Sunday, September 28, 2014

நரேந்திர மோடியின் நியூயார்க் பயணச் செய்தியில் மன்மோகனை பிரதமராகக் காட்டும் காட்சிகள்: மீண்டும் சர்ச்சையில் சிக்கியது தூர்தர்ஷன்



பிரதமர் நரேந்திர மோடியின் நியூயார்க் பயணம் தொடர்பான செய்தியில் அவருக்குப் பதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கோப்புக் காட்சிகளை ஒளிபரப்பி தூர்தர்ஷன் தொலைக்காட்சி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
தவறான இக்காட்சிகள் பலமுறை "டிடி நியூஸ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தில்லியில் இருந்து புறப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, அவரது நியூயார்க் பயணம் தொடர்பான செய்திகளை மத்திய அரசின் அதிகாரப்பூர்வ 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சியான "டிடி நியூஸ்' வெள்ளிக்கிழமை ஒளிபரப்பியது.
அதில், காலையில் ஒளிபரப்பான செய்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் கோப்புக் காட்சிகளைக் காட்டுவதற்கு பதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கோப்புக் காட்சிகளை டிடி நியூஸ் செய்திக் குழு ஒளிபரப்பியது. அண்மையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் இந்தியா வருகை தந்த போது ஆங்கிலத்தில் உள்ள எக்ஸ்ஐ' என்ற வார்த்தை ரோமன் எழுத்துகளில் பதினொன்று என புரிந்து கொண்டு, டிடி நியூஸ் செய்தி வாசிப்பாளர் "பதினொறாவது ஜின்பிங்' என்று வாசித்து சர்ச்சையில் சிக்கினார்.
அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் போதிய பயிற்சியின்றி ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதால்தான் இதுபோன்ற சர்ச்சைகள் எழுவதாக மத்திய அரசு கருதியது.
இதன் விளைவாக, சீன அதிபரின் பெயரைத் தவறுதலாக உச்சரித்த செய்தி வாசிப்பாளரை பணியில் இருந்து நீக்க தூர்தர்ஷன் மேலிடம் நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், பிரதமரின் காட்சியை தவறுதலாக ஒளிபரப்பி மீண்டும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்த இரு நிகழ்வுகளுக்கு முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்பாக ஒளிபரப்பான செய்தியில் "அனந்த்நாக்' என்ற இடத்துக்கு பதில் "இஸ்லாமாபாத்' என்றும் "சங்கராச்சாரியா மலை' என்பதற்கு பதிலாக "சுலைமான் மலை' என்றும் "டிடி நியூஸ்' நிருபர் நேரலையில் பேசி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி :-தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.