Flash news:

  • உலகம்
  • தமிழகச்செய்திகள்
  • கட்டுரைகள்
  • சிறப்பு செய்திகள்
  • அனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.

Monday, September 29, 2014

அரசு மதுக்கடைகளின் ரூ.210 கோடி இழப்பை அதிமுகவிடம் வசூலிக்க வேண்டும்: ராமதாஸ்

படம்: க.ஸ்ரீபரத்
படம்: க.ஸ்ரீபரத்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த வன்முறைகளில் சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துகளுக்கான இழப்பீட்டை அதிமுக கட்சியிடமே வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்திருக்கிறது.

இதனால் இயல்பு வாழ்க்கையும், அப்பாவி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அரசு, தனியார் சொத்துக்கள் பெர்ருமளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் வன்முறை தொடர்கிறது. அ.தி.மு.க.வினரின் வன்முறையை காவல்துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆளுநரும், மத்திய அரசும் தலையிட்டு தமிழகத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

மரக்காணம் கலவரத்தில் சமூகவிரோத சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட பா.ம.கவினரின் சாவுக்கு நீதி வழங்கக் கோரி 30.04.2013 அன்று விழுப்புரத்தில் போராட்டம் நடத்துவதற்காக சென்ற என்னையும், நூற்றுக்கணக்கான பா.ம.க.வினரையும் ஜெயலலிதா ஆணைப்படி காவல்துறை கைது செய்தது.

பா.ம.க.வுக்கு எதிராக கைது நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்ட ஜெயலலிதா, ஆளுங்கட்சியின் துணையுடன் சமூகவிரோதிகள் நடத்திய வன்முறையில் சேதமான சொத்துக்களுக்கு பா.ம.க. ரூ.100 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்று கூறி அதை வசூலித்து தருவதற்காக வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் தனி அமைப்பை ஏற்படுத்தினார்.

மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது வணிகம் பாதிக்கப்பட்டதாகக் கூறி பா.ம.க. ரூ.28 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று அறிவிக்கை அனுப்பப்பட்டது.

இப்போது வரலாறு திரும்பியிருக்கிறது. அப்போது பா.ம.க. செய்யாத தவறுகளுக்காக இழப்பீடு வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது அ.தி.மு.க.வினர் வன்முறை செய்ததுடன், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன; ஊடகங்கள் ஒளிபரப்பிய காட்சிகளும் உள்ளன. அந்த ஆதாரங்களின் அடிப்படையில் அ.தி.மு.க.விடம் உரிய இழப்பீட்டை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

அ.தி.மு.க.வினரால் எரிக்கப்பட்ட பேருந்துகள், சேதப்படுத்தப்பட்ட பேருந்துகள் ஆகியவற்றுக்கான இழப்பீடு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கருதப்படுகிறது.

வன்முறையால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக மதுக்கடைகள், திரையரங்குகள் ஆகியவை செயல்படவில்லை. தனியார் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் ஒரு நாளில் ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இவை தவிர, தனியார் சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இத்தகைய சூழலில் அ.தி.மு.க.வினரின் வன்முறையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும்படி இன்று புதிதாக பதவியேற்ற அரசுக்கு தமிழக ஆளுநர் ஆணையிட வேண்டும்.

1) அ.தி.மு.க.வினரின் வன்முறையால் அரசு மதுக்கடைகள் மூன்று நாட்களாக மூடப்பட்டிருப்பதால் குறைந்தது ரூ.210 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட இழப்பீட்டையும் துல்லியமாக கணக்கிட்டு அ.தி.மு.க. தலைமையிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2) அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளையும், வணிகம் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பீட்டையும் கணக்கிட்டு, அதற்குக் காரணமான அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் மீது வழக்குத் தொடர்ந்து வசூலிக்க வேண்டும்.

3) பேரூந்து எரிப்பு, உடைப்பு, கடைகள் சூறை உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளை தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
4) கடந்த ஆண்டில் ஜெயலலிதாவே கூறியவாறு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், சட்டம்-ஒழுங்கை சீரழிக்கும் வண்ணமும், வன்முறை செயல்களிலும் ஈடுபட்ட அ.தி.மு.க.வை தடை செய்யவும் அரசு தயங்கக்கூடாது" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.