற்போது கோவிலின் வெளிப்புறகாரத்தில் ஒரு சிற்றிடத்தில்தான் நடைபெறுகின்றது. பார்வையாளர்களும் மிகமிகக் குறைவே. மா.பட்டமுத்து போன்ற சான்றோர்கள் அழைக்கப்படுவதுமில்லை. கலந்துகொள்வதிலும் அத்தகையோருக்கு விருப்பங்களும் இல்லை.

இதற்கு மாற்றாக மா.பட்டமுத்து அவர்களின் முயற்சியில் அதே ஆடித்தவசுத் திருவிழா நிகழும் காலக்கட்டத்தில் , சங்கரன்கோவில் மேற்குரதவீதியும், வடக்குரதவீதியும் இணையும் இடத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் ஓர் சிறப்புநிகழ்வு தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது.  இந்தக் கோவில் மேற்குரதவீதியில் உள்ள திருவாவடுதுறை மடத்தை அடுத்துள்ளது. அம்மடத்தில் வேலப்பதேசிகர் ஜீவசமாதி அடைந்துள்ளார். அனைவரும் காணவேண்டிய இடம். .தமிழிசையையும், பன்னிருதிருமுறைகளையும் மனனம் செய்து இசையுடன் பாடி தலைமுறைக்கும் தமிழ் வளர்க்கும் ஓதுவாமூர்த்திகளைச் சங்கமிக்கச் செய்து , பாடச் செய்து, இலவச உணவு, போக்குவரத்துச்செலவு, கெளரவிப்பது என   சைவச்சரபம் மாணிக்கவாசகம் பட்டமுத்து அவர்களது பணி  இன்றும் தொடர்கின்றது.

சங்கரன்கோவில் திருக்கோவிலில் காணும் அவலம். 

அரிதான நூல்கள் நிறையப் பெற்ற நூலகம் திருக்கோவிலில் உண்டு. அந்த நூலகம் இரு இடங்களுக்கு மாற்றப்பட்டு, தற்போது கோவிலினுள் உள்ள நிர்வாக அலுவலகத்திற்கு அடுத்து அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், யாருமே பயன்படுத்தமுடியாத நிலையே தொடர்கிறது. ஏனெனில், பக்தர்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்தும் காணிக்கைப் பொருள்களைச் சேமிக்கும் கிட்டங்கியாகவே நூலகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலை என்று மாறுமோ ?
     , .
நெல்லை என்றால் 
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்,
ஈரோடு என்றால் 
மக்கள் சிந்தனைப் பேரவை 
ஸ்டாலின் குணசேகரன், 
திருப்பூர் என்றால் 
டாலர் நகரம் ஜோதிஜி 
நினைவுக்கு வரும் காலமிது.. 
அதுபோன்று இந்நூலைப் படித்தோருக்கு, 
சங்கரன்கோவில் என்றால் 
ப.அருணகிரிநாதன் 
 நினைவுக்கு வருவார் 
என்பது திண்ணம். 

நூல் அறிமுகம் இன்னும் வரும்.

அருணகிரியின் நூல்களைப் பெற்றிட அணுக வேண்டிய முகவரி.

ஐஸ்வர்யா புக்ஸ், 2/18 - A, கோகுலம் குடியிருப்பு,

ஸ்ரீராம் நகர் முதன்மைச்சாலை, நொளம்பூர், சென்னை - 600 095


writterarunagiri@gmail.com

facebook : arunagiri sankarankovil

கைப்பேசி :- 9444393903

தற்போது கிடைக்கும் நூல்கள் :-

தமிழ்நாட்டின் கதை, கட்சிகள் உருவான கதை, அலைந்ததும் அறிந்ததும், ஜப்பானில் அருணகிரி, அரசியல் பொதுவாழ்வில் வெற்றிபெற, கொடிவழி, சதுரங்கம், உலகம் சுற்றும் வாலிபன்.  தமிழ் நாடா?டமில்நடுவா?, திறவுகோல், கிழக்கின் கதை, ஆல்ப்ஸ் மலையில் அருணகிரி, உலக வலம், ஈழத் தமிழ் எழுத்தாளர்கள், வாங்க..பறக்கலாம், நாடாளுமன்றத்தின் கதை, சங்கரன்கோவில்.... 

தமிழகத்தின் குக்கிராமம் முதல் சிறு பெரு நகரங்கள் வரையுள்ள அனைத்துப் பகுதிகளையும் சார்ந்த தமிழினப்பற்றாளர்கள்  தாமே முயன்று ஊர் வாரியாகத் தகவல்களைத் திரட்டி வெளியிடத் துவங்கினால் அவையே தமிழக வரலாறாகத் திகழும்.  

நூலாகப் பதிப்பிக்கக் கூட வேண்டாம். மின் நூல்களாக்கினாலே போது,ம். அவற்றையும் இலவசத் தமிழ் மின்நூல்கள் இணையத்தில் இடம்பெறச் செய்தாலே கூடப் போதுமானது. 

இவ்வகையில் தக்க  தொழில்நுட்ப உதவிகளைப் பெற

tshrinivasan@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.

இலவசத் தமிழ்நூல்களைப் படித்திட 

freetamilebooks.com/all-ebooks -

இணையதளத்திற்குச் செல்க.  

சங்கர இராமசாமி

winmaniram@yahoo.in1 comments:

 1. I like the valuable info you supply for your articles. I'll bookmark your weblog and take a
  look at again right here frequently. I am relatively
  certain I will be informed a lot of new stuff right right here!
  Good luck for the next!

  my blog ... gothic music

  ReplyDelete

Kindly post a comment.