Wednesday, December 4, 2013

சென்னைக்கருகே 12 000 அடுக்குமாடிகள் கொண்ட துணைநகரம் !

வேகம் எடுக்கிறது திருமழிசை துணைநகரம்

 சென்னை அருகே திருமழிசையில் துணைநகரம் அமைக்கும் பணிகள், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே தொடங்கப்பட உள்ளன. அதற்கான பணிகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.

திருமழிசை துணைநகரம்

சென்னையில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமழிசை அருகே சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் 311.05 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு முறையான அணுகு சாலை அமைப்பதற்கு தேவைப்படும் 12.87 ஏக்கர் நிலம், அவற்றின் உரிமையாளர்களிடம் கலந்து பேசி, பெறப்பட்ட பிறகு, ரூ.2,160 கோடி செலவில் திருமழிசை துணைநகரம் (சாட்டிலைட் சிட்டி) அமைக்கப்படும் என்று 8-9-2011 அன்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

12 ஆயிரம் அடுக்குமாடிகள்

பூந்தமல்லி தாலுகாவில் உள்ள செம்பரம்பாக்கம், குத்தாம்பாக்கம், பர்வதராஜபுரம், நரசிங்கபுரம், வெள்ளவேடு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய திருமழிசை துணை நகரத்தில் 12,000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. அவை பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் ஆகியோர் எளிதில் வாங்கக்கூடிய விலையில் வழங்கப்படும்.

இந்த துணை நகரத்துக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து பலரும் கோர்ட்டுக்கு சென்றுவிட்டதால், இந்தப் பணியைத் தொடங்க தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

திருமழிசை துணை நகரத்துக்கான அணுகு சாலைக்கு 12.8 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலத்தை வழங்க சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளனர். அவற்றை கையகப்படுத்தும் பணியில் திருவள்ளூர் மாவட்ட கோட்டாட்சியர் ஈடுபட்டுள்ளார்.

உயர்மட்டப் பாலம்

குத்தம்பாக்கம் கிராமத்தில், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து துணைநகரம் அமையும் உள்பகுதி வரை (இ.வி.பி.கேளிக்கை பூங்கா அருகே) உயர்மட்டப் பாலம் ஒன்று கட்டப்பட உள்ளது. இதற்காக அண்ணா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொழில்நுட்பக் குழு ஒன்று, ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது. மண் பரிசோதனை செய்தல் உள்ளிட்ட பணிகளை அந்தக் குழு மேற்கொண்டு வருகிறது. இந்தக் குழுவின் அறிக்கை கிடைத்ததும், உயர்மட்டப் பாலத்துக்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும்.

வேலி அமைக்கும் பணி

முதல்கட்டமாக 87 ஏக்கரில் ரூ.12 லட்சம் செலவில் வேலி அமைக்கும் பணி இம்மாத இறுதிக்குள் தொடங்கும். திரு மழிசை துணைநகரத்துக்கான கட்டுமானப் பணிகள், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு தொடங்கிவிடும் .
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.                                                                                        

தி இந்து, 04 - 12 - 2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.