சுடலைமாடன் கோயில் தெரு நம் பார்வைக்கு குறுகலாக இருப்பது. ஆனால் அந்தத் தெருவின் தோற்றத்தைத் தகர்த்துக்கொண்டு ஒரு விசாலமான மனிதர் அந்தத் தெருவின் கடைக் கோடியில் இருந்தார். திருநெல்வேலி கணபதியப்பன் சிவசங்கரன் (தி.க.சி) என்ற ஆளுமையே அவர்; வந்தாரை வரவேற்றுவிட்டால் நேரமும் காலமும் போவதுதெரியாமல் அப்படி ஒரு பேச்சு இருக்கும் அவரிடம். நீங்கள் அவர் வீட்டுக்குள் கால் வைக்கும்போது ஒருவேளை காலை 8 மணியாக இருக்கலாம்; ஆனால் அதற்குள் அவர் அன்றைய பெரும்பாலான நாளிதழ்களையும் நேற்று மாலையில் வாங்கிய இலக்கிய இதழ்களையும் படித்துமுடித்துவிட்டு ‘அந்த’ ஓரமாகத் தூக்கிவைத்திருப்பார். படித்ததில் பிடித்தது குறித்து ஒருவேளை சம்பந்தப்பட்டவர்களுக்கு தன் கைப்படவே ஒரு நாலணா கடுதாசி எழுதிக்கொண்டும் இருக்கலாம்; இன்றைய பேச்சு அநேகமாக அதிலிருந்துதான் தொடங்கும். அவர் எல்லோரிடமும் பேசுவதற்காகத்தான் பிறந்திருக்கவேண்டும்; அதை ஒரு தவமாக செய்தார். நவீன இலக்கியத்தின் அசுரத்தனமான வேகத்துக்கு ஈடுகொடுத்து சதாசர்வ காலமும் அவரும் அதன் கூடவே ஓடிவந்தார்.
6 வயதில் தந்தையையும் 7 வயதில் தாயையும் இழந்த தி.க.சிவசங்கரனை காந்திய நூல்களும் நூலகங்களும் தனிமையின் கொடுவெளியிலிருந்து கைதூக்கிவிட்டன. அந்த வரம் நேற்றுவரை அவரோடு இருந்தது. காந்தியத்தில் தொடங்கி மார்க்ஸீயத் துக்குள் நுழைந்து கடைசிவரை அங்கேயே கால்தரித்து நின்றுவிட்டார். கம்யூனிஸ்டுகளுக்கு ஆதர்சமான சோவியத் யூனியன் சரிந்து வீழ்ந்த போதும் கொஞ்சமும் சிதைவுறாத மனவுறுதியோடு, சொல்லப்போனால் இன்னும் அதிக துடிப்போடு நிமிர்ந்து நின்றார்.
அவரும் 1945-ல் ஒரு வங்கி ஊழியர். அப்படியொரு பொன்னான வாழ்க்கைக்குள் அவர் இலக்கிய ஆர்வத்தைக் கைவிட்டு தானுண்டு, தன் குடும்பமுண்டு என்று ஒதுங்கி யிருக்கலாம். ஆனால் இலக்கிய ஆர்வம் அவரை உந்திக்கொண்டு போனது.
அது தமிழகத்தின் பெரும் இலக்கிய ஆளுமைகளோடு அவரை இணைந்து செயல்படச் செய்தது. ஏற்கெனவே நெல்லை மண்ணுக்குத் தாமிரவருணி நிலவளம் தந்ததுபோல நவீன இலக்கியச் செழுமையை பாரதியும் புதுமைப்பித்தனும் தந்தார் கள். அதனால் தி.க.சி. பார்த்த இடங்க ளிலும் சென்ற இடங்களிலும் இலக்கிய ஆர்வத்தால் உந்தப்பட்ட பலரும் அவரைச் சூழ்ந்துவந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. அவரும் பல இலக்கிய ஆர்வலர்களோடும் இலக்கிய அமைப் புக்களோடும் தொடர்ந்த நட்புறவில் இருந்தார். தி.க.சி. ஆரம்பத்தில் சிறுகதைகளை எழுதினார்; பின்னர் மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொண்டார். அந்த வகையில் சீன நாவலான ‘வசந்த காலத்திலே’ கவனம் பெற்றது. மேலும் 5 மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. பின்னர் தமிழ் இலக்கியப் போக்குகளை அறிந்த நிலையில் ஒரு விமர்சகராகத் தன்னை மாற்றிக்கொண்டார்.
அவரால் உத்வேகம் பெறாத தற்கால படைப்பாளிகள் மிகக் குறைவு. தன்னுடைய வங்கிப் பணியை விட்டு விட்டு சோவியத் நாடு இதழ்ப் பணியை சென்னையிலிருந்து செய்யும் போதே தாமரை இலக்கிய இதழின் பொறுப்பாசிரியராகவும் செயல் பட்டார். அவர் பொறுப்பில் வெளியான ‘தாமரை’யின் 100 இதழ்கள் இன்றளவும் இலக்கிய வட்டாரத்தில் மிகுந்த மதிப்பிற்குரியதாக இருக்கின்றன. மாநிலத்தின் அனைத்து இலக்கிய ஆளுமைகளோடும் நல்ல நட்புறவை வகுத்துக்கொண்டார்.
2000-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற தி.க.சியைப் பற்றிய ‘21.இ சுடலைமாடன் கோயில் தெரு- திருநெல்வேலி டவுன்’ என்கிற எஸ். ராஜகுமாரன் இயக்கிய ஆவணப் படமும் அவர் பெருமை பேசும்.
அடுத்த இரண்டு நாள்களில் 90-ம் அகவைக்குள் நுழையவிருந்த தி.க.சி ஏதோ கவனத்தில் வானுலகம் போய்விட்டார்; இந்த முறை மட்டும் அவர் இலக்கு திசைமாறிவிட்டது!.
தி இந்து
0 comments:
Post a Comment
Kindly post a comment.