Thursday, April 9, 2015

பாடகர் நாகூர் அனிபா காலமானார் -



பகி
நாகூர் அனிபா
நாகூர் அனிபா
பிரபல பாடகர் நாகூர் அனிபா சென்னையில் புதனன்று (ஏப்ரல்.8, 2015) உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90.
இறை அருள் பாடகர் என்றும் இசை முரசு என்றும் அவரது ஆதரவாளர்களால் புகழப்பட்ட நாகூர் அனிபா, இஸ்லாமிய பாடல்களையும், திராவிட இயக்கப் பாடல்களையும் பாடியதன் மூலம் புகழ் பெற்றவர்.
பள்ளிமாணவனாக சுமார் 11 வயதில் பள்ளிக்கூட விழாவில் அரங்கேறியதாக கூறப்படும் நாகூர் ஹனிபாவின் கணீர்க்குரல், இஸ்லாமியர்களின் திருமணங்கள், தர்காக்களின் மேடைக்கச்சேரிகள் மற்றும் திமுகவின் மாநாடுகள் உள்ளிட்ட பொதுக்கூட்ட மேடைகளில் தொடர்ந்து ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டுகாலம் தனித்துவமாக ஒலித்தது. கம்பீரமான குரலும் தெளிவான தமிழ் உச்சரிப்பும் அவரது தனித்துவமாக பாராட்டப்பட்டன.
அவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியில் இருந்தாலும், அவருக்கு கட்சி கடந்தும் ரசிகர்கள் இருந்தனர். இருக்கின்றனர். அகில இந்திய வானொலியின் காலைநேர தமிழ் ஒலிபரப்பில் அவரது இஸ்லாமிய மதப்பாடல்கள் இன்றளவும் தொடர்ந்து ஒலிபரப்பாகும். இலங்கை, சிங்கப்பூர், மலேஷிய வானொலிகளிலும் அவரது குரல் தொடர்ந்து ஒலித்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான மேடைக்கச்சேரிகளில் அவர் பாடியுள்ளார். பல நூறு பாடல்களை அவர் பிரபலப்படுதியுள்ளார். திரைப்படங்களிலும் அவர் பாடியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு வெளியே, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், துபாய் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்று தமிழ் மற்றும் இஸ்லாமியப் பாடல்களைப் பாடியுள்ளார்.
திமுகவைச் சேர்ந்த அனிபா சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், வக்ஃபு வாரியத்தலைவராகவும் இருந்திருக்கிறார்.
சென்னை கோட்டூர்புரத்தில் வைக்கப்பட்டிருந்த நாகூர் ஹனிபாவின் சடலத்துக்கு திமுக தலைவர் மு கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு அனிபாவின் உடல் அவரது சொந்த ஊரான நாகூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நன்றி  http://www.bbc.co.uk/tamil/india/2015/04/150408_nagooranifa

0 comments:

Post a Comment

Kindly post a comment.