Saturday, November 1, 2014

சோமாலிய கடற்கொள்ளையரிடம் சிக்கி தவித்த தமிழக மாலுமி விடுவிப்பு



சோமாலிய கடற்கொள்ளையர் பிடியில் 4 ஆண்டுகளாக பிணைக் கைதிகளாக சிக்கியிருந்த புன்னக்காயல் மாலுமி உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயலைச் சேர்ந்த லிட்டன் பர்னாந்து மகன் டெனிஸ்டன் (27) மும்பையைச் சேர்ந்த எம்.வி.ஆஸ்பால்ட் என்ற கப்பலில் மாலுமியாகப் பணிபுரிந்து வந்தார்.

இந்தக் கப்பல் கடந்த 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி தென் ஆப்பிரிக்க துறைமுகமான மும்பாத்தாவிலிருந்து டர்பனுக்கு செல்லும் வழியில் சோமாலிய கடற்பகுதியில் கடற்கொள்ளையரால் சிறைப்பிடிக்கப்பட்டது.

புன்னக்காயலைச் சேர்ந்த டெனிஸ்டன், மும்பை பகதூர்சிங், கேரளத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஜோசப், பாஸ்கரன் நாயர், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மஞ்சித் சிங், பஞ்சாப் சோகன்சிங், ஆந்திரத்தைச் சேர்ந்த பீம்சன் ஆகிய 7 பேரை தொடர்ந்து பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்து பல கோடி ரூபாய் பிணையத் தொகையாகக் கேட்டு வந்தனர்.

சிறைப்பிடிக்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்த நிலையில், வியாழக்கிழமை இரவு இவர்கள் 7 பேரையும் சோமாலிய கடற்கொள்ளையர் விடுவித்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. 7 பேரும் கார் மூலம் கென்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு இரு நாள்களில் மும்பைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து டெனிஸ்டன் புன்னக்காயல் திரும்ப உள்ளார் என, டெனிஸ்டனின் தந்தை லிட்டன் பர்னாந்து, மாலுமிகள் சங்கத்தைச் சேர்ந்த தென்னவன் ஆகியோர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

பிரதமருக்கு நன்றி: "மகன் பத்திரமாக மீட்கப்பட்டது தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும், விடுவிக்க உதவிய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாலுமிகள் சங்கத்தினர், கப்பல் நிறுவனத்தினர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும்' லிட்டன் பர்னாந்து உருக்கத்துடன் கூறினார்.

http://www.dinamani.com/

0 comments:

Post a Comment

Kindly post a comment.