Thursday, March 13, 2014

இரும்புத் தாது எடுக்க எதிர்ப்பு: வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய மக்கள்



திருவண்ணாமலை அருகே கவுத்தி, வேடியப்பன் மலைகளில் இரும்புத் தாது வெட்டி எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையை அடுத்த கவுத்தி மலை மற்றும் வேடியப்பன் மலைகளில் இருந்து இரும்புத் தாது வெட்டி எடுக்க அனுமதி கேட்டு மத்திய-மாநில அரசுகளிடம் தனியார் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இம் முயற்சிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே கடும் எதிர்ப்பு எழுந்ததால் இத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட சிறப்புக் குழு கவுத்தி, வேடியப்பன் மலைகளில் இருந்து இரும்புத் தாது வெட்டி எடுப்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொண்டது.

இதையடுத்து, இரும்புத் தாது வெட்டி எடுக்க மத்திய-மாநில அரசுகள் அனுமதி அளித்துவிட்டதாக பொதுமக்களிடையே தகவல் பரவியுள்ளது. எனவே, இரும்புத் தாது வெட்டி எடுக்கப்பட்டால் பாலியப்பட்டு, இனாம்காரியந்தல், வெங்காய வேலூர் உள்ளிட்ட சுமார் 20 கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் இத் திட்டத்துக்கு மத்திய-மாநில அரசுகள் அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பாலியப்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் வீடுகளில் புதன்கிழமை (மார்ச் 12) கருப்புக் கொடி ஏற்றினர்.

மேலும், பாலியப்பட்டு ஊராட்சியில் உள்ள அம்மன் கோயில் எதிரே சுமார் 150 பேர் திரண்டு கையில் கருப்புக் கொடிகளை ஏந்தியபடியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.