Friday, January 10, 2014

டெல்லி : 7 மணி நேரத்தில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள்


 டில்லியில் ஊழல் புகார்களை தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண்களை அம்மாநில அரசு அறிவித்தது. எண்கள் அறிவிக்கப்பட்ட முதல் நாளில், 7 மணி நேரத்தில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.

டில்லியில் வசிப்பவர்கள் ஊழல் தொடர்பான புகார்களை தொலைபேசி வாயிலாக அரசுக்கு தெரிவிக்கலாம் என ஆம் ஆத்மி அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்காக (011) 27357169 என்ற எண்ணில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று துவங்கிய இந்த சேவையில் இன்று காலை முதல் மாலை 3 மணி வரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த திட்டத்தின்படி, ஊழல் தொடர்பாக தெரிவிக்கப்படும் புகார்கள் உண்மை தானா என்பது ஆராயப்பட்டு, பின்னர் அவை 15 பேர் கொண்ட குழுவிற்கு அனுப்பப்படும். பின்னர் அக்குழுவின் ஆலோசனைப்படி, ஸ்டிங் ஆபரேஷன் நடத்தப்படும். அதில் கிடைக்கும் தகவல்கள் ஊழல் ஒழிப்பு துறைக்கு அனுப்பப்பட்டு, ஒவ்வொரு புகாருக்கும் 24 மணி நேரத்திற்குள் தீர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து நிருபர்களிடம் பேசிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டில்லியில் பல்வேறு நேர்மையான மற்றும் ஒழுக்கமான அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் நேர்மையாக செயல்பட விரும்புகின்றனர். எனினும் தங்களுக்கு இதுவரை அதற்கான வாய்ப்பு கிடைக்க வில்லை என வருந்துகின்றனர். தவறு செய்பவர்கள் தங்களது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் அல்லது திருத்தப்படுவீர்கள். 

இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அதிரடி திட்டம் டில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகார்கள் அதிகரித்துள்ளதையடுத்து, இதில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

செய்தி :தினமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.