Tuesday, April 1, 2014

தமிழுக்கு வளம் தந்த நீதிபதி எஸ்.மகாராஜன் ! - தி.க.சி
நீதிபதி எஸ்.மகாராஜன் அவர்களின் நூற்றாண்டு இவ்வாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது. இதையொட்டி தினமணி நாளேட்டில், வாரந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் 'வேருக்கு நீர் வார்த்தவர்கள் ' இலக்கியத் தொடரில் , 'தமிழ் இசை' என்ற தலைப்பில், 1978 இல் சென்னை தமிழ் இசைச் சங்கத்தில் எஸ்.மகாராஜன் ஆற்றிய வரவேற்புரை இருவாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது.


இக்கட்டுரையினைப் பாராட்டி தினமணியில் வாசகர் கடிதங்களும் வந்து கொண்டிருக்கின்றன. தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு, தமிழின முன்னேற்றம் ஆகியவற்றில் மகாராஜன் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார் என்பதை தமிழ்மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என்பதற்கு இது அறிகுறியாகும்.


சில மாதங்களுக்கு முன்பு, மகாராஜன் அவர்களின் புதல்வர் ஆடிட்டர் எம்.சிதம்பரம் என்னை சந்திக்க வந்தார்கள். தன் தந்தையின் நூற்றாண்டு விழாவையொட்டி, 2012 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதியன்று நூற்றாண்டு விழா மலரொன்றை தான் வெளிக்கொண்டு வரவிருப்பதாகவும், அம்மலருக்கு நான் ஒரு கட்டுரை எழுதித் தர வேண்டுமென்றும் கேட்டார்கள். நான் அவரிடம் ' கல்கி, கலைமகள் , ஆனந்த விகடன் ' போன்ற வார, மாத ஏடுகளில் வெளியான மகாராஜன் அவர்களின் கட்டுரைகளை மட்டுமே படித்திருக்கிறேன். அவருடைய நூல்கள் எதையும் இதுவரை படித்ததில்லையே..' என்றேன். அதற்கடுத்த சில தினங்களில், ஒருமுறை நேரிடையாகவும், மற்றொருமுறை அவரது உறவினர் மூலமாகவும், மகாராஜன் அவர்கள் எழுதியுள்ள ஏறத்தாழ 12 நூல்களை என் வசம் தந்தார். அந்த நூல்களை பல்வேறு வேலைக்களுக்கிடையில், சமயம் கிடைக்கும் போதெல்லாம் நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். மகாராஜன் அவர்கள் மொழிபெயர்ப்பில் சாகித்ய அகாடமி 1961 இல் வெளியிட்டுள்ள ஷேக்ஸ்பியரின் 'ஹாம்லெட்', 1965 இல் மதுரை மனோன்மணி பதிப்பகம் வெளியிட்டுள்ள 'லீயர் அரசன்', 1970 இல் பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ள 'மாக்பெத்' ஆகிய நூல்களை இன்னும் முழுமையாக வாசித்து முடிக்கவில்லை. 


மகாராஜன் அவர்களின் நூல்களை வாசிக்கும் போது, கம்பர், வள்ளுவர், இளங்கோ, திருமூலர், ஜெயங்கொண்டார், திரிகூடராசப்ப கவிராயர் முதலியோரின் நூல்களையும், பள்ளுப்பாட்டு முதலிய நாட்டுப்புற இலக்கியங்களையும் அவர் ஆழ்ந்து அகன்று நுட்பமாக கற்றறிந்து கவிச்சுவையை அறிந்திருக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது. தமிழ் இலக்கியங்கள் மட்டுமல்லாது, தற்கால ஆங்கில உரைநடை ஆசிரியர்கள் எழுதியிருக்கிற தலைசிறந்த நூல்களையும் அவர் பயின்றிருக்கிறார். 1969 ஆம் ஆண்டு 'தீபம்; இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் இவ்வாறு கூறுகிறார் மகாராஜன்.


'நான் ஆனந்தத்தை விரும்பும் போதெல்லாம் தமிழ்க் கவிதையையே அதிகமாக படிக்கிறேன். அறிவு வளத்தை பெருக்க விரும்பும் பொழுது ஆங்கில வசன நூல்களையே அதிகம் படிக்கிறேன் '             


தமிழோடும், ஆங்கிலத்தோடும் அதிகமாக வாழ்நாளெல்லாம் பழகி இருக்கும் மகாராஜன் , மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மொழிகளையும் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. என்றபோதிலும், ஈடுபாடு என்றால் தாய்மொழியில் தான் .தமிழின் தனிச்சிறப்பை மற்ற மொழிகளைக் கற்று தமிழுக்கு வரும் பொழுது தான் தன்னால் நன்றாக உணர முடிகிறது என்றும் தமிழுக்கு அப்பால் இருந்து தமிழைப் பார்த்தால் தான் தமிழின் நீள அகலங்கள் தென்படுகின்றன என்றும் மகாராஜன் திட்டவட்டமாக குறிப்பிடுகிறார்.


ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களை 1934 இல் சந்தித்த பிறகு தான் கவிதை, கலை, பண்பாடு, தத்துவம் - இவற்றின் உண்மைப் பொருள் மகாராஜனுக்கு விளங்கியது. தமிழ்மொழியின் இன்மையிலும் , கண்ணியத்திலும் , உணர்ச்சியிலும், சக்தியிலும் அவருக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது .


'சுமார் இருபது ஆண்டுகாலமாக ரசிகமணியின் கையை இறுகப் பிடித்துக் கொண்டு, கலையுலகத்தில் ஒரு சுற்று சுற்றி வந்தேன். அப்படிச் சுற்றி வரும்போது என்னுடைய சுயநலம், மேதாவித்தனம் , படிப்பு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு டி.கே.சி.யின் இதயத்தோடு ஒட்டி விஷயங்களை அனுபவிக்கக் கற்றுக் கொண்டேன். ஆங்கில மோகத்தினின்றும் விடுபட்டு நான் தமிழுக்கு அடிமையான கதை இது ' என்று மகாராஜன் உள்ளம் திறந்து கூறுவது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. மேலைய நுகர்வுக் கலாச்சார மோகத்திலும் , மொழி, இசைப் பண்பாட்டிலும், தம்மை மறந்து மூழ்கிக் கிடக்கும் தமிழ்மக்கள் மீட்சிப் பெறுவதற்கான வழி இது.


மகாராஜன் அவர்களின் நூல்களில் தலைசிறந்த படைப்பு என நான் கருதுவது , வானதி பதிப்பாகம் மே,1990 இல் வெளியிட்டுள்ள ' ரஸஞ்ஞானி டி.கே.சி ' எனும் நூலைத் தான். இந்நூலிலுள்ள 16 கட்டுரைகளும் , 16 முத்துக்கள் என்றே கூற வேண்டும். ' ரஸஞ்ஞானி டி.கே.சி, டி.கே.சி ஜாதகம், சமயச்சடங்குகளும் டி.கே.சி.யும், சீலம் சிறந்த சிதம்பரநாதன், ரஸிகமணி , டி.கே.சி.யும் மேற்கோள்களும், கடித இலக்கியம் ஆகிய கட்டுரைகள் என்னை மிகவும் ஈர்த்தன. அவற்றை நான் திரும்பத் திரும்பப் படித்து என் உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டிருக்கிறேன்.


'சமயச் சடங்குகளும், டி.கே.சி.யும் ' என்னும் கட்டுரை இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் பொருள் பதிந்தது . ' சமுதாய வளர்ச்சியிலே சடங்களுக்கு ஒரு முக்கிய ஸ்தானம் உண்டு என்பதை கண்டவர்கள் டி.கே.சி. ஆனால், சடங்குகளின் பொருளை இழந்துவிட்டு, சடங்குகளை மாத்திரம் உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டு தொங்குகிற சமுதாயம் டி.கே.சி.யின் ஏளனத்துக்கு இலக்காகுகிறது' என்று டி.கே.சியின் பார்வையை விளக்குகிறார் மகாராஜன் . 'டி.கே.சி.யுடன் என் அனுபவம்' எனும் 15 வது கட்டுரை மிக மிக முக்கியமானதாகும். தமிழ்மக்கள் அனைவரும் மனங்கொள்ளத்தக்கது .


இக்கட்டுரையினை மகாராஜனின் 'ஆன்ம ஒளி' என்றே கூற வேண்டும். தற்காலக் கவிஞர்களில் மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கவிமணி தேசிய விநாயகன் ஆகியோரைப் பற்றி இவருடைய மதிப்பபீடுகளும், பாராட்டுக்களும் மிக உயர்ந்தவை; உண்மையானவை.


'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் முச்சொல் மந்திரத்தை பிரான்ஸ் நாடு உலகுக்கு வழங்கியுள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியலிருந்தும், பிரெஞ்சு ஏகாதிபத்தியலிருந்தும் நாம் விடுதலை அடைவதற்கு இந்த மந்திரமே நமக்கு உறுதியாக இருக்கிறது . பாரத்தின் சுதந்திர போராட்டக் காலத்திலே, மகாகவி சுப்பிரமணி பாரதியாரின் படைப்புக்கள் இந்த முச்சொல் மந்திரத்தையே அடிப்படையாக கொண்டிருந்தன' என்று பாரதியின் பங்களிப்பை ஏற்று போற்றுகிறார் மகாராஜன்.


பாவேந்தர் பாரதிதாசனைப் பற்றி நீதிபதி மகாராஜனின் தீர்ப்பு இது . ' தமிழைக் கையாளத் தெரிந்த கவிஞர்கள் ஒரு சிலர் தான்.அதில் பாரதியாரின் கையைப் பிடித்துக் கொண்டே தோள் மீது ஏறியவர் பாரதிதாசன். உண்ணும் உணவும், பருகும் நீரும், திண்ணும் வெற்றிலையும், பாரதிதாசனுக்கு தமிழ் தான். தமிழையும் , பாரதிதாசனையும் தனியாக பிரித்துப் பார்க்க முடியாது; நெருப்பையும், சூட்டையும் பிரிக்க முடியுமா ?


உண்மை தான், பேரின்பத்தின் முடிவெல்லை என்பதில் பாரதிதாசனுக்கு கொஞ்சமும் சந்தேகமில்லை.


'கவிமணியும் , ரசிகமணியும்' கட்டுரையில், ' நல்லதொன்றை கண்டுவிட்டால் தலைமேல் வைத்துக் கூத்தாடும் வஞ்சகமற்ற குழந்தை உள்ளம் படைத்தவர்கள் டி.கே.சி. கண்ணாறக் காண்பதற்கு ஒரு கவிஞர் நமக்குக் கிடைத்துவிட்டார் என்று ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தார்கள் டி.கே.சி  என்று மகாராஜன் கூறுகிறார். கவிஞனுக்கும், ரசிகனுக்கும் இருக்க வேண்டிய ஆனந்த பேரூறவை இது காட்டுகிறது அல்லவா?


மகாராஜனுக்கும், மணிக்கொடி எழுத்தாளரான க.நா.சு.அவர்களுக்கும் நட்புறவு இருந்ததுண்டு. இவர்களிருவரும் ரசிகமணியின் மீது பேரன்பு கொண்டவர்கள். ரசிகமணியின் ரசிக விமர்சனத்தைப் பாராட்டி க.நா.சு. ஒரு நீண்ட கட்டுரையொன்றை எழுதியிருப்பது இத்தருணத்தில் நினைவுக் கொள்ளத்தக்கது. க.நா.சு நடத்தி வந்த ' இலக்கிய வட்டம் ' எனும் இதழையும், இலக்கியத்திற்கோர் இயக்கம் காண வேண்டும் எனும் க.நா.சு.வின் கருத்தையும் , மகாராஜன் பாராட்டி வரவேற்றார் எனபதை இச்சமயத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.


1967-68 ஆம் ஆண்டு வாக்கில், நான் சோவயத் நாடு ஆசிரியர் குழுவில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, சோவியத் நாடு பத்திரிக்கையின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மகாராஜன் அவர்கள் சோவியத் நாடு பத்திரிக்கையின் தமிழ்மொழிபெயர்ப்பு மிகச் சிறப்பாக உள்ளதென்றும், உயிர்துடிப்புள்ள தமிழில் விளங்குகிறது என்றும் பாராட்டினார்கள். இந்த சிறப்புக்கெல்லாம் காரணம், சோவியத் நாடு இதழின் மொழிபெயர்ப்பு ஆசிரியர்களாக விளங்கிய தோழர்கள்.மாஜினியும், தொ.மு.சி.ரகுநாதனும் தான். மொழிபெயர்ப்புக் கலையில் மாபெரும் சாதனையாளராக விலங்கிய மகாராஜன் அவரிடமிருந்து இப்பாராட்டைப் பெற்றதில் நாங்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம் . நல்ல விஷயங்களை கலையம்சம் பொருந்திய படைப்புகளை இலக்கியச் சாதனைகளை எங்கிருந்து கண்டாலும் எவர் படைத்தாலும் பாராட்டும் தூய உள்ளம் படைத்தவர் மகாராஜன் என்பதற்கு இது ஒரு சான்று.


1962 இல் வெளிவந்துள்ள 'ஒலிச்செல்வம்' எனும் நூலுக்கான முன்னுரையில் டாக்டர்.மு,வ. இவ்வாறு கூறுகிறார். ' டி.கே.சி ஜாதகம், ரஸஞ்ஞானி டி.கே.சி ' எனும் இரண்டும் சிறந்த கலைஞர் தலைமையில் கலைபெருங்குழுவில் கூடியிருந்து குளிர்ந்து பெற்ற கவிதையின்ப வெறியில் பிறந்தவை. உணர்ச்சி தான் கவிதை அனுபவத்திற்கு வேண்டியது எனும் கருத்தை இவை தெளிவுபடுத்துகின்றன. ஒரு புல்லின் பிறப்பிலும் மகாராஜனின் கலைப்பார்வையைக் காணலாம். புகையிலைப் பித்திலும் அவருடைய ஞான வேட்கையைக் காணலாம் ' .


தமிழறிஞர் மு.வ.வின் இந்தப் பாராட்டுரை, தமிழுக்கு பல்வேறு வகையிலும் வளம் தந்த நீதிபதி.எஸ்.மகாராஜனுக்கு கிடைத்த மகத்தான அங்கீகாரம் ஆகும் .


நீதிபதி.எஸ்.மகாராஜனின் நூற்றாண்டு விழாவை தமிழகமெங்கும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மட்டுமன்றி, அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும், ஒலி ஊடகங்களும், கலை, இலக்கிய அமைப்புகளும், ஒட்டுமொத்த தமிழ் இனமும் வருடம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டுமென்பது எனது பணிவான வேண்டுகோளாகும்.0 comments:

Post a Comment

Kindly post a comment.