இந்த இருபத்தோறாம் நூற்றாண்டில் மக்களை மிகவும் அச்சுறுத்தும் பிரச்னையாக சாலை விபத்துகள் உள்ளன. அந்த வகையில் சாலை விபத்துகளால் மனித உயிர்கள் நித்தம் கொத்து கொத்தாக மாள்கின்றன. காலையில் வீட்டை விட்டு சென்றவர்கள் இரவு வீடு வந்து சேர்ந்தால்தான் நிச்சயம். அந்த அளவுக்கு சாலை விபத்துகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வளர்ந்து வருகின்றன.
சாலை விபத்துகளுக்கு ஓட்டுநரின் அலட்சியம், சாலை விதிகளை கடைபிடிக்காமை, அவசரம், தூக்கமின்மை, உடல் சோர்வு, வாகனத்தின் தன்மை அறியாதிருத்தல், கைபேசியில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவது போன்ற பல காரணங்களை சொன்னாலும், பெரும்பாலான சாலை விபத்துகள் பேருந்துகள், லாரிகள், கார்கள் போன்ற பெரிய வாகனங்கள் செல்ல வசதியில்லாமல் மிகவும் குறுகலாகவும், சிறியதாகவும் சாலைகள் இருப்பது மற்றும் சாலைகளின் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்துவது தான் என்பதை ஏனோ நாம் வசதியாக மறந்து விடுகிறோம். அக்காலத்தில் மன்னர்கள் மக்களின் வசதிக்காக சாலைகளின் இரு புறங்களிலும் நிழல் தரும் மரங்களை வளர்த்து இயற்கையைப் பாதுகாத்தார்கள். ஆனால், இக்காலத்தில் சாலையின் இரு மருங்கிலும் வாகனங்கள் ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு தடையாக உள்ளன.
ஒவ்வொரு வருடமும் வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பேருந்துகள், சிறிய ரக கார்கள், இரு சக்கர வாகனங்கள் போன்றவை சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தததை விட இன்று பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், அந்த அளவுக்கு சாலைகளின் விரிவாக்கம் இல்லை. தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும், வியாபாரத்தைப் பெருக்க சாலைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள், கடைகள் கட்டுவதால் வாகன நெரிசல் அதிகமாகி பல விபத்துகள் ஏற்படுகின்றன.
பெரும்பாலான சாலைகள் ஆங்கிலேயர்கள் காலத்தில் போடப்பட்டவை. அப்போது மக்கள் தொகையும் குறைவு, மோட்டார் வாகனங்களும் குறைவு. பெரும்பாலனவர்கள் மிதிவண்டிகளில் தான் பயணிப்பர். அப்போதெல்லாம் மிதிவண்டிகளில் இருவர் பயணித்தாலும், விளக்கின்றி சென்றாலும் அது அபாயகரமானதாகக் கருதப்பட்டு அபராதமும் விதிக்கப்படும். ஆனால், இப்போது தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இக்காலத்திலும் நாம் அதே சாலைகளை தான் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகள் பெருமளவில் குடியிருப்புவாசிகளாலும், சாலைகளின் அருகில் இயங்கி வரும் கடைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. தங்களுக்கு வசதியாக கடைகள் மற்றும் வீடுகளின் முன்பு முற்றம் போல் அமைத்து, பொது மக்கள் நடந்து செல்ல அமைக்கப்பட்ட நடைமேடைகளும் கடைகளால் நிரம்பி வழிகின்றன. பொது மக்கள் வேறு வழியின்றி சாலைகளின் நடுவே நடப்பதால் விபத்தை விலைக்கு வாங்கி தங்கள் உறவுகளை பரிதவிக்க விட்டு செல்கின்றனர். அதனால், இப்பொழுதெல்லாம் சாலைகளில் நடந்து செல்வதுகூட பாதுகாப்பானதாக இல்லாமல் ஆகி விட்டது.
சாலைகளை குடியிருப்புவாசிகள் ஆக்கிரமிப்பு, கடைகள் ஆக்கிரமிப்பு என்ற நிலையிலிருந்து மாறி, இப்போது வாகனங்களே சாலைகளை ஆக்கிரமித்துக் கொண்டு மற்ற வாகனங்கள் சுலபமாக சென்று வர வழி விட மறுக்கின்றன. சாலைகளின் இரு புறங்களிலும், அது பெரிய சாலைகளாகட்டும், சிறிய சாலைகளாகட்டும் சமூகப் பொறுப்பற்றவர்களால் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் எளிதில் செல்ல முடியாதப்படி வாகன ஓட்டுநர்களுக்கும், பாதசாரிகளுக்கும் பல இன்னல்களை ஏற்படுத்தி, சாலை விபத்துகளுக்கு பாதையிட்டு கொடுக்கின்றன.
குறிப்பாக, வழிபாட்டு தலங்கள், சந்தைகள், தண்ணீர் தொட்டிகள் ஆகியவைகள் அமைந்துள்ள இடங்களில் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து ஸ்தம்பித்து வாகனங்களில் பயணிப்போர் குறித்த நேரத்திற்கு தாங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு செல்ல முடியாமல் போய் விடுகிறது. இதனால், தேவையற்ற மன உளச்சல், குழப்பம், இறுதியில் சண்டை என்ற நிலை ஏற்பட்டு அந்த சாலையே போர்க்களம் போலாகி விடுகிறது. பெரும்பாலான கடைகள் தங்களின் வசதிக்காக முன்னே 15 அல்லது 20 அடிகள் சாலைகளை ஆக்கிரமித்து முற்றம் போல் அமைத்து வியாபாரம் செய்வதால், பொது மக்கள் சாலைகளின் நடுவே நின்று தான் அந்தக் கடையில் பொருள்கள் வாங்க வேண்டியுள்ளது. இதனால், பல விபத்துகள் ஏற்பட்டு அந்த சாலையில் மீண்டும் செல்ல முடியாமல் மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்படுவதால் அங்கும் வாகன நெரிசல்கள் ஏற்படுகின்றன.
சாலைகளை ஆக்கிரமித்து இயங்கும் கடைகள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் கடை நடத்த அனுமதிக்க வேண்டும். அதே போன்று, சாலைகளின் இரு மருங்கிலும் வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீதும் தக்க நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதித்து சாலை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்கள் நலன் கருதியும், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் பொருட்டும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மற்ற கட்சிகள் இதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இந்த மாதிரியான நடவடிக்கைகள் மூலம் தான் சாலைகள் தங்கள் முழுத் தோற்றத்தையும் பெற்று எந்தவிதமாக தடங்கலும் இல்லாமல் சென்று வர ஏதுவாக இருக்கும்.
பல வீடுகளுக்கு முன்னால் அலட்சியமாக வாகனங்களை நிறுத்தி விட்டு செல்லும் போக்கும் இப்போதெல்லாம் எங்கும் காணப்படுகிறது. வீட்டு சொந்தக்காரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தாங்கள் வசிக்கும் வீட்டின் எதிரே வாகனம் நிறுத்த அனுமதிக்கக் கூடாது. வீடு கட்டும் போதே வாகனங்கள் நிறுத்துவதற்கென்று தனியே இடம் ஒதுக்கி அங்கு தான் வாகனத்தை நிறுத்த வேண்டும் என்ற முறையை ஏற்படுத்த வேண்டும். எனவே, சாலைகளை வாகனங்கள் பயணிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வானங்களை அதற்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் நிறுத்த வேண்டும். இதனால், அந்த சாலைகளில் சென்று வருவதற்கு நேரம் மிச்சப்படுவதுடன், உயிரிழப்புகளும் தடுக்கப்படும். அதற்கு அரசின் சட்ட திட்டங்கள் வேண்டாம். பொது மக்களின் ஒத்துழைப்பு தான் தேவை.
பாறப்புறத் இராதாகிருஷ்ணன், சென்னை.
கருத்துக்களம், தினமணி
KATIDANGALAI KATA MUNPU ATHAN ATHIKARIGAL ATHATKU UTHARAVU KDUKA MUNPU SALAIKALAI KAVANATHIL EDUTHAKOLAVENDUM. VAHANANKALAI KANDAPADY NIRUTHUM VAHANA SARATHIKALUKU KOODIYA THUNDAPANAM ARAVIDAPADAVENDUM
ReplyDelete