Wednesday, March 12, 2014

எழுத்தாளனாக இருப்பது சவால் மிக்கது: - ஜோ டி குரூஸ்

எழுத்தாளனாக இருப்பது சவால் மிக்கது: சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜோ டி குரூஸ் பேச்சு

தில்லி கமானி அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ""கொற்கை'' நாவலுக்கான சாகித்ய விருதை எழுத்தாளர் ஆர்.என். ஜோ டி குருஸ்ஸýக்கு வழங்குகிறார் அதன் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி.
"எழுத்தாளனாக இருப்பது சவால்மிக்கது' என்று சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஆர்.என். ஜோ டி குரூஸ் தெரிவித்தார்.

2013-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் வழங்கும் விழா தில்லி கமானி அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 24 இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளை அளித்த எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாதெமி விருதுகளை அதன் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி வழங்கினார். 

 இதில் தமிழில் "கொற்கை' நாவலுக்கான சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றுக் கொண்டு  எழுத்தாளர் ஆர்.என். ஜோ டி குரூஸ் பேசுகையில், "சமூகத்தின் அநீதிகள், யாதார்த்தம் ஆகியவை தொடர்பான படைப்புகளை உருவாக்கும் எழுத்தாளர்கள் மட்டுமன்றி, அவரது குடும்பமும், குழந்தைகளும் சமூகவிரோத சக்திகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர்.  பொறுப்புமிக்க எழுத்தாளனாகவும், படைப்பாளியாகவும் இம் மனித குலத்துக்கு, சமூகத்துக்குத் தொண்டாற்ற நினைக்கும் சூழலில் இத்தகைய சமூகவிரோத சக்திகளின் மத்தியில் எழுத்தாளனாக இருப்பது சவால் நிறைந்ததாக உள்ளது. அவர்கள் எழுத்தாளனை அச்சுறுத்த முடியுமே தவிர, அவனது சிந்தனை சுதந்திரத்தை அசைக்க முடியாது' என்றார்.

 ஹிந்தி எழுத்தாளர் மிருதுளா கர்க் பேசுகையில், "படைப்புகள் மூலம் உங்களது சிந்தைனைகளை வெளிப்படுத்த அச்சம் கொள்ளக் கூடாது. அச்சத்துடன் இருப்பவர்கள் எழுத்தாளர்களாக இருக்க முடியாது' என்றார்.  வங்கக் கவிஞர் சுபோத் சர்கார் பேசுகையில், "சமூகத்தைப் பாதிக்கும் விஷயங்களைப் பார்த்து, எழுத்தாளன் கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது' என்றார். 

தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.