Monday, September 29, 2014

ஜெயலலிதா வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு: தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில், 

ஜெயலலிதாவுக்கு வழங்கியுள்ள கோர்ட்டு தீர்ப்பு வருங்காலத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பொன்.ராதாகிருஷ்ணன் 




தமிழக முதல்–அமைச்சராக இருந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் அவர் முதல்–அமைச்சர் பதவியை இழந்ததோடு, 10 ஆண்டு காலம் தேர்தலில் போட்டியிட தடையும் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:–

பிரகாசமாக உள்ளது 

18 ஆண்டுகளாக நடந்து வந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. பா.ஜனதா கட்சி நீதியையும், நீதிமன்றத்தையும் எப்போதும் மதிக்கிறது. நீதிக்கு உட்பட்டே அனைவரும் நடக்க வேண்டும். இதுபோன்ற தீர்ப்பு வருங்காலத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

நீதிமன்றத்தால் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இது அ.தி.மு.க.வினருக்கு வருத்தத்தை அளிக்கும். ஆனாலும் தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க. ஆட்சிதான் நடந்து வருகிறது. எனவே அ.தி.மு.க.வினர் அதை எண்ணிப்பார்த்து அமைதியான சூழ்நிலை ஏற்படும் வகையில் செயல்பட வேண்டும். தவறு யார் செய்தாலும், தண்டனைக்கு உட்பட வேண்டும் என்பது நிரூபணமாகி உள்ளது. தமிழகத்தில் பா.ஜனதா கட்சியின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நன்றி :- தினத்தந்தி

0 comments:

Post a Comment

Kindly post a comment.