Sunday, April 6, 2014

தமிழச் சாதியை என்செய நினைத்தாய்? - பழ. நெடுமாறன்



விதியே... விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தா யெனக்குரை யாயோ - என மனம் நொந்து பாரதி பாடினார். இலங்கை, மலேசியா, பிஜித் தீவு, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இரப்பர், தேயிலைத் தோட்டங்கள் அமைப்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் சொல்லொண்ணாத துன்பங்களுக்கு ஆளாகி நலிவதைக் குறித்து மனம் பொறாமல் இப்பாடலை பாரதி பாடினார்.

இப்பாடலை பாரதி பாடி கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் ஆன பிறகும். பூமிப் பந்தில் வாழ்கிற தமிழர்களின் துயரங்கள் தீரவில்லை. நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கிறதே தவிர, குறைந்தபாடில்லை.

1948ஆம் ஆண்டிலிருந்து தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வந்த இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை சர்வதேச சமுதாயம் தடுத்து நிறுத்த முன் வரவில்லை.

கொடிய குற்றங்களில் ஈடுபட்ட சிங்கள அரசுகள் தண்டனைகளிலிருந்து தப்பியதோடு, தங்கு தடையின்றித் குற்றங்களைத் தொடர்ந்தன. தமிழர்களுக்கு எதிரான தங்களது கொடூரமான செயல்களை கடந்த 66 ஆண்டு காலமாக சிங்கள அரசுகள் மேற்கொண்டு வந்த இந்த இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு இத்தீர்மானம் முதல் தடவையாக முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்கிறது.

வரைவுத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தபடி வடகிழக்கில் பகுதியிலிருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என்ற பகுதி இந்தியாவின் அழுத்தம் காரணமாக நீக்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் சர்வதேச விசாரணை என்பது பல சிக்கல்களை சந்திக்க நேரும். வீதி தோறும் இராணுவம் முகாமிட்டிருக்கும் போது அதற்கு எதிராக சாட்சியம் அளிக்க யாரும் முன்வர மாட்டார்கள். இதன் விளைவாக இலங்கையின் இனப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படுவதற்குப் பதில் அப்பிரச்னையை மேலும் அதிகமாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தனது பிராந்திய நலன்களுக்கு உள்பட்ட நாடான இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தடுத்து நிறுத்தாததோடு சிங்கள அரசின் செயல்களுக்கு துணை போன இந்திய அரசை இனியும் நம்புவதால் எந்தப் பயனும் இல்லை என்ற முடிவுக்கு தமிழர்கள் வந்தனர். தமிழர் வரலாற்றில் மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் அவர்களுக்குத் துணை நிற்க வேண்டிய இந்தியா, நேர் மாறாகச் செயல்பட்டதின் காரணமாக வேறு நாடுகளின் ஆதரவைத் தேடி தமிழர்கள் செல்ல வேண்டிய நிலை உருவானது.

தமிழர்களின் எதிர்காலத்திற்கும் தெற்காசியாவின் எதிர்கால அரசியலுக்கும் உத்திரவாதம் தரும் நாடுகளாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மேற்கு நாடுகள் முன் வந்ததற்கு இந்தியா செய்த தவறே காரணமாகும்.

தெற்காசியாவில் உள்ள பர்மா, திபெத், இலங்கை போன்ற நாடுகளில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் காவலாக இருக்க வேண்டிய இந்தியா, தனது வரலாற்றுக் கடமைகள், பூகோள ரீதியான முதன்மை, உள்ளார்ந்த அரசியல் எல்லாவற்றிற்கும் மேலாக மனசாட்சி ஆகியவற்றைப் தூக்கி எறிந்து இவ்வாறே தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது.

சீனா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகளின் எதிர்ப்புக்கிடையே அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தின் விளைவாக இந்தியா முற்றிலுமாக தனிமைப்படுத்தப் பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் முன்மொழியப்பட்ட நிலையிலேயே அதைத் தடுத்து நிறுத்த பாகிஸ்தான் கடும் முயற்சி செய்தது. இலங்கையில் சனநாயகமும், சனநாயக அமைப்புகளும் இத்தீர்மானத்தின் மூலம் புறக்கணிக்கப்படுவதாக பாகிஸ்தான் கூறியது. அது மட்டும் அல்ல. இத்தீர்மானத்தின்படி நடவடிக்கைகள் எடுப்பதற்கு தேவையான நிதி வசதி மனித உரிமை ஆணையத்திடம் இல்லை என பாகிஸ்தான் வாதாடியது. ஆனால் அவை எடுபடவில்லை. உடனடியாக சீனா தலையிட்டு இந்தத் தீர்மானம் குறித்து விவாதிப்பதை ஒத்திவைக்கும்படி கோரியது.

இவ்விருநாடுகளும் இலங்கை அரசுடன் எப்போதும் ஒத்துழைக்கிற நாடுகள். ஆனால், இந்நாடுகளுடன் கியூபா சேர்ந்து கொண்டது வியப்பளித்தது. அமெரிக்காவுக்கு எப்போதும் எதிர்ப்புத் தெரிவித்துவரும் கியூபா இத்தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்த காரணத்தினால் எதிர்த்து வாக்களித்தது. இறுதியாக சர்வதேசப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என இத்தீர்மானத்தில் கூறப்பட்டிருந்ததை தடுத்து நிறுத்த சீனா, பாகிஸ்தான், கியூபா ஆகிய நாடுகள் இணைந்து பெருமுயற்சி செய்தன.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த நார்வே செய்த முயற்சிகளை தகர்த்த இந்தியா, இப்போதும் சர்வதேச புலன் விசாரணையைத் தடுத்து நிறுத்த எல்லா வகையிலும் முயன்றதின் மூலம் இலங்கையுடன்தான் இந்தியா இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற இராணுவத்தின் அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான நடுநிலையான விசாரணை நடைபெற ஒரு குழுவை நியமிக்க அனைத்து நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசை இந்தியா வலியுறுத்தும் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளிவந்தவுடனேயே சிங்கள அரசு எச்சரிக்கையாகி இந்தியாவை மிரட்டிப் பணியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

கடந்த இருமுறை அமெரிக்கத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்தது. எனவே, இம்முறை அவ்வாறு செய்வதிலிருந்து இந்தியாவைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சில இரகசியங்களை சிங்கள அரசு அம்பலப்படுத்தியது. தன்னுடன் இந்தியா சிறந்த முறையில் இராணுவ ஒத்துழைப்பை வைத்துள்ளதாக உலகத்திற்கு உணர்த்தும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக சென்ற இந்திய இராணுவ தென்பிராந்தியத் தளபதி அசோக் சிங், இந்தியக் கடற்படை தலைமைத் தளபதி டி.கே.தோஷி ஆகியோர் இலங்கை அதிபர் இராசபக்சேயுடன் நடத்திய சந்திப்பு சம்பந்தமான புகைப்படங்களையும், இன்னும் அதிகமான சிங்கள இராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் பயிற்சி அளிக்க இந்தியா அளித்த வாக்குறுதியையும் இலங்கை அரசு தன்னுடைய வலைதளங்களில் வெளியிட்டு அம்பலப்படுத்தியது. அது மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் வடக்கு-கிழக்கு மாநிலங்களில் காணாமல் போனவர்கள் குறித்து நடத்தும் விசாரணையை இந்திய அமைதிப்படை இருந்த காலத்திலிருந்தே, அதாவது 1987 முதல் 2009 வரை விசாரணை நடத்த வேண்டும் என இராசபக்சே ஆணைப் பிறப்பித்தார்.

இந்தியாவின் நிதியமைச்சராக இருக்கக்கூடிய ப. சிதம்பரம் அண்மையில் அளித்த நேர்காணலில் ஐ.நா.வில் இலங்கைக்குக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. தீர்மானத்தை ஆதரிக்க வேண்டாம் என்ற முடிவு மத்திய அமைச்சரவையின் முடிவு அல்ல. அது வெளியுறவுத்துறையின் முடிவு என்று கூறியிருக்கிறார்.

வெளியுறவுத்துறையின் செயலாளரான சுஜாதாசிங் இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் அமெரிக்கத் தீர்மானம் அமைந்திருந்ததால், அதை இந்தியா ஆதரிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அப்படியானால் பாகிஸ்தானின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஊறுவிளைவிக்கும் வகையில் இந்திய இராணுவத்தை அனுப்பி, வங்க தேச விடுதலைக்கு இந்தியா உதவியதும் தவறாகிவிடும். நேரு, இந்திரா ஆட்சிக் காலங்களில் இந்திய அரசு என்ன செய்தது என்பதையே சற்றும் தெரிந்து கொள்ளாதவர்கள் முக்கியப் பொறுப்புகளில் இருப்பது காலம் செய்த கோலம்தான்.

தமிழக சட்டமன்றத்தில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் முதலமைச்சரால் முன்மொழியப்பட்டு அனைத்துக்கட்சிகளாலும் ஆதரிக்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தீர்மானத்திற்குப் புறம்பாக இந்திய அரசு நடந்து கொண்ட முறை ஏற்கெனவே புண்ணாகிப்போன தமிழர்களின் நெஞ்சங்களில் வேலைச் செருகுவது போன்றதாகும்.

இந்தியாவில் வாழும் ஏழரைக் கோடி தமிழ் மக்களின் ஒருமித்தக் கோரிக்கையைவிட ஒன்றேகால் கோடி சிங்களரை சர்வதேச விசாரணையில் இருந்து காப்பதே முக்கியமானது என இந்திய அரசு உறுதிகொண்டிருப்பது அம்பலமாகியிருக்கிறது.

போர்க் குற்றவாளிகள், சர்வதேச மனித உரிமைகளையும் சட்டங்களையும் அப்பட்டமாக மீறுகிற மனித சமுதாயத்தின் பகைவர்கள், தங்களின் பாலியல் வெறிக்கு ஒட்டுமொத்தத் தமிழ்ப் பெண்களை இரையாக்கி வருபவர்கள் ஆகியோரைப் பாதுகாப்பதுதான் தனது தேசிய நலன்களுக்கு உகந்தது என இந்தியா நினைக்குமானால், அது தேசத்தந்தையான காந்தியடிகளுக்கு இழைக்கப்படுகின்ற துரோகமாகும்.

இந்தியாவின் போரைத்தான் தாங்கள் நடத்தினோம் என மகிந்த இராசபக்சேயும் அவருடைய சகோதரர்களும் திரும்பத் திரும்ப கூறிவருவதை மத்திய அரசோ அல்லது வெளியுறவுத்துறையோ இதுவரை மறுக்கவில்லை. தமிழர் நெஞ்சங்களில் இவையெல்லாம் புகைந்துகொண்டிருக்கிறது. வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலில் இதற்குரியத் தண்டனையை காங்கிரஸ் கட்சிக்கு தமிழர்கள் அளிப்பார்கள்..

தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.