Wednesday, December 4, 2013

பொறுமை இழக்க நேரிடும்; இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை


போர்க்குற்ற விசாரணை நடத்தாவிட்டால் பொறுமை இழக்க நேரிடும் என இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

எனவே, இலங்கை சர்வதேச விதிமுறைகளை மீறி போர்க்குற்றம் இழைத்ததாக ஐ.நா. மனித உரிமை கமிஷனில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது.

அதை தொடர்ந்து ராணுவத்தின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கை அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அதிபர் மகிந்த ராஜபக்சே சர்வதேச நாடுகளின் வேண்டுகோளை நிராகரித்து வருகிறார்.

அதை தொடர்ந்து இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை அரசுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாஷிங்டனில் நேற்று அமெரிக்க தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான ராஜாங்க மந்திரி நிஷா தேசாய் பிஸ்வால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

உள்நாட்டு போரில் இடம் பெற்ற கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இலங்கை அரசு சர்வதேச நாடுகள் காட்டும் பொறுமை இழந்து விடும்.

குறிப்பாக பொறுப்பு கூறல் விவகாரங்களில் இலங்கை தனது நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டும். மேலும் சர்வதேச நாடுகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அதையே நாங்கள் விரும்புகிறோம்.

நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இலங்கை அரசால் அதை செய்ய முடியும் என நம்புகிறோம். விசாரணையில் உண்மையான நம்பகத்தன்மை இல்லாவிட்டால் இலங்கை மீதான அனைத்துலக சமூகத்தின் பொறுமை குறைய தொடங்கி விடும் என்றார்.

/tamil.webdunia.com

0 comments:

Post a Comment

Kindly post a comment.