கி.பி. 1779-இல் பொருளாதாரத்தின் தந்தையான ஆடம்ஸ்மித் தனது புகழ்பெற்ற முரண்பாட்டுக் கோட்பாட்டினை விளக்கினார். அதன்படி, "மதிப்பு' மற்றும் "பயன்பாடு' இரண்டையும் ஒப்பிடும்போது "வைரம்' விலைமதிப்பு மிக்கதாயினும் அதன் பயன்பாடு ஒன்றுமில்லாததாகவும், தண்ணீர் மதிப்பில்லாததாக இருப்பினும் அது மிகவும் "பயன்பாடு' மிக்கதாகவும் உள்ளதையும் விளக்கினார்.
தற்போதைய நிலவரப்படி, நீர்வளம் கட்டுப்பாட்டுக்குள்ளான ஒன்றாக மாறிவிடுவதாலும், அதன் தேவை பல்வேறு வகைகளில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், தண்ணீருக்கான விலையை நிர்ணயம் செய்வது மிக முக்கியமானது என 1992-இல் டூப்ளினில் நடைபெற்ற நீர் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய பன்னாட்டு கருத்தரங்கில் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி, நீரின் பல்வேறு பயன்பாடுகளுக்கேற்ப அதற்கு ஓர் பொருளாதார விலை உள்ளது. அதனை அனைவரும் ஏற்க வேண்டும் என கூறப்பட்டது.
இதே கருத்தரங்கில், நீர் பற்றிய மற்றுமொரு முக்கிய கருத்து தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கொடுக்கக்கூடிய விலையில் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கச்செய்வது அரசின் கடமை. அதனைப் பெறுவது மக்களின் அடிப்படை உரிமை என தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில்தான் குடிநீருக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இச்சூழ்நிலையில், 2010-இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் குடிநீர் மற்றும் சுகாதாரத்துக்கான தண்ணீரைப் பெறுவது அனைவரின் அடிப்படை உரிமை எனக் குறிப்பிட்டது. இத்தீர்மானம் உலக நாடுகளிடையே தண்ணீருக்கான விலைக் கொள்கையை வகுப்பதில் ஓர் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. இதன்படி பார்த்தால், நீருக்கான சரியான விலை நிர்ணயம் என்பது சில முக்கிய காரணிகளைப் பொருத்து அமைகிறது. அதாவது கிடைக்கின்ற நீரின் அளவு, தரம் மற்றும் பயன்பாடு ஆகியவை மற்ற வகை ரீதியிலான வளங்கள் மற்றும் பொருள்களை எப்படி உபயோகப்படுத்துகிறோமோ அதேபோன்ற நிலைக்கு ஒப்பானதாகும்.
நீரின் குணாதிசயங்களில் அடிப்படையானது நீரோட்டம். அதாவது, பூமியில் உள்ள நீர் தொடர்ந்து இயங்கிக்கொண்டே உள்ளது. முதலில் மழையாக பூமியில் பெறப்பட்டு ஒரு பகுதி கால்வாய், ஆறுகள், குளங்களுக்குச் செல்கிறது. மறுபகுதி சிறிது சிறிதாக பூமியில் உறிஞ்சப்படுகிறது. இப்படிச் செல்கின்ற நீர் பூமியில் பெரிய மாறுதல்களை ஏற்படுத்துகிறது. அதாவது நீர் இருக்கின்ற இடத்தைப் பொருத்து அதன் உரிமையாளர் பயன் பெறுகிறார். அடுத்தது, நீர் சுழற்சி. அதாவது, நாம் நீரினைப் பயன்படுத்தும்போது அது மறைந்துபோவது இல்லை. மாறாக, நீரின் தன்மை அல்லது அதன் நிலையை நாம் மாற்றுகிறோம். பல சூழ்நிலைகளில் இயற்கை, நீரின் தன்மையை மாற்றிச் சுத்தப்படுத்தி, மழைத்துளிகளாக மீண்டும் அதை நன்னீராக பூமிக்கு அளிக்கிறது.
ஆனால், இந்நிலை இடம் மற்றும் கால அளவில் இம்மழையின் அளிப்பு மாறுபடுகிறது. அதாவது, சில ஆண்டுகளில், பூமியில் பெய்ய வேண்டிய அதிகளவு மழை கடலில் பெய்து விடுகிறது. அதை நம்மால் உணர இயலுவதில்லை. இருப்பினும் இச்செயல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே உள்ளது.
நீரின் மற்றுமொரு குணாதிசயம் "மாறுபாடு'. அதாவது, மழை நீர் உலக அளவில் மிகவும் சமமற்ற அளவில் கிடைக்கிறது. ஆண்டு சராசரி மழையளவு மாறும் சூழ்நிலையும் உள்ளது. இதனால், நீரின் அளிப்பு நிலை பாதிக்கப்பட்டு நீருக்கான தேவையில் அடிக்கடி மிகப்பெரும் மாறுதல்கள் ஏற்படுகின்றன. இதனால், நீரின் சந்தை விலை, பொதுவாக நீரின் "தேவை மற்றும் அளிப்பு' நிலையைப் பொருத்தே அமைகிறது. ஆக, நீரின் தேவை அளிப்பில் ஏற்படுகின்ற பேரளவு மாற்றங்கள் நீரின் சந்தை விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாக விளங்குகின்றன.
நீரின் மற்றுமொரு முக்கிய இயல்பு அது உள்நாட்டுத் தன்மை உடையதாகும். அதாவது, மக்களின் தேவை மற்றும் பல்வேறு உபயோகங்களுக்கான நீரை உள்நாட்டிலிருந்தே பெற முடியும். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதில்லை. குறிப்பாக விவசாயத்திற்கான நீர்த் தேவை இதற்குப் பொருந்தும்.
இறுதியாக, தண்ணீர் உலக மக்களின் அருமருந்து. நீருக்கு மாற்று நீர்தான். எனவே, ஒவ்வொரு தனிநபரும் கிடைக்கின்ற நீரின் உபயோகத் திறனை பேரளவு அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். குறிப்பாக, நமது வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் நில - நீரின் உபயோகத்திறன் தற்போதுள்ள 35 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டால், கிடைக்கின்ற நீரின் அளவு அதிகரித்து நீர்ப் பற்றாக்குறையின் தீவிரம் எல்லா துறைகளிலும் கணிசமாகக் குறையும் என்பது உறுதி.
கருத்துக்களம் -தினமணி
0 comments:
Post a Comment
Kindly post a comment.