Monday, March 10, 2014

கொஞ்சம் என்னைப் போலவும்.....! - அன்புடன் அருணா



கண்ணாடியில் ஒட்டும் பொட்டுக்களும்
கையில் பேனாக் கிறுக்கல்களுடன்
தொலை பேசி உரையாடல்களுமாய்
என்னைப் போல்....

வண்டியை ஓட்டும் சிரத்தையிலும்
பத்திரப்படுத்தும் காகிதப் பழக்கத்திலும்
அப்பாவைப் போல்...

அடுத்தடுத்து சேனல் மாற்றுவதிலும
நாள் முழுவதும் தலை பின்னுவதிலும்
விடாது பாட்டுக் கேட்கும் குணத்திலும்
அக்காவைப் போல்....

நாட்கள் மரங்கள் உதிர்ந்த இலை
போல உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன...
குட்டிம்மாவைப் பெரியளாக்கிக் கொண்டே...
பொக்கிஷமாய் வைத்து
விளையாடிய செப்புச் சாமான்களும்
பார்பி பொம்மைகளும்
பரணில் குடியேற்றப்பட்டன....

ஷின்சான் ,டோரெமோன்,
டாம் அண்ட் ஜெர்ரி
அனாதையாக்கப் பட்டார்கள்...

பிறந்த நாளை எதிர்பார்த்து
நாட்களை எண்ணும் வைஷு
எங்கேயோ ஓடி ஒளிந்து கொண்டாள்...

ஓயாமல் மணல் அள்ளிக் கொட்டும்
கடல் அலை போல ஓடி ஓடி
எதையேனும் இழுத்து வந்து
போட்டுக் கொண்டேயிருக்கிறது மனம்.

பொண்ணுங்க இப்படித்தான்
திடீர்னு நமக்குச் சொந்தமில்லாமல்
போய்விடுகிறார்கள் ......

எங்கே பறித்து வைத்தாலும்
மணம் வீசும் மலராகவும்
எங்கேனும் தன் வேரை ஊன்றிக் கொள்ளவும்.
மழை குடித்துக் கொள்ளவும்.
காற்றைச் சுவாசிக்கவும்....
வெயிலை உடுத்திக் கொள்ளவும்....
வைஷுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!! 

0 comments:

Post a Comment

Kindly post a comment.