சென்னை மாநகராட்சி சொத்து வரியை பொதுமக்களே இணையதளத்தில் மதிப்பீடு செய்து, ஆணை பெறும் புதிய வசதி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது.
சென்னையில் வீடு, சொத்து வைத்துள்ளோரிடம் இருந்து சொத்து வரியை சென்னை மாநகராட்சி வசூல் செய்கிறது. சொத்து வரி மதிப்பீடு ஒவ்வொரு பகுதிக்கும், இடத்துக்கு தகுந்தவாறு வரி நிர்ணயம் செய்யப்படுகிறது.
புதிதாக வீடு கட்டுவோர் எவ்வளவு சொத்து வரி செலுத்த வேண்டும் என்பதை மாநகராட்சிக்கு விண்ணப்பித்து, அதன் மூலம் தெரிந்துகொள்கின்றனர். இதற்கு மாநகராட்சி அலுவலகத்தை நேரில் அணுக வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்த நிலையில், சொத்து வரி மதிப்பீட்டுக்கு மாநகராட்சி இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்த முறையில் விண்ணப்பிக்கும் போது, சொத்து வரி மதிப்பீட்டாளர் நேரடியாக வீட்டுக்கு வந்து, சொத்தின் அளவு, அமைந்துள்ள தெரு போன்றவற்றை கணக்கிட்டு, சொத்து வரி எவ்வளவு என்பதை தெரிவிப்பார். இந்த முறையில் இடைத்தரகர்கள் மற்றும் சில அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது.
சொத்து வரி மதிப்பீட்டுக்கான ஆணை இருந்தால் மட்டுமே வீட்டுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு போன்றவற்றை பெற முடியும் என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில், இணையதளத்திலேயே விண்ணப்பித்து, சொத்து வரி கணக்கிட்டதற்கான ஆணையை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த புதிய முறை ஜனவரி மாதம் தொடங்கப்படவுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சொத்து வரி செலுத்தும் நடைமுறை பொதுமக்களுக்கு சுலபமான வகையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வங்கிகளில் வரி செலுத்தும் முறை, இணையதளத்தில் வரி மதிப்பீட்டு வசதி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இணையதளத்திலேயே வீட்டின் அளவை குறிப்பிட்டு, அதற்கான சொத்து வரியை மதிப்பீடு செய்து கொள்ளும் வசதி தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம் சொத்து வரியை இணையதளத்திலேயே மதிப்பிட்டு, அதற்கான ஆணையையும் பெறலாம். இதனை பதிவிறக்கம் செய்து, குடிநீர் இணைப்பு போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.
இனி சொத்து வரி மதிப்பீட்டாளர் வந்து, சொத்து வரி மதிப்பீடு செய்யவேண்டிய தேவையில்லை. ஆனால் சொத்து வரி சரியாக மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து கண்காணிப்பாளர்கள்.
இந்த முறையின் மூலம் தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்படும். இந்த திட்டம் ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான அரையாண்டில் ரூ. 210 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் பழைய பகுதிகளில் ரூ.162 கோடியும், விரிவாக்கப் பகுதிகளில் ரூ.48 கோடியும் வசூலாகியுள்ளது.
தினமணி - 10 -12 -2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.