Monday, February 17, 2014

டமில்நாடு என்பதை தமிழ்நாடு என்று ஆக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உண்டு

'டமில்' என்பதை தமிழ் என்று சட்டசபை எப்படி மாற்ற முடியும்? - உயர்நீதிமன்றம்

வெள்ளைக்காரர்கள் வாயில் ழ என்பது நுழையாததால் தமிழ் என்பதை அவர்கள் டமில் என்று உச்சரித்தனர். அதே பெயரில்தான் தமிழ்நாடு என்ற மாநிலப் பெயர் ஆங்கிலத்தில் உச்சரிக்கப்படுகிறது. இருப்பினும் அதை மாற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. 

சட்டசபைக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசு மட்டுமே அதைச் செய்ய முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி விட்டது. 

இதுதொடர்பாக கோவிந்தராஜு கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்மொழி 2000 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த செம்மொழியாகும். 

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மட்டுமே ‘ழ' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தையை ஆங்கிலேயர்களால் உச்சரிக்க முடியாததால், அவர்கள் ‘தமிழ்' என்ற சொல்லை ‘டமில்' என்று உச்சரித்தனர்.

இந்த நிலையில், மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. இதையடுத்து, 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ந்தேதி ‘தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்டது. 

ஆனால், ஆங்கிலத்தில் இதை ‘டமில் நாடு' என்று எழுதப்பட்டு வருகிறது. மேலும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழக அரசிடம் பெற்ற விவரத்தில், ‘டமில்நாடு' என்று ஆங்கிலத்தில் எழுதுவதை ‘தமிழ்நாடு' என்று எழுதும் விதமாக ஆங்கில வார்த்தைகளை மாற்றவேண்டும் என்று தமிழ் வளர்ச்சித்துறை 2009-ம் ஆண்டு தமிழக அரசுக்கு பரிந்துரை செயதுள்ளது. 

இதன் பின்னர். 2013-ம் ஆண்டு இதே கோரிக்கையுடன் மற்றொரு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து தகுந்த உத்தரவினை தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். 

இந்த மனுவை, தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி ரவிச்சந்திர பாபு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மாநிலத்தின் பெயரை மாற்றும் அதிகாரம், நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. அந்த அதிகாரம் மாநில சட்டசபைக்கு இல்லை. எனவே இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

ஒன் இந்தியா   

0 comments:

Post a Comment

Kindly post a comment.