Wednesday, February 19, 2014

தண்டனை வாங்கித் தந்த நாவல்

சிறுபத்திரிகைகளின் அனைத்துக் குணங்களையும் கொண்டிருந்த குறிப்பிடத்தக்க முதல் அமெரிக்க இதழ் பொயட்ரி. உலக அளவிலேகூட இதை முதல் சிறுபத்திரிகை என்று கருதலாம். அக்டோபர், 1912இல் சிகாகோவில் தொடங்கப்பட்ட நவீன ஆங்கிலக் கவிதைக்கான இந்தச் சிறுபத்திரிகை நித்திய கண்டம் என்ற பொதுக்குணத்தை முறியடித்து ஒரு நூற்றாண்டைக் கடந்து இன்றும் வெளியாகிறது. இப்போது பல வசதிகள் கொண்ட ஒரு நிறுவனம் என்ற நிலையில், அவ்வப்போது புதிய கவிஞர்களைக் கண்டுபிடித்து, செயல்படுகிறது. டி.எஸ். எலியட், எஸ்ரா பவுண்ட், ஆடன், ராபர்ட் ஃப்ராஸ்ட், யேட்ஸ் என்று பலரின் தொடக்கக் கவிதைகளை வெளியிட்ட இதில்தான் தாகூரின் ‘கீதாஞ்சலி’கவிதைகள் சில, ஆங்கில மொழிபெயர்ப்பில் முதன்முதலாகப் பிரசுரமாயின (டிசம்பர் 1912). பத்திரிகையின் வெளிநாட்டு ஆசிரியராக /ஆலோசகராக (லண்டனிலும் பாரிஸிலும்) இருந்த எஸ்ரா பவுண்ட் அவற்றை யேட்ஸிடமிருந்து வாங்கி அனுப்பி வைத்தார். யேட்ஸ் கீதாஞ்சலிக்கு முன்னுரை எழுதி, ஆங்கில மொழிபெயர்ப்பிலும் தாகூரோடு பங்குகொண்டு அதை நோபல் விருதுக் குழுவின் கவனத்துக்குக் கொண்டுபோனது தனிக்கதை. இச்சிறுபத்திரிகையைத் தொடங்கியவரும் அதன் முதல் ஆசிரியராகவும் இருந்தவர் ஹேரியட் மன்றோ (1860-1936) என்ற பெண்மணி.

குறிப்பிடத்தக்க இரண்டாவது அமெரிக்கச் சிறுபத்திரிகை தி லிட்டில் ரிவ்யூ (1914-29). இதன் ஆசிரியரும் மார்கரெட் ஆண்டர்சன் (1886-1973) என்ற ஒரு பெண்மணியே. இதுவும் சிகாகோவிலிருந்தே வெளியானது. இதற்கும் வெளிநாட்டு ஆசிரியர் எஸ்ரா பவுண்ட்தான். வெளியான பதினைந்து ஆண்டுகளும் அசாதாரண வீரியத்துடன் செயல்பட்ட இவ்விதழ், பெண்ணியம், அனார்க்கிசம், சர்ரியலிசம், டாடாயிசம், க்யூபிசம் போன்ற பல நவீன அரசியல், கலை, கலாச்சார, இலக்கியப் போக்குகளை அமெரிக்க வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. ஹெமிங்வே இப்பத்திரிகையின் கண்டுபிடிப்பே.

பத்திரிகையின் சாதனை

இப்பத்திரிகையின் ஆகச் சிறந்த சாதனை யுலிஸ்ஸஸ் நாவலைத் தொடராக வெளியிட்டதுதான். ஜாய்ஸ் இந்நாவலை 1914 முதல் 1921 முடிய ஏழு ஆண்டுகள் எழுதியிருக்கிறார். ஏற்கனவே தனக்கு அறிமுகமாயிருந்த ஜாய்ஸிடமிருந்து அதுவரை எழுதப்பட்ட நாவலின் பகுதிகளை வாங்கி எஸ்ரா பவுண்ட் மார்கரெட் ஆண்டர்சனுக்கு அனுப்பினார்.

கையெழுத்துப் பிரதியின் முதல் சில வரிகளைப் படித்ததும் ஜேன் ஹீப்பிடம், ‘[பிரசுரிக்க] நமக்குக் கிடைக்கப்போகும் எல்லாவற்றிலும் இதுதான் மிகச் சிறந்த படைப்பு. நம் வாழ்க்கையின் இறுதி முயற்சி என்று ஆனாலும் பரவாயில்லை, இதைப் பிரசுரிப்போம்,’ என்று பரவசம் மேலிட மார்கரெட் சொன்னார். மார்ச் 1918 தொடங்கி டிசம்பர் 1920 வரை நாவலின் இருபத்து மூன்று பகுதிகள் வெளியாயின.

கொஞ்ச நாளிலேயே மிகக் கடுமையான கண்டனக் கடிதங்கள் வரத் தொடங்கின. நான்கு பகுதிகள் வெளியான பிரதிகளை ஆபாசம் என்று சொல்லி அஞ்சல் துறை கைப்பற்றி எரித்தது. இந்த நிகழ்வைப் பின்வருமாறு மார்கரெட் விவரிக்கிறார்:

‘கம்பத்தில் கட்டிவைத்து உயிருடன் எரிக்கப்பட்டதைப்போல உணர்ந்தேன். . . ஜாய்ஸின் கைப்பிரதியைச் சேதமில்லாமல் பிரசுரிக்கக் கவனம் எடுத்துக்கொண்டு, கண்ணீர், வேண்டுகோள், மூர்க்கமான சண்டை என்று பலவித உபாயங்கள் மூலம் அச்சிடுபவர், பைண்டர், அச்சுத்தாள் சப்ளை செய்தவர் ஆகியோரை, பணத்துக்கு எந்த வித உத்தரவாதமும் இல்லாத நிலையில், சரிக்கட்டி வைத்து, நம் தலைமுறையின் ஆகச் சிறந்த இலக்கியப் படைப்புக்கு உலகின் எதிர்வினையை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் அஞ்சல் துறையில் இருந்து வந்தது அறிவிப்பு: எரித்தாயிற்று.

‘டிசம்பர் 1920இல் பதின்மூன்றாவது பகுதி (ப்ளூம் பாலியல் செயல் ஒன்றில் ஈடுபடும் பகுதி) வெளியானதும் நிலைமை மேலும் மோசமானது. ’தீயொழுக்கத்தைத் தடுக்கும் கழகம்’ என்ற நியூயார்க் அமைப்பு ஆபாசத்தைப் பரப்பும் குற்றத்துக்காகப் பத்திரிகையை நீதிமன்றத்துக்கு இழுத்தது. கலைகள்மீது அக்கறை கொண்ட சிறந்த வழக்குரைஞர் ஒருவர் பத்திரிகை சார்பில் வாதாடியும் பாதகமான தீர்ப்பே வந்தது. 100 டாலர்கள் அபராதம் அல்லது சிறைக்குப் போக வேண்டும் என்ற நிலையில் மார்கரெட் பின்னதையே தேர்ந்தெடுத்தார். ஆனால், நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அபராதத்தைச் செலுத்த ஒப்புக்கொண்டார். நாவலை மிகக் கடுமையாக வெறுத்த ஒரு பெண்மணி அந்தப் பணத்தைக் கொடுத்து உதவினார்.

நீதிமன்றம் விதித்த தடையின் காரணமாக நாவலின் மீதிப் பகுதியை மார்கரெட்டால் வெளியிட இயலவில்லை. வழக்கு நடைபெற்ற காலத்தில் கலைக்கு சுதந்திரம் வேண்டுமென்றும் ஓர் இலக்கியப் படைப்பு இலக்கியமாக இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டுமே ஒழிய அது ஆபாசமாக இருக்கிறதா என்று பார்க்கக் கூடாது என்றும் மார்கரெட்டும் ஹீப்பும் எழுதினார்கள்.

நாவல் பெற்ற வரவேற்பு

பாரிஸிலிருந்த ‘ஷேக்ஸ்பியர் நிறுவனம்’ என்ற பதிப்பகத்தின் உரிமையாளரான சில்வியா பீச் என்ற பெண்மணி எஸ்ரா பவுண்டின் பரிந்துரை காரணமாக யுலிஸ்ஸஸை முழுமையாகப் புத்தக வடிவில் 1922இல் வெளியிட்டார். வரிசை எண் குறிப்பிடப்பட்டு 1000 பிரதிகளே அச்சிடப்பட்டன. கிட்டத்தட்ட 2000 அச்சுப் பிழைகள் இருப்பதைப் பதிப்பு நிறுவனம் கண்டுபிடித்தது. ஆனாலும், இன்றுவரை அந்த முதல் பதிப்பே மிகத் துல்லியமான பதிப்பு என்று கருதப்படுகிறது. பின்னர் வந்த பதிப்பாளர்கள் பிழைகளை நீக்க முயன்று பல புதிய பிழைகளைச் சேர்த்தார்கள். பீச்சின் பதிப்பு சுமாராகத்தான் விற்றது. இதற்கிடையில் ஜாய்ஸ் வேறொரு பதிப்பாளருடன் உடன்பாடு செய்துகொண்டார். பீச் மிகப்பெரும் கடனாளியானார். ஆனாலும், ஜாய்ஸ் இறந்தபோது ஈமச் சடங்குக்கான செலவை அவர்தான் ஏற்றுக்கொண்டார்.

இந்த நாவலுக்கான தடை அமெரிக்காவில் 1933வரை இருந்தது. தடையை நீக்கக் கோரி அந்த ஆண்டு நடைபெற்ற வழக்கின் முடிவில் நாவலின் சர்ச்சைக்குரிய பகுதிகள் ஆபாசமாக இல்லையென்றும் போர்னோகிராபி தன்மையுடன்தான் இருக்கின்றன என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டதால் தடை நீங்கியது. இங்கிலாந்திலும் 1930கள் வரை தடை இருந்தது. ஜாய்ஸின் தாய்நாடான அயர்லாந்தில் நாவல் தடை செய்யப்படவுமில்லை, 1930கள்வரை கிடைக்கவுமில்லை.

தி இந்து 

0 comments:

Post a Comment

Kindly post a comment.