Tuesday, January 21, 2014

தாய்மொழித் திறன் வளர்ப்போம்



அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுவதைவிட ஒரு ஏழைக்கு எழுத்தறிவிப்பது மேன்மையானது என்றார் மகாகவி பாரதியார். இது சாதாரண வாக்கியமல்ல. எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்க்கையை முன்னிறுத்தி பாரதியார் உதிர்த்த மந்திரச் சொற்கள்.

கல்வியில் தமிழகம் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழக அரசு 2023 தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கல்விக்காக மட்டும் மொத்த நிதி ஒதுக்கீட்டில் எட்டு சதவீதம் செலவிடப்படுகிறது.

சர்வதேச தரத்தில் குக்கிராம மாணவருக்கும் கல்வி கிடைக்க காணொலி கற்பித்தல் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம், குடும்பத் தலைவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா பாடநூல்கள், சீருடை, உயர்கல்வி வரை கல்விக் கட்டணச் சலுகை, விலையில்லா மிதிவண்டி என முன்னோடித் திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை கல்வி கற்பதில் எவ்வித இடையூறும் இல்லாத வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் பிறந்த எந்த ஒரு குழந்தையாக இருந்தாலும், பள்ளிக்குச் சென்று, கல்வியை முறையாகக் கற்றால் உயர்நிலையை அடைய முடியும் என்ற சூழல் இருக்கிறது.

அத்துடன், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் கணினி வசதி, அறிவியல் ஆய்வுக்கூடங்கள், கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகளுக்கென பல கோடி ரூபாயை அரசு செலவிடுகின்றது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறத்தக்க வகையில் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சியும், ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதற்காக மட்டும் பல கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்கிறது.

முன்போல இல்லாமல், பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகள் மாவட்ட வாரியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். நடப்பு கல்வியாண்டில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆய்வு முடிவில் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள புள்ளி விவரங்கள் அடிப்படையில் மாநில அளவில் அரசு பள்ளிகளில் 6, 7, 8ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் தமிழ் வாசிப்பு மற்றும் எழுத்துத்திறன் சராசரி 72 சதவீதம் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. உலகில் மூத்த மொழி, கல்தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த மொழி என்றெல்லாம் பறைசாற்றும் தமிழக மக்களின் குழந்தைகளின், அதாவது பள்ளி செல்லும் குழந்தைகளின் தாய்மொழி வாசிப்புத்திறன் 72 சதவீதம் என்பதோடு நின்றுவிடவில்லை.

பெரும்பாலான மாவட்டங்களில் வீடுகளில், மாணவர்கள் நடமாடும் இடங்களில் எல்லாம் பேசப்படும் ஒரே மொழியான தமிழ்மொழிக்கு மத்தியில் வாழும் நூற்றுக்கணக்கான கிராமப்புற பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்புத்திறன் 20 சதவீதம் முதல் 38 சதவீதமாகவும் இருப்பது வேதனையிலும் வேதனை என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

அரசுப் பள்ளிகளில் சர்வதேச தரத்துக்கு மாணவர்களுக்கு கல்வி கிடைக்க பல ஆயிரம் கோடிகளை தமிழக அரசு கொட்டி வரும் சூழலில், இன்றளவும் 6, 7, 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் தமிழ் வாசிப்புத்திறனே மிகக் குறைவாக இருப்பதற்கு மாணவர்களை மட்டுமே குறை கூறி விடமுடியுமா?

இந்த மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டிய ஆசிரியர்களின் புனிதமான பணியில் மட்டுமின்றி, மாவட்ட அளவிலான கல்வித் துறை அதிகாரிகள், உதவிக் கல்வி அதிகாரிகளின் பணியிலும் குறை இருப்பதாகவே கல்வித் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழ் வாசிப்பு மற்றும் எழுத்துத் திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் திறன் மேலும் குறைவாகவே இருப்பது இயற்கை.

இத்தகைய சூழலில் இருக்கும் மாணவர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் மற்ற ஊக்குவிப்பு முகாம்களை நடத்துவதற்கு முன்னதாக, இப்போதிருந்தே தமிழ்மொழி வாசிப்பு மற்றும் எழுத்துத் திறனை வளர்ப்பதற்கான சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டியது அவசர அவசியமாகும். பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ள இந்த கால கட்டத்தில், அரசுப் பள்ளிகளில் கல்வி போதிக்கும் முறையில் குறைபாடுகள் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

கல்வித் துறை அதிகாரிகள், பள்ளிகளில் மற்ற முன்னோடி திட்டங்களை செயல்படுத்தும் அதே நேரத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்மொழி வாசிப்பு மற்றும் எழுத்துத் திறனை வளர்க்க, முழு ஈடுபாட்டுடன் செயல்பட ஆசிரியர்களையும் தயார்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை கல்வித் துறை அதிகாரிகள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் உணர வேண்டும். இல்லையேல், அரசு பல ஆயிரம் கோடிகளை கல்விக்காக கொட்டினாலும், விழலுக்கு இறைத்த நீரைப் போன்று ஆகிவிடும்.

கே.எஸ். பசும்பொன்முத்து , தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.