Sunday, December 1, 2013

சூரிய ஒளியில் இயங்கும் புதிய கலங்கரை விளக்கம்

புதிய கலங்கரை விளக்கத்தை ரிமோட் மூலம் தொடங்கி வைக்கிறார் அமைச்சர் ஜி.கே.வாசன்.
    
காஞ்சிபுரம் மாவட்டம் கடப்பாக்கத்தில் சூரிய ஒளியில் இயங்கும் புதிய கலங்கரை விளக்கத்தை மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

கலங்கரை விளக்கங்கள் மற்றும் விளக்குக் கலங்கள் இயக்குநரகம் சார்பில், செய்யூர் தாலூகாவுக்கு உட்பட்ட கடப்பாக்கம் ஊராட்சியில் ரூ.2.40 கோடி மதிப்பில் 30 மீட்டர் (100 அடி) உயரத்தில் சூரிய ஒளியில் இயங்கும் புதிய கலங்கரை விளக்கம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. அதன் கட்டுமானப் பணிகள் இந்தாண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்தன. இடைப்பட்ட மாதங்களில் சுற்றுச்சுவர், துணைக் கட்டடம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

24-வது கலங்கரை விளக்கம்: இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்ததையொட்டி புதிய கலங்கரை விளக்கத்தை மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் சனிக்கிழமை திறந்து வைத்து பேசியது: இந்திய நீர் வழித்தடங்களில் செல்லும் கப்பல்கள் மற்றும் படகுகளின் பாதுகாப்புக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக 64 ரேடார் மையங்களையும், 25 ஆழ்கடல் மற்றும் கடல் பாறை குறிக்கும் தடங்களையும் இத் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கடப்பாக்கத்தில் இப்போது தொடங்கி வைக்கப்பட்டிருப்பது இந்தியாவின் 186-வது மற்றும் தமிழகத்தின் 24-வது கலங்கரை விளக்கம் ஆகும். மாலை 5.45 மணி முதல் காலை 6.45 மணி வரை தினமும் 13 மணி நேரம் சுழலும் இந்த விளக்கு 20 நொடிகளில் 3 முறை ஒளிரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி மட்டுமின்றி புயல், மழை உள்ளிட்ட காலங்களில் டீசல் மூலமாகவும் இயக்க முடியும்.

சிறுதுறைமுகம் அமைக்க... 20 கடல் மைல் (37 கிலோ மீட்டர்) தொலைவுக்கு அப்பால் வரும் கப்பல்கள் மற்றும் படகுகளுக்கு இரவு நேரத்தில் சரியான திசையை அறிய இது உதவுகிறது. இதன் மூலம் கல்பாக்கம்-மரக்காணம் கடற்கரை பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மீனவர்கள் பயன்பெறுவார்கள். பார்வையாளர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மற்ற இடங்களில் உள்ள கலங்கரை விளக்கங்களில் உள்ளதைப் போலவே சிறுவர்களுக்கு ரூ.5 பெரியவர்களுக்கு ரூ.10 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் இருந்து சரக்குகளை எளிதாக கையாளவும், கடல் வணிகம் மேம்படவும் செய்யூர் பகுதியில் சிறுதுறைமுகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்குரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தால் அதற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளது.

ஜனவரியில் மகாபலிபுரம்: மகாபலிபுரத்தில் உள்ள பாரம்பரிய கலங்கரை விளக்கம் ஜனவரி மாதம் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும். தமிழகத்தின் 25-வது கலங்கரை விளக்கம் தூத்துக்குடி மாவட்டம் வேம்பாறை பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி, ராமேஸ்வரம், முட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள கலங்கரை விளக்கங்கள் சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

காஞ்சிபுரம் எம்.பி. பி.விஸ்வநாதன், கலங்கரை விளக்கங்கள் மற்றும் விளக்குக் கலங்கள் துறையின் தலைமை இயக்குநர் கேப்டன் ஏ.எம்.சூரஜ், சென்னை துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா, எண்ணூர் துறைமுகத் தலைவர் பாஸ்கராச்சார் கடல்சார், பல்கலைக்கழகத் துணை வேந்தர் கேப்டன் பவேஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்வத்துடன் குழந்தைகள்

மெரீனாவில் உள்ளதைப்போல் இங்கு லிப்ட் வசதி இல்லை. எனினும் முதல் நாளில் பார்வையிட இலவச அனுமதி என்பதால் கடப்பாக்கத்தைச் சுற்றியுள்ள ஆலாம்பாறை, பூமிக்குப்பம், ஆலிக்குப்பம், ஜி.டி.குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் 140 படிகளில் விறுவிறுவென ஏறி மேல்தளத்துக்குச் சென்று கடற்கரையின் அழகை ஆர்வமுடன் பார்வையிட்டனர். தூரத்தில் காணப்பட்ட கப்பல்கள் மற்றும் படகுகளை சுட்டிக்காட்டி ஆரவாரம் செய்தனர்.

கலங்கரை விளக்கத்தைப் பார்க்க வந்திருந்த சிறுவர்கள் மணிகண்டன், பிரகாஷ் கூறியது: இதுபோன்ற காட்சியை இதுவரை கண்டதில்லை. கலங்கரை விளக்கத்தின் மேல் இருந்து பார்த்தால் தொலைவில் உள்ள எங்கள் வீடுகள், மற்றும் பள்ளிக்கூடங்களைக் கூட தெளிவாகத் தெரிகிறது. விடுமுறை நாள்களில் அடிக்கடி இங்கே வந்திருந்து பொழுதைக் கழிக்க விரும்புகிறோம் என்றனர்.

நன்றி ;- தினமணி,  01-12-2013                                                                                                           


0 comments:

Post a Comment

Kindly post a comment.