தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே 59 கிராம் தங்க நகைகள் அடங்கிய செப்புத் தாழி சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
அம்மாபேட்டை ஒன்றியம், திருபுவனம் ஊராட்சி மேலதிருபுவனம் தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் கிருபானந்தம் (45). இவருக்கு சொந்தமான இடத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பண்ணை குட்டை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
சனிக்கிழமை காலை கடப்பாறையால் மண்ணைத் தோண்டியபோது, சிறிய அளவிலான செப்புத் தாழி கண்டெடுக்கப்பட்டது.
தாழியைத் திறந்து பார்த்த போது, அதனுள் பழங்கால இரட்டை வட தாலி கொடி ஒன்று, 2 காசுகள், 2 தோடுகள், 2 ஒட்டியாணம் உள்ளிட்ட 59 கிராம் எடையுள்ள தங்க நகைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ. 1.60 லட்சம் என கூறப்படுகிறது. இந்த நகைககள் அம்மனுக்கு அணிவிக்கும் நகைகள் எனத் தெரியவருகிறது.
இதுகுறித்து ஊராட்சித் தலைவர் பூங்குழலி மாணிக்கம், கிராம நிர்வாக அதிகாரி பத்மநாபன் உள்ளிட்டோர் அளித்த தகவலின் பேரில், பாபநாசம் வட்டாட்சியர் அருண்மொழி புதையலை கைப்பற்றினார். இதுகுறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தினமணி, 01-12-2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.