Tuesday, February 18, 2014

சிங்காரவேலர் : தமிழக வரலாற்று முன்னோடியின் 154 -வது பிறந்த நாள்

தமிழகத்தின் முன்னோடிப் போராளி

இன்று, சிங்காரவேலரின் 154-வது பிறந்தநாள். அவர் யாரென்று நாட்டில் பலருக்குத் தெரியாதது சரித்திரக் குற்றமே. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது சிலையை வைத்துவிட்டு, சிங்காரவேலர் மாளிகையென்று அந்தக் கட்டிடத்துக்குப் பெயர்சூட்டி மகிழ்ந்ததோடு தமிழக அரசு அவரை மறந்துவிட்டது.

சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு நினைவுச் சின்னம் எழுப்புவதைப் பற்றி பரிசீலிக்க உத்தரவிட்டபின்தான், அவரைப் பற்றிய சில தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

வெலிங்டன் சீமாட்டி கல்வி வளாகத்தில்தான் அவர் வீடு இருந்தது என்பதும் அங்கு 20,000 நூல்களுக்கும் மேல் அவர் சேகரித்து வைத்திருந்தார் என்பதும், வசதியான குடும்பத்திலிருந்து வந்து அவர் வழக்கறிஞர் தொழில் செய்தபோதும் வறியவர்கள்பற்றியே அவரது மனம் சிந்தித்துக்கொண்டிருந்தது என்பதும் பலருக்கும் தெரியாது.

அவர் இருந்த குடியிருப்பு வளாகத்தை அவரது கைதுக்குப் பிறகு அன்றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு கைப்பற்றி, அந்த இடத்தில் கல்வி நிலையத்தை நிறுவி, தனது மனைவியின் பெயரை வைத்துக்கொண்டார் என்ற நிகழ்வு, தன்மானமுள்ள இந்தியர் எவரையும் கொந்தளிக்க வைக்கும்.

சிங்காரவேலரின் வாழ்வையும் கொள்கைகளையும் பற்றி வெளிவந்துள்ள நூல்கள் வெகு சிலவே. எப்போதும்போல் வரலாற்று ஆசிரியர்கள் வட இந்தியாவில் உள்ள பிரமுகர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சிலாகித்து நூல்கள் பல எழுதியிருந்தாலும் தென்னிந்தியர்களைப் பற்றி, அதிலும் குறிப்பாக சிங்காரவேலரைப் பற்றிய தகவல்களை வெளியிட மறந்துவிட்டார்களா, மறுத்துவிட்டார்களா என்று தெரியவில்லை.

உயர் நீதிமன்ற உத்தரவிற்கிணங்க தமிழக அரசு சிங்காரவேலருக்கு உரிய மரியாதை செலுத்தும் வகையில் நினைவிடம் அமைப்பதோடு, பள்ளி மாணவர்களுக்கும் அவரது லட்சியத்தையும் வாழ்க்கையையும் பாடமாக வைக்க முன்வர வேண்டும்.

பிறப்பும் தொழிலும்

1860-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி பிறந்தார். அவரது குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்தது. இந்த சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்களைவிட ஓரளவுக்கு மேம்பட்ட நிலையில் சிங்காரவேலரின் பெற்றோர் இருந்தபோதிலும், சாதியப் புறக்கணிப்பு, ஒடுக்குமுறை போன்ற தளைகளிலிருந்து அவர்களால் விடுபட இயலவில்லை.

சென்னையின் புகழ்பெற்ற கல்லூரிகளில் பட்டம் பெற்று, முறையான பயிற்சிக்குப் பிறகு, சிங்காரவேலர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சபையில் வழக்கறிஞராக 1907-ம் ஆண்டு தன்னைப் பதிவுசெய்துகொண்டார். பொதுவாகவே, வழக்கறிஞர்கள் தம்மிடம் முதலில் வருபவருக்குச் சார்பாகவே வழக்குகளை, அவரது வாடிக்கையாளர் குற்றவாளியா அல்லது பாதிக்கப்பட்டவரா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், ஏற்றுக்கொள்வது வழக்கம்.

ஆனால், அப்போதுதான் வழக்கறிஞர் தொழிலில் இறங்கிய சிங்காரவேலரோ அடக்குமுறையாளர்கள், பேராசைக்காரர்கள் ஆகியோரின் சார்பாக எந்தவொரு சூழ்நிலையிலும் வழக்காடியதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 1921-ம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தினால் தனது வழக்கறிஞர் தொழிலைப் புறக்கணித்துவிட்டார்.

கம்யூனிஸம், புத்த மதம், டாங்கே

சிங்காரவேலர் ஒரு கம்யூனிஸ்ட்டாக உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தது அவரது ஆழ்ந்த அறிவே. ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது. 1902-ம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சிங்காரவேலர் மேற்கொண்ட பயணம் மகத்தான அனுபவமாக அமைந்தது.

அவர் இங்கிலாந்தில் இருந்தபோது மற்றுமொரு முக்கியமான சம்பவமும் நடைபெற்றது. உலக புத்த மதத்தவரின் மாநாடுதான் அந்தச் சம்பவம். இந்த மாநாட்டிலும் சிங்காரவேலர் பங்கேற்றார். கிட்டத்தட்ட புத்த மதத்துக்கு அவர் மாறிவிட்டார்.

புரட்சிகரத் தொழிலாளர் இயக்கத்தின் கொள்கைகளை ஆதரித்த, தொடக்க கால முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் சிங்காரவேலர். சென்னையில் தொழிலாளர் நலனுக்காக அவர் ஆற்றிய பணிகள்பற்றி ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருக்கு 1922-ல் பம்பாயைச் சேர்ந்த எஸ்.ஏ. டாங்கேயுடன் தொடர்பு ஏற்பட்டது. 1922-ல் எம்.என். ராய் வெளிப்படுத்திய திட்டத்தால் கவரப்பட்டு, அவருடன் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டிருந்தார். 1923-ல் அவர் மேதினம் கொண்டாட இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சி (லேபர் கிசான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான், எல்.கே.பி.எச்.) என்கிற கட்சியைப் புரட்சிகரத் திட்டத்துடன் ஆரம்பித்தார். ‘லேபர் கிசான் கெஜட்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வார இதழையும், ‘தொழிலாளன்’ என்ற தமிழ் வார இதழையும் ஆசிரியராக இருந்து பதிப்பித்து வெளியிட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

கான்பூர் பத்திரிகையாளரான சத்திய பக்த் என்பவர் சட்டபூர்வமான ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி’ அமைக்கப்பட்டிருப்பதாக 1924, செப்டம்பர் மாதம் அறிவித்தார். இந்தக் கட்சி உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுடனும் மற்ற அயல்நாட்டுப் புரட்சி மையங்களுடனும் தொடர்புகொண்டிருக்கவில்லை என்று அதன் தலைவர்கள் தங்கள் அறிக்கையில் அழுத்திக் கூறியிருந்தார்கள்.

சத்திய பக்த் அமைத்த கட்சி இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு ஈர்ப்பு மையமாக விளங்கவில்லை என்றாலும், இந்திய மார்க்சியவாதிகளின் தனித்தனிக் குழுக்களை ஒன்றாக இணைப்பதற்கான முன்னேற்பாடுகளை அவர் தொடர்ந்தார். ஒன்றிணைப்பு மாநாடு கூட்டுவதற்காக முன்னேற்பாடுகள் செய்யும் பொருட்டு இடதுசாரி காங்கிரஸ்காரரான ஹஜரத் மொஹானியின் தலைமையில் ஒழுங்கமைப்பு கமிட்டி நிறுவப்பட்டது.

இதன் பயனாக இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் முதல் மாநாடு 1925-ம் ஆண்டு, டிசம்பர் 28 முதல் 30 வரை கான்பூரில் சென்னைக் கம்யூனிஸ்ட் எம். சிங்காரவேலுச் செட்டியாரின் தலைமையில் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை அமைப்பது என்றும் அதன் மையத்தை பம்பாயில் வைத்துக்கொள்வது என்றும் அந்த மாநாட்டில் முடிவுசெய்யப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயற்குழுவின் செயலாளர்களான ஜே. பெகெர்ஹொத்தாவும் எஸ்.வி. காட்டேயும் பதவி ஏற்றார்கள்.

போல்ஷ்விக் சதி வழக்கு

மார்ச் 1924-ல் கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கில் சிங்காரவேலர் குற்றம்சாட்டப்பட்டார். அவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததால், அவருக்கு எதிரான நடவடிக்கை கைவிடப்பட்டது. டிசம்பர் 1925-ல் கான்பூரில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டுக்குத் தலைமை வகித்தார்.

1927-ல் பெங்கால்-நாக்பூர் ரயில்வே வேலைநிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1928-ல் வரலாற்றுப் பெருமை வாய்ந்த தென்னிந்திய ரயில்வே வேலைநிறுத்தத்தை நடத்திய தலைவர்கள்மீது தொடரப்பட்ட சதி வழக்கில், அவருக்குப் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அந்தத் தண்டனை குறைக்கப்பட்டு ஆகஸ்ட் 1930-ல் விடுதலை செய்யப்பட்டார்.

போராட்டங்கள்…

சென்னை நகரின் தொழிலாளர் போராட்டங்களிலும் தென்னிந்திய ரயில்வே போராட்டங்களிலும் மும்முரமாகப் பங்கேற்றதுடன், தனது பத்திரிகைகளிலும், செய்தித்தாள்களிலும் கட்டுரைகள் எழுதியும் பொதுக்கூட்டங்கள் நடத்தியும் ஓய்வு ஒழிவின்றி, கம்யூனிஸப் பிரச்சாரம் செய்துவந்தார்.

மே தினம், உலக அமைதி தினம் போன்றவற்றைக் கொண்டாடியதுடன் ஆகஸ்ட் 1927-ல் சாக்கோ மற்றும் வான்செட்டி ஆகியோரின் மரண தண்டனையை எதிர்த்துக் கூட்டங்களும் நடத்தினார். 1927-ல் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்டும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாபூர்ஜி சக்லத்வாலா சென்னைக்கு வருகைதந்தபோது சிங்காரவேலர் கேட்டுக்கொண்டதால், சென்னை மாநகராட்சி அவருக்கு வரவேற்பு விழா ஏற்பாடு செய்தது. சக்லத்வாலா பேசிய கூட்டங்களில் அவரது உரையை சிங்காரவேலர் மொழிபெயர்த்தார்.

சாதிக்கு எதிரான சிங்காரவேலரின் உறுதியான நிலைப்பாடும், இந்து மதச் சடங்குகள், மனுஸ்மிருதி முதலான நூல்களின் மீதான அவரது வெறுப்பும்தான் பெரியாருடனும் அவரது சுயமரியாதைக் கட்சியுடனும் நெருக்கமாகச் செயல்பட வைத்தது. பெரியார் நடத்திவந்த ‘குடிஅரசு’ இதழிலும் அவர் தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவந்தார்.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம்குறித்து, சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் கொண்டிருந்த பாராமுகமான போக்கை சிங்காரவேலர் அங்கீகரிக்கவில்லை. எனவேதான், சுயமரியாதை சோஷலிஸ்ட் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிக்கு அவர் ஆதரவளித்தார்.

இத்தகைய ஒரு வரலாற்று முன்னோடியைப் பற்றி

“போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி

பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!”

என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியதில் வியப்பில்லை.

- சந்துரு, 
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, 
சமூக விமர்சகர்

கட்டுரை  : தி இந்து  

0 comments:

Post a Comment

Kindly post a comment.