Sunday, December 22, 2013

ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமானவர்களை தோற்கடிக்க வேண்டும்

ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமானவர்களை வரும் மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கேட்டுக் கொண்டார்.



மதுரை புதூர் அருகே

மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம்

சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மனித உரிமை மாநாட்டில்,

"இலங்கையில் மனித உரிமை மீறலும், ஐக்கிய நாடுகள் சபை செயல்பாடும்'

என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை:

இலங்கையில் போர் முடிந்த நிலையிலும், வடக்கு மாகாணம் தொடர்ந்து ராணுவக் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக கருத்துத் தெரிவிக்க அச்சப்படுகின்றனர். புதிதாகத் தேர்வான இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவே பயிற்சி அளிக்கிறது.

இலங்கை வடக்கு மாகாண, புதிய முதல்வர் விக்னேஷ்வரனை அங்குள்ள இலங்கை ராணுவ ஆளுநர் முடக்கி வைக்கிறார். இதனால், பதவியை ராஜிநாமா செய்யவும் விக்னேஷ்வரன் முடிவு செய்துள்ளார். அதனால், தனக்கு சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்படும் என அஞ்சியுள்ள இலங்கை அதிபர் ராஜபட்ச, வடக்கு மாகாண முதல்வரை சமரசம் செய்து வருகிறார்.

முதல் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப்படைகள் செய்த படுகொலையைச் சர்வதேச சங்கம் கண்டுகொள்ளவில்லை. இதனால் அது பின்னர் கலைக்கப்பட்டது. ஆகவே, ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக்க சர்வதேச சமூகம் முன்வராவிட்டால், ஐக்கிய நாடுகள் சபைக்கும் சர்வதேச சங்கத்தின் கதியே ஏற்படும்.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ராஜபட்சவைக் கண்டிக்கும் நிலையில், காமன்வெல்த் மாநாட்டுக்குச் சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரோ ராஜபட்சவை குனிந்து வணங்கியது சரியல்ல.

வரும் மார்ச்சில் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேசப் போர்க் குற்றவாளியாக அறிவித்து தீர்மானம் கொண்டுவர வேண்டும். ஆனால், இந்தியாவை மிகப் பெரும் சந்தையாக கருதுவதால், மேலை நாடுகள் இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட தயங்குகின்றன.

ஆகவே, ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமானவர்களை வரும் மக்களவைத் தேர்தலில் தோற்கடிப்பது அவசியம். அப்போதுதான் எதிர்காலத்தில் உலகத் தமிழர்களைப் பாதுகாக்க முடியும் என்றார்.

இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநிலக் குழு உறுப்பினர் ஆ.மதுரைவீரன் தலைமை வகித்தார். மதிமுக மாநிலத் துணைப் பொதுச் செயலர் எ.மல்லை சத்யா, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தியாகு, மக்கள் கூட்டமைப்பு சுகுமாரன் மற்றும் மீ.தா.பாண்டியன், மரண தண்டனைக்கெதிரான கூட்டமைப்பு அற்புதம்மாள், விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார், மனித உரிமைக்கான மக்கள் இயக்க ஆலோசகர் ஹென்றி திபேன் மற்றும் மாநில அமைப்பாளர் இசக்கிமுத்து, கருப்பசாமி, வழக்குரைஞர் மீ.ப.மோகன், செல்வ மனோகரன் உள்ளிட்டோர் பேசினர். மனித உரிமை இயக்க ஜோஸ்பின் மேரி வரவேற்றார்.

மதிமுக மாநகர் செயலர் புதூர் மு.பூமிநாதன், மகபூப்ஜான், மனித உரிமைகள் இயக்க எம்.ஜே.பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.                                      

செய்தி : தினமணி


1 comments:

  1. Nice Post Wish you all the best by http://wintvindia.com/

    ReplyDelete

Kindly post a comment.