Sunday, November 2, 2014

கர்நாடகத்தில் 12 நகரங்களின் பெயர்கள் கன்னடத்தில் மாற்றம்




கர்நாடக மாநில உதய தினத்தையொட்டி, மங்களூர், பெல்லாரி உள்பட 12 மாநகரங்களின் பெயர்கள் கன்னடத்தில் மாற்றப்பட்டுள்ளன.
ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி கடந்த 2006-இல் அப்போதைய முதல்வர் குமாரசாமியிடம் கர்நாடகத்திலுள்ள பெரிய நகரங்களின் பெயர்களை கன்னடத்தில் மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
அதன்பேரில், கர்நாடகத்தில் 12 பெரிய நகரங்களின் ஆங்கிலப் பெயர்களை கன்னடத்தில் மாற்றக் கோரி, மத்திய அரசுக்கு அப்போதைய கர்நாடக அரசு கடிதம் எழுதியது. ஆனால், மராத்தியர்கள் பெருவாரியாக வாழும் பெல்காம் மாநகரின் பெயரை கன்னடத்தில் மாற்றுவதற்கு மகாராஷ்டிர அரசியல்வாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், இந்தத் திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் வைத்தது.
இந்த நிலையில், அண்மையில் முதல்வர் சித்தராமையா மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதி 12 மாநகரங்களின் பெயர்களை கன்னடத்தில் மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, உடனடியாக அதற்கான உத்தரவை பிறப்பித்தது.
அதன் அடிப்படையில், பெங்களூர், மங்களூர், மைசூர், பெல்லாரி, பெல்காம், ஹூப்ளி, தும்கூர், பிஜாப்பூர், சிக்மகளூர், குல்பர்கா, ஹொஸ்பேட், ஷிமோகா ஆகிய 12 மாநகரங்களின் ஆங்கிலப் பெயர்களுக்குப் பதிலாக, கன்னடப் பெயர்களைச் சூட்டி கர்நாடக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, பெங்களூர் இனி "பெங்களூரு' என்றும், மங்களூர் "மங்களூரு' என்றும், மைசூர் "மைசூரு' எனவும், பெல்லாரி "பல்லாரி' என்றும், பெல்காம் "பெலகாவி' என்றும், ஹூப்ளி "ஹூப்பள்ளி' என்றும், தும்கூர் "துமகூரு", பிஜாப்பூர் "விஜயபுரா', சிக்மகளூர் "சிக்மகளூரு', குல்பர்கா "கலபுர்கி', ஹோஸ்பேட் "ஹொசபேட்டே' என்றும், ஷிமோகா "சிவமொக்கா' என்றழைக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பெயர்ச் சூட்டலுக்கு மகிழ்ச்சி: கர்நாடக அரசின் புதிய பெயர்ச் சூட்டலுக்கு கன்னட உணர்வாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆனால், "பெங்களூரு' பெயர் மாற்றத்தை பின்பற்ற இயலாது என்று ஒருசில கல்வி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
பெங்களூர் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற இயலாது என்று அதன் துணைவேந்தர் திம்மே கெளடா கூறியிருக்கிறார். பெயர் மாற்றம் நகரங்களுக்குத்தானே தவிர, கல்வி நிறுவனங்களுக்கு அல்ல என்றும் கூறும் அவர், பாம்பே மும்பை என்றும், மெட்ராஸ் சென்னை என்றும் மாறியபோதும் பாம்பே பல்கலைக்கழகம், மெட்ராஸ் பல்கலைக்கழகம் அதே பெயரில் வழங்கப்படுவதை அவர் சுட்டிக் காட்டினார். பெயர் மாற்றத்தை பின்பற்றுமாறு தனியார் நிறுவனங்கள், அமைப்புகளை கட்டாயப்படுத்த மாட்டோம் என்று தலைமைச் செயலாளர் கெளஷிக் முகர்ஜி கூறினார்.
இனவாதத்தின் அடிப்படையில் அல்லாமல், உள்ளூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நகரங்களின் பெயர்கள் கன்னடத்தில் மாற்றப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
பெயர் மாற்றப்பட்ட நகரங்களின் பட்டியலில் பெங்களூருவும் சேர்ந்துள்ளது. 1991-இல் டிரிவான்ட்ரம் "திருவனந்தபுரம்' என்றும், 1995-இல் பாம்பே "மும்பை' என்றும், 1996-இல் மெட்ராஸ் "சென்னை' என்றும், 2001-இல் கல்கத்தா "கொல்கத்தா' என்றும் மாற்றப்பட்டன.
பெங்களூரு பெயர் வரலாறு: பன்னாட்டு நகரமாக புகழ் பெற்றுள்ள பெங்களூரு 9-ஆம் நூற்றாண்டில் பெங்காவல்-ஊரு (காவலர்களின் நகரம்) என்றழைக்கப்பட்டது. 12-ஆம் நூற்றாண்டில் ஹொய்சளர் அரசர் இரண்டாம் பள்ளாலா, வேட்டையாடுவதற்காக பெங்களூரு காட்டுக்கு வந்த போது வழிதெரியாமல் தவித்திருக்கிறார். அப்போது, பசியால் வாடிய அரசருக்கு ஏழை மூதாட்டி வேகவைத்த பருப்பை உணவாக அளித்திருக்கிறார்.
அதற்கு நன்றிக் கடனுக்கான இந்தப் பகுதியை பெந்தே காளூரு (வேகவைத்த பருப்பு ஊரு) என்று அழைத்திருக்கிறார். இந்த பெயர் ஆங்கிலேயர் காலத்தில் பெங்களூரு என்று மருவி, பின்னர் பேங்களூர் என்று அழைக்கப்பட்டது.
16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் காலக் கட்டத்தில் குறுநில மன்னராக விளங்கிய கெம்பே கெளடா, பெங்களூரு நகரை நிறுவினார் என்று கருதப்படுகிறது. அப்போது பெந்தேகாளூருவை தனது தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்திருக்கிறார்.
தற்போது கர்நாடக மாநிலத்தின் தலைநகரமாக விளங்கும் பெங்களூரு, கடந்த சில ஆண்டுகாலமாக இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நகரமாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் சிலிக்கன்வேலி என்றும் அழைக்கப்படும் பெங்களூருவுக்கு, "ஓய்வூதியம் பெறுவோரின் சொர்க்கம்', "பூங்கா நகரம்' என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு.

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.