Monday, December 2, 2013

சென்னையில் டிசம்பர் 14, 15-ல் சர்வதேச "ஆட்டிஸம்' கருத்தரங்கம் !

அறிவுத் திறன் குறைபாடு ("ஆட்டிஸம்') குறித்த சர்வதேச கருத்தரங்கம் ஏபிஏ இந்தியா சங்கத்தின் சார்பில் சென்னையில் டிசம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

நான்காவது ஆண்டாக நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹயாட் ரீஜென்ஸி ஹோட்டலில் இந்தக் கருத்தரங்கம் நடைபெறும்.

இது குறித்து ஏபிஏ இந்தியா சங்கத்தின் தென்னிந்திய துணைத் தலைவர் கீதா ஸ்ரீகாந்த் கூறியது:

அறிவுத் திறன் குறைபாட்டால் ("ஆட்டிஸம்') பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எண்ணப் பரிமாற்றம், பொது இடங்களில் நடத்தை போன்றவை சாதாரண மனிதர்களைப் போல இருக்காது. நடத்தையியல் என்பது மனித நடத்தைகளை ஆய்வு செய்யும் ஒரு விஞ்ஞான முறை. எனவே இந்த முறை மூலம் "ஆட்டிஸம்' பாதித்த மாணவர்களை பராமரிப்பது குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் அமெரிக்காவைச் சேர்ந்த நான்கு சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு அறிவுத் திறன் குறைபாடு குறித்துப்

பேச உள்ளனர்.

இந்தியாவிலுள்ள நடத்தையியல் நிபுணர்கள் (ஆங்ட்ஹஸ்ண்ர்ன்ழ்ஹப் அய்ஹப்ஹ்ள்ற்ள்) 10-க்கும் மேற்பட்டோர் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் கருத்தரங்கின் ஒரு பகுதியாக அறிவுத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளைப் பராமரிப்பது குறித்து ஐந்து பயிலரங்கங்கள் நடைபெறவுள்ளன.

ஒரு குழந்தைக்கு ஆட்டிஸம் பாதிப்பு இருப்பதை பெற்றோர் கண்டுபிடித்தவுடன், அவர்கள் எவ்வாறு குழந்தைகளைக் கையாள வேண்டும் என்பது குறித்து பயிலரங்கத்தில் விளக்கமளிக்கப்படும்.

அறிவுத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அடிப்படை பழக்கவழக்கங்கள் என்னென்ன, பொது இடங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், கழிவறையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பயிலரங்கங்கள் நடைபெறும்.

இந்தப் பயிலரங்கங்களில் கலந்து கொள்ளும் பெற்றோர் கருத்தரங்கம் முடிந்து வீடு திரும்பியவுடன், தங்கள் குழந்தைகளுக்கு ஏதோ ஒரு பழக்கத்தை உரிய முறையில் கற்றுக் கொடுக்க முடியும். ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளையும் எளிதாகக் கையாள முடியும் என்ற தன்னம்பிக்கை அவர்களுக்கு இதன் மூலம் ஏற்படும்.

கருத்தரங்கத்தில் கலந்து கொள்பவர்களுக்கு செயல்முறை விளங்கங்களும் கற்றுக் கொடுக்கப்படும். சுமார் 200 பேர் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெற்றோர், அறிவுத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளை பராமரிப்போர், ஆசிரியர்கள் என அனைவரும் இதில் பங்கேற்கலாம். கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 044-42862221 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.                                                                                   

தினமணி, 02-12-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.