Sunday, December 1, 2013

டி.வி. நிகழ்ச்சிகளை முறைப்படுத்த உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்


தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீது பதிலளிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், மத்திய சட்ட அமைச்சகம், இந்திய பிரஸ் கவுன்சில், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தொலைக்காட்சி கட்டுபாட்டு தனியார் அமைப்புகள் ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இது தொடர்பான பொது நல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு மேற்கண்ட உத்தரவை வெள்ளிக்கிழமை பிற்பித்தது.

இது தொடர்பாக ஹிந்து ஜாக்ரிதி சமிதி' என்ற தொண்டு நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவின் விவரம்:

பத்திரிகைகளைக் கட்டுப்படுத்த இந்திய பிரஸ் கவுன்சில் இருப்பதைப் போல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முறைப்படுத்த எந்த ஒரு அரசுத் துறையும் இல்லை. திரைப்படங்களைத் தணிக்கை செய்ய தணிக்கைக் குழு இருப்பதைப் போல ஒலி, ஒளி சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தணிக்கை செய்ய எந்த அமைப்பும் இல்லை.

ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவிக்கும் இணையதளங்களை உடனடியாக தடை செய்வதைப்போல், டி.வி. நிகழ்ச்சிகளுக்கு உடனடி தடை விதிக்க மத்திய அரசிடம் போதிய சட்டம் இல்லை.

இதுபோன்ற நிகழ்ச்சிகளை வெளியிடும் டி.வி. சேனல்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் அலட்சியப் போக்கால் நிகழ்ச்சிகள் வரம்புகளை மீறுகின்றன. அதன் காரணமாக ஆதரவான செய்திகள் வெளியிட பணம் பெறும் நிகழ்வுகளும் (பெய்டு நியூஸ்), மிரட்டிப் பணம் பெறும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.

மூட நம்பிக்கை, தவறான வழிகாட்டுதல்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

அவற்றைக் கண்காணித்து முறைப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.                                                          

நன்றி ;- தினமணி ,  30 - 11 - 2013                        

0 comments:

Post a Comment

Kindly post a comment.