Sunday, March 2, 2014

பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது: 8.26 லட்சம் பேர் எழுதுகிறார்கள்


பிளஸ்-2 தேர்வு நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் 8,26,117 மாணவ - மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

பிளஸ்-2 தேர்வு மார்ச் 3-ம் தேதி (நாளை) தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் 6004 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 26 ஆயிரத்து 117 மாணவ - மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 2,80,288 பேர். மாணவிகள் 4,45,829 பேர்.

இந்த தேர்வுக்காக தமிழகம், புதுச்சேரியில் 2,242 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 58 சிறைவாசிகள் பங்கேற்பு சென்னை புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தேர்வு மையத்தில் 58 சிறைவாசிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

இந்தத் தேர்வில் டிஸ்லெக்சியா, பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேச இயலாதோர் ஆகியோருக்கு கூடுதலாக 1 மணி நேரம் அளிக்கப்படும். அவர்களுக்கு தேர்வு மையங்களில் தரைத்தளங்கள் ஒதுக்கப்படும்.

தமிழ்வழியில் தேர்வு எழுதும் 5,45,771 பேருக்கு தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டர் வசதி தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. காப்பி அடித்தால் நடவடிக்கை தேர்வில் காப்பியடிக்கும் மாண வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாக இருக்கும் பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு மையமாக செயல்படும் பள்ளிகளில் அப்பள்ளிகளைச் சேர்ந்த தாளாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகி கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அடிப்படை பணியாளர்கள் தேர்வு நடக்கும் வளாகத்தில் இருக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டம் சென்னை மாவட்டத்தில் 144 மையங்களில் 24,608 மாணவிகள் உள்பட 53,357 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இவர்கள் தவிர தனித்தேர்வர்களாக 7,943 பேரும், தக்கல் திட்டத்தின் கீழ் தனியாக 3,177 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்கும் வகையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் 300 உறுப்பினர்கள் கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு இருப்பதாக முதன்மை கல்வி அதிகாரி டி.ராஜேந்திரன் தெரிவித்தார் .

தி இந்து 

0 comments:

Post a Comment

Kindly post a comment.