Thursday, March 13, 2014

தமிழ் எண்களும் அரபு எண்களும்



தாய்மொழியின் உயர்வைப் பற்றி உலகச் சிந்தனையாளர்கள் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் அரசு கவலைப்படுவதில்லை; மக்களும் கவலைப்படுவதில்லை; மொழியறிஞர்களும் கவலைப்படுவதில்லை.

உலக அளவில் கல்வி மற்றும் உளவியல் வல்லுநர்கள் தாய்மொழிக் கல்வியின் இன்றியமையாமையை வலியுறுத்தியுள்ளனர். இந்திய நாட்டில் மகாத்மா காந்தி, கவி தாகூர் போன்றவர்கள் கூறியும் யாரும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இந்திய அரசியலாரும், தமிழகக் கல்வித் துறையும் இதனை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.

இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் மக்கள் பேச்சு வழக்கிலிருந்து காணாமல் போய்விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குஜராத் மாநிலம் வதோதராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் "பாஷா' என்கிற ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு நிறுவனம், கடந்த 2011 முதல் இது குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. இந்த ஆய்வின் முடிவுதான் இவ்வாறு கூறுகிறது.

இந்தியாவில் ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த மொழிகளில் 20 விழுக்காடு மொழிகள் அழிந்திருப்பது தெரிய வந்துள்ளது என்றும், இந்த ஆய்வில் மொத்தம் 780 மொழிகள் மட்டுமே கண்டறிய முடிந்தது என்றும், கண்டறிய முடியாமல் விடுபட்ட மொழிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்தியாவில் இப்போது 880 மொழிகள் புழக்கத்தில் இருக்கின்றன என்று முடிவுக்கு வந்திருக்கிறோம் என்றும் ஆய்வின் ஒருங்கிணைப்பாளர் கணேஷ்தேவ் கூறியுள்ளார்.

உலக அமைப்பான ஐ.நா.வின் யுனெஸ்கோ மையம் "தாய்மொழிகள் தின'த்தைக் கொண்டாட அறிவுறுத்துவதன் நோக்கமும் இதுதான். உலக அளவில் மறைந்து கொண்டிருக்கும் மொழிகளை மீட்டெடுப்பதற்கு இது பயன்படும். இவ்வாறு அழிந்து கொண்டிருக்கும் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருந்துவிடக் கூடாதல்லவா!

இன்று தமிழ்நாட்டில் எங்கும் தமிழ் இல்லை. 1957இல் ஆட்சிமொழிச் சட்டம் வந்தும் அரசின் அலுவலகங்களில் இன்னும் நிர்வாக மொழியாக தமிழ் கொண்டு வரப்படவில்லை; கோயில்களில் வழிபாட்டு மொழியாகவும் இல்லை; இசையரங்குகளில் பாட்டு மொழியாகவும் இல்லை; கல்வி நிலையங்களில் பயிற்சி மொழியாகவும் இல்லை; இதுவரை இருந்து வந்த அரசுப் பள்ளிகளிலும் இவ்வாண்டு முதல் ஆங்கிலம் வந்து அமர்ந்து கொண்டிருக்கிறது. இப்படி எங்குமே இல்லாத தமிழை எப்படி காப்பாற்றுவது?

தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாடமொழியாகப் படிக்கவும் எண்ணற்ற தடைகள். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள தமிழ் நூல்களிலும், வினாத்தாள்களிலும் தவறுகள் மிகுதி. எடுத்துக்காட்டினாலும் திருத்தம் செய்வது இல்லை. இப்போது தமிழ்ப் பாட நூல்களில், தமிழ் எண்களை  "அரபு எண்கள்' என்றே வெளியிட்டு வருகின்றனர்;

அவற்றைப் பற்றி கேள்விகளும் கேட்டு,

மாணவர்களுக்குத் தவறாக வழிகாட்டுகின்றனர்.  தமிழ்ப் பாடநூல் குழுவினருக்குத் தமிழறிவு வேண்டாமா?

தொடக்கப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை அரசாங்கம் வெளியிட்டுள்ள தமிழ்ப் பாட நூல்களில் பயிற்சி வினாக்களாக "பொருத்துக' என்ற தலைப்பில் "அரபு எண்கள்' "தமிழ் எண்கள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது உலகம் எங்கும் வழக்கில் இருக்கும் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ஆகிய எண்கள் அரபு எண்கள் என்றும், க, உ என்று தொடங்குகின்ற எண்கள் தமிழ் எண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இது பிழையான பாடமாகும்.ஒரு மொழிக்கு எண்ணும் எழுத்தும் இரு கண்களாகும். அவற்றை தவறாகக் கற்பிக்கலாமா?

இப்போது வழக்கில் இருக்கும் 1, 2, 3 என்னும் எண்கள் இந்திய எண்கள் என்பதும், அதிலும் தமிழ் எண்கள் என்பதும் தமிழ் வரலாறும், கல்வெட்டுகளும் கற்றவர்கள் நன்கு அறிவர். ஆயினும் இது தமிழ் மக்களிடையேயும் எடுத்துக் கூறப்படவில்லை. தொடர்ந்து இந்த வரலாற்றுப் பிழை நிகழ்ந்து வருகிறது.



1961ஆம் ஆண்டு புது தில்லியில் மத்தியக் கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அப்போது தமிழகக் கல்வியமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியமும் கலந்து கொண்டார். அப்போது, இந்தியாவில் கல்வி தொடர்பாக உலகத்தில் வழங்கி வரும் அராபிய எண்களையே பயன்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனைக் கண்டித்து பாரதிதாசன் தனது "குயில்' ஏட்டில் 24.1.2061 அன்று, "அராபிய எண்கள் தமிழ் எண்களே' என்று எழுதியுள்ளார்.

"ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் வரி வடிவம் எப்படி இருந்தது என்பதை அரசினர் ஆராய்ச்சித் துறையின் சுவடியில் காண்க. கண்டால் இன்றைய 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ஆகியவை தமிழ் எழுத்துகளே என்பதைத் தெரிந்து கொள்ளலாம்...' என்று விளக்கிக் கூறிய பாரதிதாசன், இந்தத் தமிழ் எண்களை "அராபிய எண்கள்' என வழங்குவதன் காரணத்தையும் விவரித்துள்ளார்.

"இந்தத் தமிழ் எண்களை இங்கு வணிகத் தொடர்புடைய அராபியர் கொண்டு போயினர். அவர்களிடமிருந்து மேல் நாட்டினர் கற்றுக் கொண்டனர். ஒரு மாற்றமும் செய்யாமல் அவர்கள் அப்படியே எடுத்தாண்டனர். அவர்கட்குக் கிடைத்த அன்றைய உருவமே இன்றைய உருவம். ஆனால் தமிழகத்தில் அந்த உருவம் நாளடைவில் மாற்றத்திற்கு உள்ளாயிற்று. இது இயற்கைதான்...' என்றும் எழுதியுள்ளார்.

இந்த உண்மை உலகத்துக்குத் தெரியாமல் போனது ஏன்? தெரிய வைக்க வேண்டிய தமிழறிஞர்கள் இதுவரை என்ன செய்து கொண்டு இருந்தனர்? தொடர்ந்து தமிழ் அரசியலாரால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அதன் சிறப்புகள் மூடி மறைக்கப்பட்டதில் வியப்பென்ன இருக்கிறது? தமிழின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்களே இதுபற்றி அக்கறை செலுத்தாதபோது, தமிழ் மக்களைக் குறை கூறி என்ன பயன்?



டாக்டர் மு. வரதராசனார் "மொழி வரலாறு' நூலில், 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 என்ற இந்த எண்கள் தமிழ் எண்களே என்பதைக் கல்வெட்டுத் துணை கொண்டு நிறுவியுள்ளார்: அது வருமாறு:

"1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என இன்று உலகமெங்கும் எழுதப்படும் எண்கள் அரபி எண்கள் என்று கூறப்படுகின்றன. ஆனால் அரபியர்களுக்கு இந்த எண்களின் பழைய வரலாறு பற்றி ஒன்றும் தெரியவில்லை; அவர்கள் இவற்றை இந்திய எண்கள் என்கிறார்கள். வடநாட்டு அறிஞர்களுக்கு இவற்றின் தோற்றம் பற்றி ஒன்றும் விளங்கவில்லை. தமிழ்நாட்டின் பழைய எண் வடிவங்களைப் பற்றி இவர்கள் அறியாமல் இருத்தலே இவ்வாறு அனைவரும் தடுமாறுவதற்குக் காரணம் ஆகும். அரபி எண்கள் என்றும், இந்திய எண்கள் என்றும் இவ்வாறு தடுமாறிக் கூறப்படும் அந்த எண்கள் (1, 2, 3 முதலியவை) பழைய தமிழ் எண்களே.

இவ்வாறு இந்த எண்கள் தமிழ் எண்களே என்பதற்கு அழிக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன. அத்துடன் அரபு மொழிக்கென தனி எண் வடிவங்கள் உள்ளன. அம்மொழி வல்லாரும் அதற்கு உரிமை கொண்டாடவில்லை. தமிழ் மொழியின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும், அறியாமையின் காரணமாகவும் இவ்வாறு கூறப்படுகின்றன. உண்மையை எத்தனை காலம் மறைக்க முடியும்?

தமிழக அரசும், கல்வித் துறையும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். பாடநூல் குழுவில், தேர்ந்த அறிஞர்களை நியமித்துக் கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் மனதில் தவறாக கருத்துகளை விதைக்கக் கூடாது. 

உலகச் செம்மொழியாகவும், மக்கள் வழக்கில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழியாகவும் இருப்பவை தமிழும், சீனமும் மட்டுமே! மற்றைய செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், வடமொழி ஆகியவை வழக்கொழிந்து போய்விட்டன. காரணம் என்ன? மக்களின் பயன்பாடு இல்லாமல் போனதுதானே! அந்நிலை தமிழுக்கும் வந்துவிடக் கூடாது என்று தமிழ் ஆர்வலர்கள் கவலைப்படுவதில் தவறென்ன?

"மெல்லத் தமிழ் இனிச் சாகும்' என்று யாரோ ஒரு பேதை உரைத்ததற்கே ஆத்திரம் கொண்டவர் பாரதி. அவர் வழியில் வந்த தமிழ் மறவர்கள் அதற்கு இடம் கொடார் என்று நம்புவோம்.















தினமணி 

1 comments:

  1. தமிழ் எண் கொடை மட்டுமன்று; எழுத்தில் தொடங்கி, உலகமொழிகள் பலவற்றிற்கு உயிர்நாடியாகவும் திகழ்ந்துள்ளது. உண்மைத் தமிழர் உறங்கிக்கிடந்தால், தமிழின் உயர்வு மண்ணில் தங்கம் போல மறைந்து கிடப்பதில் வியப்பென்ன இருக்கிறது. அருமையான கட்டுரை; தெரியாதவர்கள் இதைப் படித்தாவது தெளிவுபெறுதல் வேண்டும்.

    ReplyDelete

Kindly post a comment.